Advertisement

உரத்த சிந்தனை: காதல் வியாபாரிகள் : - ஆர். ஆஞ்சலா ராஜம் - சமூக நலவிரும்பி

"சினிமாக் காரனுக்கு ஒரு கதை,
அரசியல்வாதிக்கு ஒரு சில ஓட்டு
குடும்பத்தாருக்கு கவுரவம்
மீடியாக்களுக்கு செய்தி
வக்கீலுக்கு பீசு
கோர்ட்டுக்கு வழக்கு...
இதுவும் கடந்து போகும்...'
- இது, தமிழகமே திரும்பிப் பார்த்த, இளவரசன் - திவ்யாவின் காதல், பிரிவு குறித்து, வலைதளம் ஒன்றில், வாசகர் ஒருவர் எழுதிய, "கமென்ட்!'தமிழகத்தில் இதற்கு முன், வேறுபட்ட ஜாதிப் பிரிவினர், திருமணம் செய்து கொண்டதே இல்லையா என்று எண்ணும் வகையில், அப்பப்பா, எத்தனை ஆர்ப்பாட்டங்கள், அடிதடிகள், விவாதங்கள்...!

"ஈரை பேனாக்கி; பேனை பெருமாளாக்கி' என, சொல்வார்களே, அதில், அரசியல் தொழில் செய்வோர் கை தேர்ந்தவர்கள்; இல்லாவிட்டால், தம் சுயநலத்திற்காக, தமிழகத்தில் எங்கோ ஒரு மூலையில், யாருக்கும் அறிமுகமே இல்லாமல் இருந்த, கிராமத்து திவ்யாவையும், இளவரசனையும், இத்தனை பிரபலமாக்கி இருக்க முடியுமா? ஓர் அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையையே, சூனியமாக்கி விட்டனர்; அந்தோ பரிதாபம்...

ஆண்டாள், அரங்கநாதன் மீது கொண்டது போலவோ; மீரா, கண்ணன் மீது கொண்டது போலவோ, இவர்கள் காதல் ஒன்றும், தெய்வீகக் காதல் இல்லை. பருவ வயதில், ஹார்மோன் மாற்றம் காரணமாக ஏற்படக் கூடிய, இனக்கவர்ச்சி தான்; அதைத் தவிர, வேறொன்றுமே இல்லை.அதனால் தான், இரண்டரை மணி நேரத்தில் முடியும் தமிழ் சினிமா போல, சில மாதங்களிலேயே, "புசுக்' என, முறி(டி)ந்து விட்டது, இந்த, கண்ணாமூச்சிக் காதல்; அதுவும், இரண்டு உயிர்களை காவு வாங்கி விட்டு. இந்த திவ்யாவைப் பற்றி, இனி யாருக்கும் கவலையில்லை; கதையைத் தான் முடித்து விட்டனரே...

திவ்யா மட்டுமல்ல; இவரைப் போலவே, இன்று, தமிழகத்தில் பல வீடுகளிலும் இப்படித் தான்... "நான் அவனை(ள) காதலிக்கிறேன்; அவனை(ள)த் தான் திருமணம் செய்து கொள்வேன்; அவன்(ள்) இல்லாவிட்டால், என்னால் உயிரோடு இருக்க முடியாது!' - இந்த பதில் தான், பல இளைஞர்கள், இளம்பெண்களிடம் இருந்து, பெற்றோருக்கு கிடைக்கிறது.
அந்த அளவிற்கு, "காதல் காதல் காதல்' என, பல இளைஞர்களும், இளம் பெண்களும், காதல் ஜுரத்தால் கபளீகரம் செய்யப்படுகின்றனர். இந்தக் காதல் வைரசை, இளைஞர்கள் மத்தியில் பரவ விட்டு, புண்ணியம் தேடிக் கொண்டதில், முக்கிய இடத்தை பிடிப்பவர்கள், நம், "பெருமை மிகு' சினிமாக்காரர்கள்.

கல்லூரியில் காலடி வைத்ததுமே, அவனுக்கு காதல் வர வேண்டும்; கடற்கரையில், கண்கள் செருக இருக்கும் காதலியுடன், அவன் கைகோர்த்து, சல்லாபம் செய்ய வேண்டும் என்ற, எழுதப்படாத சட்டத்தை, தம், "கலைத் திறமை' மூலம், இளைஞர்கள் மனதில் விதைத்து விட்டனர். இதன் தாக்கம் தான், திவ்யா - இளவரசன் காதலும்.தான் எடுக்கும் முடிவு சரியா, தவறா என்று கூட தெரியாமல், உணர்ச்சி வேகத்தில், எல்லா முடிவுகளையுமே எடுத்து, இளவரசன் போய் சேர்ந்து விட்டான். ஆனால், மகனை இழந்து தவிக்கும் அந்த பெற்றோரின் வேதனையை, வார்த்தைகளில் சொல்ல முடியாது."தான் ஆடாவிட்டாலும், தன் தசை ஆடும்' என்பரே; தம் பிள்ளைகளுக்காக, எல்லாவற்றையுமே தியாகம் செய்து வாழ்பவர்கள் தானே, பெற்றோர். தாங்கள் உண்ணாத உணவையும்; தாங்கள் கற்காத கல்வியையும், தம் பிள்ளைகளுக்குக் கொடுத்து, அவர்கள் மகிழ்வதைப் பார்த்து, ஆனந்தப்படுபவர்கள் அல்லவா!

இத்தனை பாசத்தையும் புறந்தள்ளிவிட்டு தான், தன் நிலை மறந்து, "காதல்' எனும் மாயையின் பின், இளைஞர்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு சமீபத்திய உதாரணம், இயக்குனர் சேரனும், அவரது மகள் தாமினியும்.எங்கே, தன் அருமை மகள், தன் தலையில், தானே மண்ணை வாரி போட்டு, அவளின் வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்வாளோ என, தந்தைக்கே உரிய பாசத்தில், பரிதவித்துக் கொண்டிருக்கிறார் சேரன். தன் மகள் போகும் பாதை சரியில்லை என்பதை அறிந்த, பொறுப்புள்ள எந்த தந்தை கவலைப்படாமல் இருப்பார்? எனவே, சேரனின் கவலை, கண்ணீர் எல்லாமே நியாயமானது தான்.ஆனால், சேரனை, ஒரு தந்தையாக மட்டும் நாம் பார்க்க முடியாது. அவர் ஒரு, பிரபல இயக்குனரும் கூட. பெயர் சொல்லும் விதத்தில், படங்கள் எடுத்தவர். சென்னை கலெக்டர் யார் என, கேட்டால், சென்னை வாழ் மக்களுக்குக் கூட தெரியாது. ஆனால், சேரன் யார் என்று, கேட்டு முடிப்பதற்குள், விடை கிடைத்திருக்கும். சினிமாவின் மவுசு அப்படி.

மற்ற பல இயக்குனர்களைப் போல, ஆபாசத்தையும், அசிங்கத்தையும் அள்ளித் தெளித்து, இவற்றை மட்டுமே கதையாக்கி, காசு பார்ப்பவர் அல்ல சேரன். ஆனாலும், காய்கறிக் கடையில் கத்திரிக்காய் விற்பது போல, சினிமா சந்தையில், காதலை வைத்து வியாபாரம் செய்யும், இவரும் காதல் வியாபாரி தானே..."தாமினியின் காதலன் சந்துரு நல்லவனில்லை' என்று, இவருக்காக, வரிந்து கட்டி, வக்காலத்து வாங்கும் சினிமாக்காரர்களுக்கு, இங்கே ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்...நல்ல சிந்தனைகள் எவ்வளவோ இருக்க, காசுக்காக, காதல், வன்முறை, தகாத உறவு, குடி, கூத்து என்று, சமூகத்திற்கு ஒவ்வாதவற்றை எல்லாம், கதையில் காட்டி, இவற்றை, கட்டவிழ்த்து விடுவது நீங்கள் தானே...தமிழ்ப் படங்களில், குடிக்காரனை, பொறுக்கியை, வெட்டி ஆபீசரைக் கூட, கதாநாயகி, இப்படித் தானே விரட்டி விரட்டி காதலிப்பாள்; பெற்றோரை தவிக்க விட்டு, இதுபோலத் தானே ஓடிப் போவாள்; குடும்பத்தினருக்கு எதிராக கிளர்ந்தெழுவாள்!

அதைத் தானே, நீங்கள் உங்கள் படைப்புகள் மூலம், இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்தீர்கள்... "கலெக்டர் மகளுக்கு கார் டிரைவருடன் காதல்; போலீஸ் அதிகாரி மகளுக்கு பொறுக்கியுடன் காதல்; ஐ.ஏ.எஸ்., அதிகாரி மகளுக்கு ரவுடியுடன் காதல்' என்று, லவ்வு லவ்வா, "பிலிம்' காட்டி, இந்தக் கண்றாவிக்கு, அக்மார்க் முத்திரை பதித்த, "லவ் ஸ்டோரி' என்று, நாமம் தரித்ததும், நீங்கள் தானே...உங்களின், இப்படிப்பட்ட படங்களை எல்லாம், பார்த்து வ(ள)ருபவர்களிடம், இதைத் தவிர, வேறு எதை எதிர்பார்க்க முடியும்? தாமினியும், உங்கள், "கலைத் திறமை'யை பார்த்து வளர்ந்த பெண் தானே; அதனால் தான், "செவிடன் காதில் ஊதிய சங்கு போல்' எத்தனை பேர் எடுத்து சொன்னாலும், "நான் காதலனுடன் தான் செல்வேன்' என்று, அடம் பிடித்துக் கொண்டிருக்கிறாள். இந்த,"டிரெயினிங்' உங்களுடையது தான்.

இந்தப் பெண்ணுக்காக வக்காலத்து வாங்குகிறீர்களே... உங்கள் படங்களைப் பார்த்து, இதுவரை, எத்தனை தாமினிக்கள், தங்கள் வாழ்க்கையை சூனியமாக்கிக் கொண்டிருப்பர்... சமுதாயத்தைக் குறித்து, கொஞ்சமாவது அக்கறை இருக்க வேண்டாமா?உங்களை மட்டும் சொல்லி குற்றமில்லை; பொறுப்பு இருக்க வேண்டியவர்களுக்கே இல்லையே...சமுதாயத்தை காப்பதாகச் சொல்லி, உப்பு சப்பில்லாத, எது எதற்கோ வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்பவர்களில் கூட, ஒருவரும், இளைஞர்களை, தன் ஆக்டோபஸ் கரங்களால், இறுக்கிப் பிடித்து, பாழாக்கிக் கொண்டிருக்கும், சினிமாவிற்கு எதிராக குரல் கொடுக்கவில்லையே...

அவ்வளவு ஏன், திவ்யாவிற்கும், தாமினிக்கும் தற்போது, "கவுன்சிலிங்' கொடுக்கும் நீதிமன்றம் கூட, சமூகத்திற்கு கேடு விளைவிக்கும், கலாசாரத்தை காணாமல் பண்ணும் இது போன்ற திரைப்படங்களுக்கு, தாமாகவே முன்வந்து தடைவிதிப்பதில்லையே...இது ஒருபுறம் என்றால், மற்றொரு பக்கம், "முற்போக்குவாதிகள்' என்று, தங்களை சொல்லிக் கொள்ளும் ஒரு சிலர், "காதல்' என்று சொன்னாலே, அதற்கு, கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு தெரிவித்து, தங்கள் கருத்துகளை, பகிர்ந்து கொள்கின்றனர்.

எது காதல்? பெற்றோரை கதற வைத்து, காதலனை கரம் பிடிப்பதா... உங்கள் கருத்துகளை, தங்களிடம் ஆலோசனை கேட்பவர்களுக்கு மட்டும் கூறி, இப்படி எதற்கெடுத்தாலும், கருத்து தெரிவித்து, குட்டையை குழப்பாமல் இருக்கலாமே.
மேஜராக இருந்தால், சுயமாக முடிவு எடுக்கலாம்; சட்டம் இப்படித் தான் சொல்கிறது. அது தவறாக இருந்தாலும் பரவாயில்லையா... நம்மில் எத்தனை பேருக்கு, 18 வயது ஆனதும், எல்லாவற்றிலும் தெளிவான முடிவு எடுக்கக் கூடிய, பக்குவம் வருகிறது? வயது, 20 ஆகியும் கூட, தன் காதலன் நல்லவன் இல்லை என்று தெரிந்தும் கூட, "நான் அவனுடன் தான் செல்வேன்' என்று சொல்லும், தாமினி போன்றவர்கள், எத்தனை பக்குவப்பட்டவர்கள் என்பதை சொல்லியா தெரிய வேண்டும்.விவாகரத்து குறித்து, பொதுவாக பேசும் போது, "நீதிமன்றத்தால், இரண்டு பேரை பிரிக்கத் தான் முடியுமே தவிர, சேர்த்து வைக்க முடியாது' என்று, கூறுவதுண்டு. ஆனால், இங்கே, தாமினியின் காதலன் கெட்டவன் என்று நிரூபித்தாலும், தாமினியிடமிருந்து, அவள் விரும்பாமல், நீதிமன்றத்தால், சந்துருவை பிரிக்க முடியாதே...என்ன சட்டமோ... என்ன நீதியோ... சீக்கிரம் விரைந்து வந்து, யாராவது தீர்வு காணுங்களேன்... ஒன்றுமே புரியவில்லை.
Email: anjalarajamgmail.com
Advertisement
 

வாசகர் கருத்து (13)

 • Nanpan - Pollachi,இந்தியா

  மாற்றுப் பாலினத்தவர் இருவர் ஒரு கானல் நீரை நோக்கிப் பயணிப்பதை நம்ம ஊரு செர்திருத்தச் செம்மல்கலேல்லாம் ஆ.ஊ..என்று புகழ்ந்து குதிக்கும் பொது காலத்துக்குத் தேவையான உண்மையான கருத்தைச் சொல்லியதற்கு உண்மையிலேயே துணிச்சலும் திறமையும் வேண்டும். வாழ்த்துக்கள் அம்மையே.

 • KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா

  Thought provoking article... Yet our youngsters are still in dubakoor LOVNET only...

 • Susa Vengat - Chennai,இந்தியா

  உங்கள் 19 வயது மகன் காதலிக்கிறான் என்று தெரிந்தால் எத்தனை பேர் அப்பொழுதே திருமணம் செய்துகொள்ள அனுமதிப்பீர் ...................அனுமதிப்பேன் என்பவர் ஒரு ஸ்டார் கிளிக் செய்யுங்கள் .......அனுமதிக்க மாட்டேன் என்பவர் மூணாவது ஸ்டாரை கிளிக் செய்யுங்கள் ...............

 • Chellappan Krishnagopal - New Delhi,இந்தியா

  காலம் மாறுவதன் அடி சுவடுகளை ப்ரதிபலிப்பதுஅதான் இந்த கலாசார சீரழிவுகள். காதல் பரிணாம வளர்ச்சி , ஆங்காங்கே சில விதி விலக்குகள் இருக்கத்தான் செய்யும். ஒட்டுமொத்தமாய் வரிந்துகட்டி காதலுக்கு போர்க்கொடி தூக்க புறப்பட்டு விடாதிர்கள். காதல் என்பது ஒரு சுகம் அது மனிதனை விலங்கிடமிருந்து வித்யாசபடுதுகிறது . எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவனாவதும் தீயவன் ஆவதும் அவன் வளர்கின்ற இடத்தினிலே. அப்பா அம்மா பார்க்கும் காதல் எல்லாம் வெள்ளி விழா காண்பதுவும் இல்லை எல்லா காதலும் தோற்று விடவும் இல்லை. நாராயண மூர்த்தியின் காதலை அவர் மாமனார் ஐந்து வருடம் வரை ஏற்று கொள்ளவே இல்லை. நாம் தோற்று போன ஒரு சில சரித்திரத்தையும் தரித்திரத்தையும் மட்டுமே ஒப்பாரி வைக்கிறோம். சேரன் தன் படங்களில் சொன்ன காதல் தன் பெண் என்றவுடன் இந்த பழம் புளிக்கிறதோ. ஊருக்கு தான் உபதேசம் . என்னோட அப்பா +2 ல நான் பள்ளியில் படிக்கும்போது பள்ளி செல்லாததுகு பொய் சொன்ன பொது என்னிடம் சொன்னது, நீ தோளுக்கு மிஞ்சிட்ட நீ என்னோட தோழன் நீ போற பாதை உனக்கு நல்லா தெரியும் , அப்படி நீ போறது தப்பா இருந்தா அதை உணர்ந்தது திரும்பி வந்து நல்ல வழியில் போவதற்குள் நீ சொற்ப காலத்தை இழந்திருப்பாய். காதல் வெறிகொண்டு நான் இழந்த காலம் 15 வருடம் . ஒரு முறை தான் பூக்கும் என்ற பாலகுமாரன் ஆனால் செடி உள்ள வரை பூக்கும் என பலமுறை காதலில் ஏமாற்றப்பட்டேன். தற்கொலைக்கு செல்லவில்லை, தவிக்கவிட்டுப்போனவலை வசை பாடவும் இல்லை, எனக்கும் வாழ்க்கை உண்டு என 33 வயதில் உணர்ந்து திருமணம் செய்து , என் மனைவிக்கு ராமனாக 2000 கம் தள்ளி வாழ்ந்தாலும் எங்கள் காதல் இன்றும் முதல் காதல் தான். வாழ்க்கை எனக்கு எல்லா சன்தொஷதியும் கொடுத்திருக்கு. ஆகவே , தயவு செய்து காதலுக்கு சங்கு ஊததிர்கள். நீங்கள் சொல்வதெல்லாம் விதிவிலக்கு. ஆகவே காதல் செய்வீர்

 • baskaran - vellore,இந்தியா

  நல்ல சிந்தனை.முற்போக்குவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் ஒருசில பிற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் காதலுக்கு கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவிக்கிறார்கள்.அவர்கள் எப்போது திருந்தப்போகிரார்கள்.அப்படியே ஆதரவு தெரிவிக்கும் அவர்கள் வீட்டில் இதுபோன்று ஒரு நிகழ்வு நடந்தால் ஆதரிப்பார்களா.ஆதரவு தெரிவிக்கும் அதே நேரத்தில் அந்த காதல் தம்பதிகளுக்கு வேலை வாய்ப்போ அல்லது இருக்க இருப்பிட வசதியோ அல்லது பொருளாதார வசதியோ அவர்களால் செய்து தரமுடியுமா? அப்படி கேட்கும் பட்சத்தில் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.எனவே காதலுக்கு கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவிப்பதை விடுத்து நல்ல எண்ணங்களை அவர்கள் மனதில் விதைக்க முற்போக்கு வாதிகளே.

 • Nanpan - Pollachi,இந்தியா

  சரியான நேரத்தில் மிகச் சரியான சிந்தனை . வாழ்த்துகிறேன் அம்மையே.

 • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

  விஜய் படங்களை தடை செய்து விட்டால் பாதி தொந்தரவு குறையும்..

 • KG Manoharan - Sankari West,இந்தியா

  தமிழர்களின் வாழ்க்கை முறைகளை இந்த சினிமாகாரர்கள் முற்றிலுமாக மாற்றிவிட்டார்கள். இன்றைய இளைஞர்களுக்கு நிழல் வேறு நிஜம் வேறு என்பது புரிவதில்லை. சேரன் போன்ற சினிமாகாரர்களுக்கு இப்போது புரிந்திருக்கும். உணர்வுகளை வைத்து காசு பண்ணுவது தவறு என்று. தன் வினை தன்னை சுட்டுவிட்டது.

 • என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா

  சரியான செருப்படி கேள்விகள், சினிமாவினை மாத்திரம் கேட்டிருப்பது கண்ணை உறுத்துகிறது, மீடியா எனப்படும் ஒரு உறுத்தல் மையம் உங்கள் கண்களுக்கு தெரிய வில்லையா?

 • தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா

  காதலுக்கு காரணம் சினிமா என்றால் .. இளம் குழந்தைகளுடன் சினிமா பார்க்கும் பெற்றோர்களிடமும் தவறு உள்ளது. எந்த வளர்ந்த நாட்டிலும் குழந்தைகளுடன் இதுபோன்ற சினிமா பார்க்க மாட்டார்கள். அவரவர் நல்லது எது கேட்டது எது என்று பார்க்காமல் தொழில் என்ற போர்வையில் சம்பாதிக்கின்றனர். நாம்தான் அதை தரம் பிரித்து அனுமதிக்க வேண்டும். சினிமாவும் ஒருவகையில் சாராயக் கடைபோல. அங்கெல்லாம் நாம் போகக் கூடாது அப்படி போனாலும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு போகக் கூடாது.

 • Ashok Kumar - Saint Louis,கனடா

  idhu kadhara kadhara kaadhal, chei karumam ennaiku indha kodumai vittu pogumoo. Iam not blaming a good movie (good movie is one which is accepted by all people's inner soul). Please should find new way of entertainment with family members and fris other than movies and TV channels. A honest and good magazine and social reformers can suggest. Finally government, officials can't deny their role here. the should enact a strong law on this.

 • p.mohamed rafik,kuruvadi - hafar al batin,இந்தியா

  ஒருவரும் இந்த சினிமாவிற்கு எதிராக குரல் கொடுக்கவில்லையே.என்று சொல்லிருக்கிர்றேர்களே..? சில அமைப்புகள் இந்த சினிமாவிற்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டு இருக்கின்றன.செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இருந்து கொண்டு குற்றங்கள் கண்டு பிடிக்கிறீர்கள்.மதுவிற்கு எதிராகவும் கொடுக்கும் குரல் கேட்கிறதா இல்லியா..?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement