Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'ஸ்டாலின் கருத்துக்கும், உங்க கருத்துக்கும் வித்தியாசமே இல்லை... அ.தி.மு.க.,காரங்க சொல்றதை போல, தி.மு.க.,வின் ஸ்லீப்பர் செல்லாகத் தான் நீங்க செயல்படுறீங்களோ...' என சந்தேகப்படும் வகையில், அ.ம.மு.க., துணை செயலர் தினகரன் பேட்டி: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த, மக்கள் தயாராக உள்ளனர். தமிழக மக்கள் விரும்பாத திட்டங்களை தரும், மத்திய அரசை அப்புறப்படுத்தவும் தயாராகி விட்டனர். ஜெ., அளித்த வாக்குறுதிகள் எதையும், ஒன்றரை ஆண்டில் நிறைவேற்றவில்லை. பதவியில் இருந்தால் போதும் என, முதல்வரும், துணைமுதல்வரும் செயல்படுகின்றனர்.


புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி அறிக்கை: 'வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம், பேரவை உறுப்பினர்களுக்கு உள்ளது; கவர்னருக்கு இல்லை' என, முதல்வர் நாராயணசாமி கூறி உள்ளார். பொது நிதி விதி, 230ன் படி, அனைத்து மானியங்களையும், கவர்னர் தான் ஒதுக்கீடு செய்ய முடியும். விதிக்குட்பட்ட திட்டங்களை மட்டுமே என் ஒப்புதலுக்கு அனுப்பும்படி கூறி உள்ளேன். எந்த கோப்பையும், எதற்காகவும், நான் மறுத்தது இல்லை. அரசு, ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத நிலையில், தற்போது, நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. அதனால், மக்கள் பிரதிநிதிகள், நிதி விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.


''நீங்க இப்படி அநியாயத்துக்கு முன்னெச்சரிக்கையா இருக்கிறதால தான், மழை கூட எட்டிப் பார்க்க யோசிக்குதோ...' என, கேட்க தோன்றும் வகையில், தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேச்சு: தமிழகத்தில் அதிக மழையால், 4,399 இடங்கள் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டு, அந்த பகுதிகளில், மீட்புப் பணியாளர்கள் மற்றும் முதல்நிலை பொறுப்பாளர்கள், உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ளத் தேவையான அறிவுரைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும், 9,500 மீட்புப் பணியாளர்கள், தயார் நிலையில் உள்ளனர். துாத்துக்குடி மாவட்டத்தில், அதிக மழையால் பாதிக்கப்படும், 3௬ இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பருவமழை காலங்களில் ஏற்படும் காய்ச்சல், பருவகால நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


வி.சி., தலைவர் திருமாவளவன் அறிக்கை:ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலையில், இலங்கை பார்லிமென்டை, அந்நாட்டு அதிபர் சிறிசேன, நள்ளிரவில் கலைத்துள்ளார். இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் படி, பார்லிமென்டை கலைப்பதற்கான அதிகாரம், அதிபருக்கு இல்லை. ராஜபக்சேவோடு கூட்டு சேர்ந்து, சட்டவிரோதமாக இலங்கை அதிபர் செயல்படுவது, ஈழத் தமிழர்களுக்கும், இலங்கையின் ஜனநாயகத்துக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement