Advertisement

2. கோவையை ஆளப்பிறந்தவர்கள்...!

ஆங்கிலேயர் காலத்திலேயே நகரமாக உருவெடுத்த கோவை நகரம், மாநகராட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது 1981ல்தான்; மாமன்றம் உருவானது 1996ல்தான். தமிழகத்தில் அப்போது, காங்., -அ.தி.மு.க., கூட்டணிக்கு எதிராக, மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானது. அந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் த.மா.கா.வுக்கு கோவை ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட வி.கோபாலகிருஷ்ணன் (வி.ஜி.), கோவையின் முதல் மேயராக பொறுப்பேற்றார். 2001 தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் நின்ற மலரவன் (தற்போதைய கோவை வடக்கு தொகுதி சட்டசபை உறுப்பினர்), மேயரானார். பதவிக்காலம் முடியும் முன்பே, சட்ட சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக, தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
கடந்த 2006ல் தி.மு.க., ஆட்சியின்போது, மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தப்படவில்லை. கோவை மாநகராட்சியில் 63வது வார்டில் போட்டியிட்ட காங்., கவுன்சிலர் வெங்கடாசலத்துக்கு, கூட்டணி ஒதுக்கீட்டில் கோவை மேயராகும் வாய்ப்பு கிடைத்தது. நேரடித் தேர்தலைச் சந்திக்காமல், மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர் மட்டுமே. அவரது காலம் வரையிலும், 105.6 சதுர கி.மீ., பரப்பில் இருந்த கோவை மாநகராட்சி, இப்போது 257 சதுர கி.மீ., பரப்புள்ள மாபெரும் மாநகராட்சியாக விரிவடைந்துள்ளது. இதற்கு முன் 72 வார்டுகள் இருந்தன; இன்றுள்ள வார்டுகளின் எண்ணிக்கை நூறு; பரந்து விரிந்த கோவை மாநகராட்சியை ஆளும் முதல் மேயர் என்ற பெருமைக்குரியவர், அ.தி.மு.க.வைச் சேர்ந்த செ.ம.வேலுச்சாமி.
பட்டைய கிளப்பும் "கிளைமேட்': உலகின் எந்த மூலைக்குப் போனாலும், கோவைக்கு எப்போது ஓடி வருவோம் என்று இந்த மண்ணின் மைந்தர்கள் துடிப்பதற்கு ஒரு முக்கியக் காரணம்...கிளைமேட். கோவையில் பல அரசியல்வாதிகளும், பல மாநில அதிகாரிகளும் ஒரு இடத்தை வாங்கிப் போட வேண்டுமென்று விரும்பி விரும்பியே விலையை ஏத்தி விட்டதற்கும் "ரீசன்', இந்த "சீசன்'தான்.
மேற்குத் தொடர்ச்சி மலையை அண்டிக் கிடக்கும் கோயம்புத்தூர் நகரம், அன்றைய நாட்களில் பெரும் மரங்களைக் கொண்ட காடாகத்தான் இருந்தது. பாலக்காடு கணவாய்க் காற்றும், காடுகளில் இருந்து பரவிய மூலிகைத் தென்றலும் கலந்து, கோவையை பூமியின் சொர்க்கமாக மாற்றியது, இயற்கை இந்த மண்ணுக்குத் தந்த நன்கொடை.
நகர வளர்ச்சியிலே, இன்றைக்கு கோவையின் பெரும் பகுதி கான்கிரீட் காடாக மாறிப்போனாலும், தட்ப வெப்ப நிலையிலே இன்றைக்கும் பெரிய மாற்றமில்லை என்பது ஆச்சரிய முரண்பாடு. ஊர், உலகமெல்லாம் நாற்பது டிகிரியைத் தாண்டி, சூடு பறக்கும்போதும் கோவையில் 35 டிகிரியை வெப்பம் கடக்காது; டிசம்பரிலும் கூட, வசந்தமான ஒரு குளிர், நம்மை வசியப்படுத்தும்.
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிர்ப்பிரதேசங்களுக்கு அடுத்ததாக, தமிழகத்தில் இதமான காலநிலையைக் கொண்ட ஒரே பெருநகரம், கோவைதான். சிறுவாணி நீரின் சுவையும், சீதோஷ்ண நிலையும்தான், கோவைக்கு இயற்கை தந்த இரு பெரும் வரங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement