Advertisement

சேக்கிழார் விழா

தலைப்பு... பெரிய புராணத்தால் சமயம்தான் வளர்கிறது! தொண்டுதான் வளர்கிறது! சமூக சீர்திருத்தம்தான் வளர்கிறது! ஒவ்வொரு அணிக்கும் மூன்று அறிஞர்கள். நடுவராக சேக்கிழார் அடிப்பொடி டி.என். இராமச்சந்திரன்.
"எனக்கு பட்டிமண்டபம் என்றாலே ஆகாது. வரவேண்டிய நடுவர் வராத காரணத்தால், நான் இந்த இருக்கையில் அமர வேண்டிய கட்டாயம். ஆனாலும், ஒரு ரசிகனாக இருந்து அறிஞர்கள் பேசுவதை ரசித்து "ஊருக்கு நல்லது செய்வேன். எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்!' எனும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, என் மனம் சொல்லும் உண்மையை தீர்ப்பாக சொல்வேன்!' சுருக்கமாக பேசுவதன் அழகு உணர்ந்தவர் நடுவர் என்பது அவரது துவக்க உரையில் தெரிந்தது.

பலத்த கரகோஷங்களுக்கு மத்தியல் முதல் அணியின் தலைவர் இலங்கை ஜெயராஜ் எழுந்தார். "நடுவர் அவர்களே... காட்சிகள், உணர்தல், ஞானிகள் வாக்கு... இவைகள் மூலமாக நாம் அறிந்து கொள்ளும் விஷயங்கள் தான் உண்மையானவை. இதற்கு காட்சி பிரமாணம், அனுமான பிரமாணம், ஆகம பிரமாணம் என்று பெயர்கள். இதோ, இந்த அவையில் நிறைந்திருப்பவர்களில் பெரும்பாலோனோர் சைவர்கள். பெரிய புராணம் சமயம் வளர்க்கிறது! என்பதற்கு காட்சி பிரமாணம் சொல்லும் சான்று இது. சமய நூல்களில், பெரிய புராணம் தனித்துவமான இடம் பெற்றிருக்கிறது. இது, அனுமான பிரமாணம் சொல்லும் சான்று. சேக்கிழார் பெரிய புராணம் எனும் சமயநூலை உருவாக்கியிருப்பதால்... அவருடைய விருப்பமும், எண்ணமும் சமயம் வளர்ப்பதே! இது ஆகம பிரமாணம் சொல்லும் சான்று. ஆக, பெரிய புராணம் வளர்ப்பது சமயத்தை தான்!' கரகோஷத்தில் அரங்கம் அதிர்ந்தது.
இவரது வாதத்திற்கு வலுசேர்க்கும் விதமாக "சமயம் என்ற கல்விகூடத்தில் பயின்றவர்களால் தான்... தொண்டு, சீர்திருத்தம் போன்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள முடியும்' சங்கீதாவின் வாதத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பிரமாதமான வரவேற்பு. இந்த அணியில் பங்கேற்ற மகேஸ்வரி சற்குருவும் தன் பங்கிற்கு பேச, அணியின் வாதம் நிறைவுற்றது. "பேராசிரியர் அவர்களே...' நடுவர் அழைத்ததும், பெரிய புராணத்தால் தொண்டுதான் வளர்கிறது! என்பதை உணர்த்த வந்தார் இரண்டாவது அணித்தலைவர் சொ.சொ.மீ. சுந்தரம்.
"பக்தி கோவில்கள் எல்லாம் பரிகார கோவில்களா மாறிட்டு இருக்கு. 25 ரூபாய் கொடுத்தா, அரை மணி நேரத்துல சாமியை பார்க்கலாம்! 50 ரூபாய் கொடுத்தா, 15 நிமிஷத்துல சாமியை பார்க்கலாம். 5000 டாலர் கொடுத்தா, சாமியே உங்களை பார்க்க வந்துடுவாருன்னு சொல்றான்! இங்கே, சமயம் எங்கே வளருது?' கை தட்டல் ஒலி... நொடிகளை தாண்டி, நிமிடங்களில் தொடர்ந்தது. "அன்னைக்கு சிவநேசன் செட்டியாரோட மகளை, திருஞானசம்பந்தர் திருமணம் பண்ண சம்மதிச்சிருந்தா, இன்னைக்கு கலப்பு திருமணங்கள் சர்வ சாதாரணமாயிருக்கும். ஆனா, இன்னும் அந்த சமுதாய சீர்திருத்தம் வரலையே! ஆனா, அன்னதானம், உழவாரப்பணி, தண்ணீர் பந்தல் இப்படி தொண்டுகள் அதிகரிச்சிருக்கு! காரணம், பெரிய புராணம் எனும் திருத்தொண்டர் புராணம்!'
பலத்த ஆரவாரம் கிளப்பிய பேராசிரியரின் வாதத்திற்கு துணையாக, விழா அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த தொண்டர்களின் பெயர்களை பட்டியலிட்டார் சீனிவாசன். இவரை தொடர்ந்து "சமயம் வளர்ந்தா சாமியார்கள் வருவாங்க. சமூக சீர்திருத்தம் வளர்ந்தா, தலைவர்கள் வருவாங்க. இரண்டு பேருக்குமே, தொண்டர்கள் வேணும்! அவங்க செய்யுற தொண்டுனாலதான், சமயமும் வளரும்! சமூக சீர்திருத்தமும் வளரும்!' முத்தாய்ப்பாக முடித்தார் புலவர் ஆரூர் சுந்தரராமன்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டபடி அமைதியாக அமர்ந்திருந்த மூன்றாவது அணித்தலைவர் முனைவர் செல்வ கணபதி, பெரிய புராணத்தால் சமூக சீர்திருத்தம்தான் வளர்கிறது என வாதிட கம்பீரமாக எழுந்தார்.
"பனைமரம் போல வளர்ந்தது சமயம். வாழைமரம் போல தழைத்திருப்பது தொண்டு. ஆனால், பசுங்செடியாக தற்போது வளர்ந்து வருவது சமூக சீர்திருத்தம். தலைப்பை பாருங்கள்! பெரிய புராணத்தால் எது வளர்கிறது? என கேட்டிருக்கிறார்கள். ஆக, தற்போது, வளர்ந்து வருவது எது? எங்களின் சமூக சீர்திருத்தம்தான்!' ஒரு நொடி அசந்து பிரமித்து, பின் ஆர்ப்பரித்தது அரங்கம். "63 நாயன்மார்களின் சிலைகளை, தெய்வத்திற்கு இணையாக கோவிலில் பூஜிக்க வைத்திருப்பது சமூக சீர்திருத்தம் இல்லையா?' செல்வ கணபதியின் இந்த கேள்விக்கு நடுவர் உட்பட, எதிர் அணியினர் அனைவரும் "ஆமாம்' என தலை அசைத்தது அழகு. தன் அணித்தலைவரின் வாதத்திற்கு பலம் சேர்க்க வந்த விஜய சுந்தரி "சுந்தரர் வரலாறு மூலமாக, "எவருக்கும் யாரும் அடிமை இல்லை!' எனும் கருத்தினை உரைத்து, பெரிய புராணம் சமூக சீர்திருத்தம் செய்யவில்லையா?' எனும் கேள்வியை எழுப்பினர். தொடர்ந்து வந்த பழனி "சமயமும், தொண்டும் சேர்ந்து சமூக சீர்திருத்தத்திற்கு தான் வழிகாட்டுகிறது!' என சொல்லி, தன் அணியின் வாதத்தை நிறைவு செய்தார்.
ஏறக்குறைய ஒரு பார்வையாளராகவே மாறியிருந்த சேக்கிழார் அடிப்பொடி இராமச்சந்திரன், தீர்ப்பளிக்கும் நேரம் வந்த கட்டாயத்தால் மீண்டும் நடுவராக மாறினார்.


"கவிஞர்களின் அரசன் கம்பன். கவிஞர்களின் தெய்வம் சேக்கிழார். சிவலோகத்தை திறக்க உதவும் திறவுகோல் அவர் அருளிய பெரியபுராணம். அந்த, பெரியபுராணத்தால் சமயமும் வளர்கிறது! தொண்டும் வளர்கிறது! சமூக சீர்திருத்தமும் வளர்கிறது!' என தன் தீர்ப்பை சொல்ல, அதுவரை கை தட்டி மகிழ்ந்திருந்த பார்வையாளர்கள், "ஓம் நமசிவாய' என உச்சரித்து, கைகுவித்து எழுந்தனர். மனதிருப்தியுடன் கலைந்தனர்.

சேக்கிழார் ஆராய்ச்சி மையம், மயிலாப்பூர். போன்: 2466 1426

துரைகோபால்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement