Advertisement

மருத்துவர்களை உருவாக்கும் மகத்துவ பூமி

இன்றளவும் நமது நாட்டின் மக்கள் தொகைக்குத் தேவையான அளவுக்கு மருத்துவர்கள் இல்லை என்பது வேதனைக்குரிய உண்மை. ஆனால், சுதந்திரத்துக்கு முன்பே, மருத்துவக் கல்வியைக் கற்கும் பாடசாலையைக் கொண்ட பெருமைக்குரியது கோவை நகரம். 1914ல் கோயம்புத்தூர் மருத்துவப் பள்ளி, ஆங்கிலேயர்களால் முதன் முறையாக தோற்றுவிக்கப்பட்டது.
தற்போதுள்ள அரசு கலைக்கல்லூரியில் இந்த பள்ளி துவக்கப்பட்டது; அக்காலத்தில், சதுர வடிவிலான கட்டடத்தில் இந்த மருத்துவப் பள்ளி இயங்கியதாக சரித்திரச்சான்றுகள் சொல்கின்றன. கல் கட்டடம், தேக்கு மரத்தினாலான கதவுகள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அக்கட்டடத்தில், பல ஆண்டுகளாக அந்தப் பள்ளி இயங்கியுள்ளது.
அதன்பின், 1930ல் கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு அந்த மருத்துவப் பள்ளி இடம் மாற்றப்பட்டது; சுதந்திரம் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பின், 1965ல் பக்தவத்சலம் தமிழக முதல்வராக இருந்தபோது, கோவையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை முதன் முறையாக எழுப்பப் பட்டது.
அப்போது நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்கிறார், "ராக்' தலைவர் சி.ஆர்.சுவாமிநாதன்; கோவிந்தராஜூலு நாயுடு, குப்புசாமி நாயுடு அறக்கட்டளை நிர்வாகிகள், அன்றைய முதல்வர் பக்தவத்சலத்தைச் சந்தித்து, கோவையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென்று கோரினர். அதற்கு அவர், "மருத்துவக் கல்லூரி துவக்கும் அளவுக்கு அரசிடம் நிதியில்லை; நீங்கள் நிதியுதவி வழங்கினால் அது பற்றி யோசிக்கலாம்,' என்று கூறி விட்டார்.
பி.எஸ்.ஜி., சன்ஸ் அறக்கட்டளையும், ஜி.குப்புசாமி நாயுடு அறக்கட்டளையும், வேறு சில நபர்களும் சேர்ந்து, தற்போதுள்ள மருத்துவக்கல்லூரிக்கான இடத்தை மிகக்குறைந்த விலைக்குக் கொடுத்தனர்; அத்துடன், 2 அறக்கட்டளைகளின் சார்பிலும், தலா பனிரெண்டரை லட்ச ரூபாய் வீதமாக, 25 லட்ச ரூபாய் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
முதல் தவணையாக, இரண்டரை லட்ச ரூபாய் வீதம், இரு அறக்கட்டளைகளும் சேர்ந்து, 5 லட்ச ரூபாய் கொடுத்தன; நிலம் மற்றும் தொகை வழங்கியதற்காக, இவ்விரு அறக்கட்டளைகளுக்கும் தலா 5 இடங்கள் ஆண்டுதோறும் கொடுப்பதென்றும், இரு அறக்கட்டளைகளின் பெயர்களையும் சேர்த்து அரசு மருத்துவக்கல்லூரி என்று பெயர் வைக்கவும் அரசு தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
மீதித் தொகையைக் கொடுப்பதற்குள், ஆட்சி மாற்றம் வந்தது. தி.மு.க., அரசு பதவியேற்ற பின், அரசே மருத்துவக்கல்லூரியைத் துவக்குவதாக கொள்கை முடிவு எடுக்கப்பட்டது; முந்தைய அரசு தந்த எந்த ஒப்புதலையும் ஏற்கவுமில்லை. அதன்பின்பே, அரசு மருத்துவக் கல்லூரி துவக்கப்பட்டது. முதலில், பி.எஸ்.ஜி.,கலைக்கல்லூரியில்தான் அதன் வகுப்புகள் நடந்தன. இவ்வாறு சி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
பீளமேட்டில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டபோது, அதன் மொத்தப்பரப்பு 153 ஏக்கர்; அதில் ஒரு பகுதியில்தான், 30 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மருத்துவக்கல்லூரிக் கட்டடம் கட்டப்பட்டது; மொத்தம் 400 மாணவர்களுக்கான 3 விடுதிகள் உட்பட, மொத்தக்கட்டடங்களுக்கும் ஆன செலவு ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் மட்டுமே.
இதில் ஒரு பங்கு எடுத்து, 48 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 500 படுக்கை வசதிகள் கொண்ட, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிரதான கட்டடமும் கட்டப்பட்டது. இப்போது இந்த கல்லூரியில், ஆண்டுதோறும் 150 பேர், எம்.பி.பி.எஸ்., படிக்கும் வாய்ப்புப் பெறுகின்றனர்.
எம்.எஸ்.,-எம்.டி.,-டி.சி.எச்., - எம்.சி.எச்.,-டி.ஜி.ஓ., உள்ளிட்ட 16 வகை முதுநிலை பாடப்பிரிவுகளில் ஆண்டுக்கு 60 பேரும் படிக்கின்றனர். அரசு மருத்துவக் கல்லூரி அமைந்துள்ள இதே பீளமேட்டில்தான், தமிழகத்தின் முதல் தனியார் மருத்துவக் கல்லூரியான பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரியும் அமைந்துள்ளது இந்த மண்ணுக்கு இருக்கும் இன்னுமோர் மகத்துவம்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement