Advertisement

சினிமா வெறும் கூவி விற்கும் வியாபாரம்: விளாசுகிறார் 'மதுரகவி' பேரன் முருகபூபதி

நவீன நாடகத்துறையில் நம்பிக்கையூட்டுபவர்களில், இவர்பிரமாதமான ஆள். அவரின் நாடகத்தை பார்த்த அனைவரும், பாராட்டுகிறார்கள். சாதாரண ஆட்களை வைத்து, சிறந்த நாடகங்களைத் தருகிறார். கொண்டாடப்பட வேண்டியவர் இவர். சென்னையில் நாடகக் குழுக்களில், இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்,'' என்கிறார் "நவீன நாடகத்தின் தந்தை' என போற்றப்படும் "பத்மஸ்ரீ' விருது பெற்ற "கூத்துப்பட்டறை' ந.முத்துச்சாமி.
இப்படி "மோதிரக்கை'யால் குட்டுப்பெற்றவர்; சுதந்திர போராட்ட உணர்வை நாடகக்கலை மூலம் ஊட்டி, சிறைக்கொட்டடி கண்ட மதுரகவி பாஸ்கரதாஸின் பேரன் ச.முருகபூபதி. நாடகக்கலையில் எம்.ஏ.,-பி.எச்.டி.,படித்தவர். பணம் பார்க்கும் நோக்கமின்றி, மக்கள் பிரச்னைகளை பேச வைக்கும் ஆயுதமாக "மணல்மகுடி' நாடக்குழுவை நடத்தி வருகிறார்.


உரையாடல்களை அதிகம் சார்ந்திராமல், நடிகர்களின் உடல்மொழியை அதிகபட்ச தொடர்பு சாதனமாகக்கொண்டு, குறியீடுகள், பழங்குடி இசைக்கருவிகள் வழியாக பார்வையாளர்களுக்கு உணர்த்தி வருகிறார். டில்லி சர்வதேச நாடகவிழாவில் இவரது "செம்மூதாய்', "மிருகவிதூஷகம்' நாடகங்கள் அரங்கேறின.


அதிக சிரமம் கொண்ட நாடகக்கலை, மெனக்கெடல் பற்றி அவரது உள்ளக்கிடக்கையிலிருந்து...,


நாடகத்தின் மீது ஈர்ப்பு வந்தது எப்படி?


நான் பிறந்த கோவில்பட்டி பொட்டலில், சர்க்கஸ் போடுவர். அதில் கோமாளி வேடம் எனக்கு பிடித்தது. ஒரு காட்சிக்கும், மற்றொரு காட்சிக்குமான இடைவெளியை நிரப்பி, ரசிகர்களை தக்கவைப்பவர் கோமாளி. அவருடன் சிநேகம் கொண்டேன். அவர் நினைவுப் பரிசாக "மவுத் ஆர்கான்' கொடுத்தார். அதைக்கொண்டு நண்பர்களுடன் நாடகக்குழுவை துவங்கினேன். தெருமுனையில் நாடகம் போடுவோம்.


தேரிக்காட்டை ஒத்திகைக்கு தேர்வு செய்தது பற்றி...,


சங்கரதாஸ் சுவாமி நாடக்குழுவில் இருந்த நடிகர் மாரியப்பசுவாமி, பாடல்களால் சுதந்திர போராட்ட உணர்வை ஊட்டியவர். அவருக்கு பிரிட்டிஷ் அரசு நெருக்கடி தந்தது. அவர், இந்த நாக்கு இருப்பதால்தானே நம்மை துன்புறுத்துகின்றனர் என வெறுத்து"நெருப்போடு பேச அழைக்கிறான் நாவை அறுத்த ஸ்திரிமுக நடிகன்...,' என பாடியவாறு, தனது நாவை அறுத்து, திருச்செந்தூர் முருகன் கோயிலில் காணிக்கை செலுத்தினார். அந்நடிகனின் நாவிலிருந்து சிந்திய ரத்தம் போன்ற நிலவியல் அமைப்பு கொண்டது, ராமநாதபுரம் மாவட்ட எல்லையான தங்கம்மாள்புரம் தேரிக்காடு. பெண்களை பற்றி பேசும் "செம்மூதாய்', தமிழ் நாடகக்கலைஞர்கள் பற்றிய "கூந்தல்நகரம்', சமூக, கலாசார அடையாளங்களை மீட்டெடுக்கும் "உதிர முகமூடி' நாடகங்களின் ஒத்திகை, அரங்கேற்றம் அங்கு நடந்தது. ஆதி முதல் சமகால பெண்களின் வலியை அலசும் "சூர்ப்பணங்கு', கலாசார, கொடிவழி உறவை அழிக்கும் யுத்தம் பற்றிய "மிருகவிதூஷகம்' நாடகங்கள் கோவில்பட்டி அருகே குருமலையில் அரங்கேற்றம் நடந்தது.


சினிமா வாய்ப்புகள் வந்ததா?


சினிமாவில் ஆர்வம் இல்லாததால், வாய்ப்பை நிராகரித்துவிட்டேன். ஒரே நேரத்தில் 2 தளங்களில் வேலை செய்ய முடியாது. நாடகங்களில் நடிக்கச் சென்றால், சினிமா வாய்ப்பு வரும் என்ற எண்ணத்துடன் வருகின்றனர். நாடகக்கலையை, சினிமாவிற்கான "விசிட்டிங் கார்டாக' பயன்படுத்துகின்றனர். இது ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை. சினிமா, வெறும் கூவி விற்கும் வியாபாரம். கலைஞனுக்கு தொடர் கற்றல் இருந்தால், பண்பாட்டு பூர்வமிக்க படைப்புகளை முன்வைக்க முடியும். அறிதல் நிற்கும் போது, ஒரு பொருளாக பார்க்கின்றனர். அப்போது சினிமாவிற்கு போகின்றனர்.


பள்ளிக்குழந்தைகளிடையே நாடகம் நடத்துகிறீர்களா?


36 நாடகங்கள் நடத்தியுள்ளேன். 15 கதைகள் வெளியிட்டுள்ளேன். ஜெயிக்க வேண்டும் என்ற உணர்வை மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டுகிறோம். வீட்டில் உரையாடும் பழக்கம் குறைந்துவிட்டது. பேச ஒரு ஆள் கிடைக்கமாட்டாரா? என குழந்தைகள் தேடுகின்றனர். கலாசார குணம் கொண்ட கதைசொல்லிகள், நாடகக் கலைஞர்களை பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமித்தால், குழந்தைகளிடம் பூட்டிக்கிடப்பதை திறக்க முடியும். "குழந்தைகள் கற்பனைத்திறன் அகராதி'யை வெளியிட உள்ளேன்.


உங்களின் அடுத்த நாடகம்?


உள்நாட்டு அகதிகள் பற்றியது. பீகார், சட்டீஸ்கர், ஒடிசா தொழிலாளர்கள் சென்னையில் கழிப்பறைகளில் வசிக்கின்றனர். குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர். பீகாரில் புத்தன் பிறந்தான். இங்கு கழிப்பறைகளில் புத்தன் பிறக்கிறான். இவர்களின் சமூக, பொருளாதார நிலை பற்றி அடுத்த படைப்பு பேசும்.

அனுபவ பகிர்தலுக்கு 9994122398.


- பாரதி

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • P.R.KANDASAAMI - DHAKA,வங்கதேசம்

    He says 100% correct where is BUTHAA

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement