Advertisement

விபத்து அபாயம்!

சிக்னல்களை மதிக்காத வாகனங்களால்...
கிழக்கு கடற்கரை சாலையில் திக்... திக்...
-
-நமது நிருபர்-
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிக்னல்களில், விதிகளை மீறி செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் எழுந்துள்ளது.
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், லதா ஸ்டீஸ் ஹவுஸ், மடுவுப்பேட்டை சந்திப்பு, கருவடிக்குப்பம் சிவாஜி சிலை ஆகிய இடங்களில் புதிதாக சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மதித்து, புதிய சிக்னல்களில் சிகப்பு விளக்கு எரியும்போது நின்று, பச்சை விளக்கு எரியும்போது புறப்பட்டு செல்கின்றனர். இது, பாராட்டுக்குரியது.
விபத்து அபாயம்
அதேசமயம், புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள், மற்றும் தமிழக அரசு போக்குவரத்துக் கழக பஸ்களும், பள்ளிகள், கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பஸ்களும், டிரைவிங் பள்ளிகளின் கார்களும் கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிக்னல்களை மதிப்பதே கிடையாது. சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போதே, சீறி பாய்வது தொடர் கதையாக உள்ளது.
இதுபோன்ற அத்துமீறல்கள் காலை 6:00 மணிக்கு துவங்கி, 7:30 மணி வரை தொடர்கிறது. சிக்னலை மதிக்காமல் செல்லும் மேற்கண்ட வாகனங்களால், போக்குவரத்து விதிகளை மதித்து, பச்சை விளக்கு எரியும் வரை காத்திருக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
அறிவுறுத்தல் தேவை
போக்குவரத்துக் கழகங்களின் டிரைவர்கள் போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும் என, போக்குவரத்து துறை கடுமையான உத்தரவுகளை பிறக்க வேண்டும். விதிகளை மீறும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்துக் கழக நிர்வாகங்களும் அவர்களது டிரைவர்களை கண்டிக்க வேண்டும்.
அடுத்ததாக, சிக்னலை மதித்து நடக்குமாறும், போக்குவரத்து விதிகளை பின்பற்றும்படியும், டிரைவர்களுக்கு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவன நிர்வாகங்கள் அறிவுறுத்த வேண்டும்.
இன்டெக்ரா நிறுவனத்தின் எதிரில், மணக்குள விநாயகர் கல்லுாரி பஸ்களை நிறுத்தும் டெப்போ அமைந்துள்ளது. டெப்போவில் இருந்து பஸ்களை எடுக்கும் டிரைவர்கள், லதா ஸ்டீல் ஹவுஸ் வரை வடக்கு நோக்கி சென்று 'யூ' டர்ன் அடித்து திரும்ப வேண்டும். ஆனால், கொக்கு பார்க் சிக்னல் வரை எதிர்திசையில் சென்று திரும்புகின்றனர். இதுபோன்ற விதிமீறல் கூடாது என, சம்பந்தப்பட்ட கல்லுாரியில் வாகனங்களை கவனிக்கும் பிரிவினர் டிரைவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
போக்குவரத்து போலீஸ்
கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிக்னல்களில் குறைந்தபட்சம் காலை, மாலை நேரங்களிலாவது போக்குவரத்து போலீசாரை பணியில் ஈடுபடுத்தி, விதிமீறல் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எவ்வளவுதான் அறிவுறுத்தினாலும், சிக்னல்களில் நிற்காமல் பைக்கில் தாறுமாறாக பறக்கும் ஒன்றிரண்டு பேரை திருத்த முடியாது. அதுபோன்ற இளைஞர்களுக்கு பெற்றோர்களும் சொல்லித் தருவதில்லை.
எல்லா இடத்திலும், எந்த நேரத்திலும் போலீசாரை நிறுத்தி எல்லாரையும் கண்காணிக்க முடியாது. பைக்கில் மின்னல் வேகத்தில் பறப்பவர்கள் விபத்தில் சிக்கி கை, கால் உடைந்த பிறகு அவர்களாகவே திருந்தி விடுவர்.
-
டிரைவிங் பள்ளிகள் கவனத்திற்கு...
பல டிரைவிங் பள்ளிகளை சேர்ந்தவர்கள், கிழக்கு கடற்கரை சாலையில் கார் ஓட்டுவதற்கு கற்று தருகின்றனர். இவர்களில் பலர், சிக்னல்களை மதிக்காமல், சிகப்பு விளக்கு எரியும்போதே கடந்து செல்கின்றனர். கார் ஒட்ட கற்று தரும்போதே, போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என சொல்லித் தரவில்லை என்றால், எதிர்காலத்தில் பெரிய விபரீதம் ஏற்பட்டு விடும். இது தொடர்பாக தகுந்த அறிவுறுத்தல்களை டிரைவிங் பள்ளிகளுக்கு, போக்குவரத்து துறையினர் அனுப்ப வேண்டும்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement