Advertisement

விடியும் வரை தாண்டியா

சக்தி இல்லையேல் சிவன் இல்லை! என் ஈசனுக்கு உணர்த்தியவள், அழுத குழந்தைக்கு ஞானப்பால் வழங்கியவள், பக்தனின் துயர் களைய காதணியை வீசி நிலவை உண்டாக்கியவள். அசுரனை அழித்து மகிஷாசூரமர்தினியானவள், அண்டியவருக்கு அருளை வாரி வழங்குபவள்... இத்தனை போற்றுதலுக்கு உரிய அன்னையை, சக்தியை வழிபடும் தினங்களாக அமைந்திருப்பது நவராத்திரி. தென் இந்தியா, வட இந்தியா என்று எல்லா மாநிலங்களிலும் ஆரவாரமாக கொண்டாடப்படம் விழா.
கொலுவில் பொம்மைகளை அடுக்கி, தேவியை வழிபட அக்கம் பக்கத்து பெண்களை அழைத்த, அவர்களை பாடச்சொல்லி, சுண்டல், மஞ்சள், குங்குமம் வழங்கி தென் இந்தியர்கள் நவராத்திரியை கொண்டாடுவது வழக்கம். இதில், ஆண்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்து மகிழ்வர். ஆனால், வட இந்தியாவில் அதிலும் அகமதாபாத்தில் இந்த நவராத்திரியை ஆண்களும், பெண்களும் சேர்ந்து கொண்டாடுகிறார்கள். கார்பா, தாண்டியா ஆட்டங்கள் மூலம் சக்தியை இவர்கள் வணங்கி மகிழும் அழகு இருக்கிறதே! அடடா! வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகள் அவை.
நவராத்திரி கொண்டாட்டத்திற்கான உற்சாகம் இவர்களிடம் ஒரு மாதத்திற்கு முன்னரே எழும்பி விடுகிறது. இரவு எட்டு மணிக்கு தொடங்கி விடியும் வரை தொடரும் கார்பா, தாண்டியா நடனங்களை ஆட உடம்பிற்கு தெம்பு வேண்டுமே! இதனால் நவராத்திரி கொண்டாடப்படும் ஒன்பது நாட்களும் அரிசி, கோதுமை கலக்கப்படாத பெரார் என்று அழைக்கப்படும் உணவையே இவர்கள் உட்கொள்கின்றனர். பழங்களையும், வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கையும் அளவோடு சேர்த்துக் கொள்கின்றனர். இதோடு, உடற்பயிற்சி மையங்களில் சேர்ந்து உடலை ஆரோக்கியமாக தயார்படுத்திக் கொள்கின்றனர்.
நவராத்திரி விழா நடனங்களான கார்பாவையும், தாண்டியாவையும் கற்றுத்தர, இந்த விழாகாலங்களில் தெருவெங்கும் முளைக்கும் பள்ளிகளில் ஒவ்வொரு குஜராத் பிரஜையும் தன்னை இணைத்துக் கொள்கிறார். இந்த நடனங்களின் போது அணிந்து கொள்வதற்காகவே, கண்ணாடி துண்டுகள் பதித்த அழகிய ஆடைகளை தங்களின் விருப்பத்திற்கேற்ப இவர்களே தயாரித்துக் கொள்கிறார்கள். இது தவிர, வண்ண ஆடைகளும், வெள்ளயில் செய்யப்பட்ட ஆபரணங்களும், அழகிய மணிமாலைகளும் இந்த நவராத்திரி நேரத்தில் கடைகளில் விற்பனைக்கு கொட்டி கிடக்கும்.
குஜராத்தி பெண்களும், ஆண்களும் இயற்கையிலேயே அழகிய தோற்றத்தை உடையவர்கள். அதிலும் பெண்கள்... பளபளக்கும் ஆடைகள், நத்து, புல்லாக்கு, நெற்றிச்சூட்டி, ஜிமிக்கி, கண்ணாடி வளையல்கள், மணிகளாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட ஆபரணங்கள் அணிந்து, தெருவில் கும்பல் ம்பலாக கோலாட்டம் ஆடிச்செல்லும் காட்சியை பார்க்கும் பொழுது தேவலோகத்திலிருந்து கன்னிகைகள் கீழே இறங்கி வந்துவிட்டனரோ! என்ற ஐயம் நமக்குள் ஏற்படும். மறுபக்கம், ஜொலிக்கும் தலைப்பாகை சகிதமாக பெண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை! என்று ஆண்களும் தங்களை அலங்கரித்துக்கொண்டு வலம் வருவது கம்பீர அழகு!
கார்பாவுக்காகவும், தாண்டியாவுக்காகவும் தான் இத்தனை ஆர்ப்பாட்டங்களும்! அது என்ன கார்பா நடனம்? துளைகளோடு இருக்கும் அழகிய வேலைப்பாடுள்ள மண்பானைக்குப் பெயர்தான் கார்பா. இந்த பானையின் உள்ளே தீபத்தை ஏற்றி வைத்து பெண்களும், ஆண்களும் சுற்றி நின்று ஆடுவதுதான் கார்பா நடனம். ஆடும் பொழுது துர்கையை போற்றி பாடுகிறார்கள். கார்பாவினுள் இருக்கும் ஜோதி இந்த ஜகத்தில் உள்ள ஜீவராசிகள் அனைத்தையும் காக்கும் சக்தியான துர்கையின் ரூபம் என்பது நம்பிக்கை.
நடன நேரம். தங்களை தயார் செய்து கொண்ட அனைவரும் பெரிய மைதானங்களில் கூடுவர். சிறுமிகள், சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் சிறு, சிறு குழுக்களாகப் பிரிந்து, வட்டவட்டமாக நின்று ஆடுகின்ற அழகு கண்கொள்ளா காட்சி! அதற்கு ஏற்றாற்போல நாட்டுப்புறக் கலைஞர்களின் பாடல்களும், இசையும் அமர்க்களப்படும். மாணவர்கள் தங்களின் கல்வி நிறுவனங்களில் இத்தகைய உற்சாக நடனங்களில் ஈடுபடுகின்றனர்.
இரவு 12 மணியைத் தாண்டும்போது கார்பா ஆட்டத்தின் வேகம் உச்ச நிலையை அடைகிறது. எகிறிக் குதித்து, சுழன்று, இடுப்பை வளைத்து அவர்கள் பம்பரமாய் ஆடும்போது, எங்கிருந்து இவர்களுக்கு இந்த வேகமும், சக்தியும் வருகிறது? என எண்ணத் தோன்றுகிறது. அதே நொடியில், அருள் வழங்கும் துர்கையின் சக்தியும் புரிகிறது. உற்சாகமான இந்த கார்பா ஆட்டம் நிறைவு பெற்றவுடன் ஆடப்படும் கோலாட்டமே தாண்டியா. விடியற்காலை வரை தொடரும் தாண்டியா முடிந்தவுடன், அன்றாட கடமைகளில் ஈடுபட செல்பவர்கள் மீண்டும் மாலை நேரத்தில் அழகாக அலங்கரித்து ஒன்று கூடுகிறார்கள். அன்னையை தொழுது, அவள் அருளைப் பாடிய பின்பும் மீண்டும் துவங்குகிறது நடனம்.

வாசகர்களே.. ஒன்பது நாட்கள் நடக்கும் இந்த நடன கொண்டாட்டத்தை, நவராத்திரி விழாவை, தீபங்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் அகமதாபாத் நகரின் அழகை வாழ்வில் ஒரு முறையாவது நீங்கள் கண்டு களிக்க வேண்டும்.

- சாந்தகுமாரி சிவகடாட்சம்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement