Advertisement

அன்பு மொழியின் ரகசியம்... எழுத்தாளர் வண்ணதாசனின் எண்ணங்கள்

"புதிதாக எழுத வருபவர்கள் வண்ணதாசனை படிக்க வேண்டும்'- என்றார் சுஜாதா. சிறுகதைகளில் "வண்ணதாசன்', கவிதைகளில் "கல்யாண்ஜி'யாக அறியப்பட்ட கல்யாணசுந்தரம் எளிய, யதார்த்த மனிதர். திருநெல்வேலிக்காரர். நவீன தமிழ் சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.


சாகித்ய அகாடமி விருதுபெற்ற மூத்த இலக்கியவாதி தி.க.சிவசங்கரனின் மகன். இவரது கவிதை, சிறுகதைகளில் அன்பு இழையோடும்.


"பாசாங்கற்ற, வலிந்து மேற்கொள்ளாத, இயல்பான எந்த நட்பும், எந்த காதலும், எந்த காமமும் சம்பந்தப்பட்டவர்களை மேலும் அழகாக்கும். எல்லா மனிதனும், மனுஷியும் அழகாக இருக்கும்போது, இந்த வாழ்வும், உலகமும் மேலும் அழகுறும்,' என்பவர்.


அவருடன் ஒரு நேர்காணல்


இலக்கிய உலகிற்கு பங்களிப்பு போதும் என திருப்தியா?


எந்த காலகட்டத்திலும் படைப்பாளியால், போதும் என திருப்தியடைய முடியாது. நேற்று எழுதிய கவிதை, கதையைவிட இன்று எழுதுவது சிறப்பாக இருக்க வேண்டும் என நினைப்பேன். நேற்று நடந்ததை, ஒரு தலைமுறைக்கு ஏற்பட்ட பாதிப்பை, அடுத்த தலைமுறைக்கு கொண்டு சொல்ல, எழுத தூண்டுகோல் இருந்துகொண்டே இருக்கும்.


எதிரிகள் கூட நேசிக்கும் உங்கள் படைப்பு; அந்த எழுத்துக்கள் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தியதாக உணர்கிறீர்களா?


குடும்பம், சகமனிதர்கள் மூலம் கிடைத்த அன்பை வெளிப்படுத்துகிறேன். அன்பிற்கு இலக்கணம் சொல்ல முடியாது. என்னை சந்திப்பவர்கள், எனது அன்பை பரிபூர்ணமாக உணர்ந்து, அதை திருப்பித் தரும்போது உணர்கிறேன்.


நீங்கள் எழுதத் துவங்கிய காலகட்டத்திற்கும், தற்போது புதிய எழுத்தாளர்களின் படைப்புக்கும் வேறுபாடு?


எங்கள் எழுத்துக்களில் 1970, 80 கால வாழ்க்கையை வெளிப்படுத்தினோம். தற்போது நகரம் சாராத, கிராமங்களிலிருந்து படைப்பாளிகள் வருகின்றனர். அசலான வாழ்க்கையை, தனது குரலை வெளிப்படுத்துவது நல்லதாக உள்ளது. பழைய கதை, புதிய கதைகளுக்கு வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். இது காலத்தின் போக்குகளில் நடக்கிற விஷயம்.


நவீன எழுத்தாளர்கள் சிலர் அந்தரங்கம், பாலியல் இச்சைகளை கவிதைகளில் வெளிப்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளதே?


பெண்களின் பாலியல் சார்ந்ததை சொல்ல நினைக்கின்றனர். உடல் அரசியலை அதிர்வுக்காக பேசுகின்றனர். அது கலகம். ஒரு காலகட்டத்தில் அக்குரல் தானாக, நிச்சயமாக அடங்கிவிடும். சில பெண்ணிய எழுத்தாளர்கள், உடல்சாராத பெண் குரலை எழுப்புகின்றனர்.


நீங்கள் சமகால பிரச்னைகளை தொடுவதில்லை ஏன்?


பிரச்னைகளை தொடாமல் இருக்கலாம்; விலக்கி வைக்கவில்லை. பிரச்னைகளை அறியாதவனல்ல; பாதிக்கப்படாதவன் அல்ல நான். தாமிரபரணி ஆற்றில் நிகழ்ந்த துயர சம்பவத்தின்போது, அங்கு நான் இருந்திருந்தால் எழுதியிருப்பேன்.


புதிதாக எழுத வருகிறவர்களுக்கு அறிவுரை?


மனிதர்கள், வாழ்வியல் உண்மைகளை இலக்கியத்தில் பதிவு செய்யும்போது, பாசாங்கு இல்லாமல் இருக்க வேண்டும்.


சிலர் சினிமாவை இலக்காகக் கொண்டு எழுதத்துவங்குகின்றனர். உங்களுக்கு சினிமா வாய்ப்பு வந்ததா?


வந்தது. எனது மன உலகில் ஆர்வம் இல்லை. ஆசைப்பட்டதும் இல்லை.


புத்தகத் திருவிழாக்களில் கூட்டம் கூடும் அளவிற்கு, வாசிப்பு அதிகரித்துள்ளதா?


எனது எழுத்துக்கள், தற்போது மூன்றாவது தலைமுறை இளைஞர்களிடம் சேர்ந்துள்ளது. அன்பை பிரசாரம் செய்கிறீர்களே ஏன்? என கேட்கின்றனர். ஐ.டி.,இளைஞர்களிடம்,"எனது புத்தகங்களை ஏன் வாங்குகிறீர்கள்?,' என்றேன். இப்போது அன்பு தேவை என்கின்றனர். 1970களைவிட, தற்போது வாசகர்கள் அதிகம்.


உங்கள் தந்தையின் ஒத்துழைப்பு எப்படி?


ஒவ்வொரு கட்டத்திலும் எப்படி எழுத வேண்டும் என மற்றவர்களை ஊக்குவிப்பதுபோல், என்னையும் ஊக்குவிக்கிறார் என்றார்.


இவரது அன்பு மொழி கேட்க: 99944-31085.


- பாரதி


Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Lingadurai - chennai,இந்தியா

    "அகம் புறம்" - படிக்கும்போதெல்லாம் இயற்கையோடு ஒன்றிய வாழ்வினை மனதில் பதிவாக்கும்...தங்களது நல்ல படைப்புக்கு நன்றி,, - லிங்கதுரை.பா (ஸ்ரீ ரெகுநாதபுரம்)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement