Advertisement

பட்டாசு விற்பனையில் பல லட்சம் ரூபாய் பார்த்த அதிகாரிகள்!

''நாம பேசினதுக்கு பலன் கிடைச்சிருக்கு பா...'' என, பெஞ்சில் அமர்ந்த அன்வர்பாயே தொடர்ந்தார்... ''குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பளக்குழு பரிந்துரையில, ஏழு மாத நிலுவை தொகை வழங்காம இருக்காங்கன்னு, தீபாவளிக்கு முன்னாடி பேசியிருந்தோமே...


''அதை பார்த்ததுமே, ஏழு மாசத்துல, அஞ்சு மாச நிலுவையை, ஊழியர்கள், ஓய்வூதியர்கள் வங்கி கணக்குல வரவு வைக்கும்படி, வாரியத்தின் நிர்வாக இயக்குனர், மகேஸ்வரன் உத்தரவு போட்டுட்டார்... ஊழியர்கள் எல்லாம், தீபாவளியை மகிழ்ச்சியா கொண்டாடினாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.


உடனே, ''முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, வெளிநாடுகள்லயும் புகழஞ்சலி கூட்டங்களை நடத்த போறதா கேள்விப்பட்டோமே... ஏதாவது தெரியுமாங்க...'' எனக் கேட்க, பதிலளித்து அண்ணாச்சி பேச துவங்கினார்... ''அவருக்கு உள்ளூர்ல, எழுத்தாளர்கள், டாக்டர்கள், சினிமா கலைஞர்கள், வக்கீல்கள்னு பல தரப்புலயும் அஞ்சலி கூட்டங்களை நடத்தி முடிச்சிட்டாவ... சிங்கப்பூர், மலேஷியா, ஆஸ்திரேலியா, கனடா மாதிரியான நாடுகள்லயும் நிறைய தமிழர்கள் இருக்காங்கல்லா...


''அவங்களும், கருணாநிதி புகழஞ்சலி கூட்டங்களை நடத்த ஏற்பாடு பண்ணிட்டு இருக்காவ... அதுல, தி.மு.க., சார்புல, கனிமொழி பங்கேற்க இருக்காங்க வே...'' என்றார் அண்ணாச்சி.


''அ.தி.மு.க.,வினர் காட்டுல அடைமழை கொட்டறது ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் குப்பண்ணா.


''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.


''மதுரை புறநகர் மாவட்ட, அ.தி.மு.க., செயலரா, ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ., இருக்காரோல்லியோ... தீபாவளி பண்டிகைக்காக, கட்சியின் ஒன்றிய, பகுதி, பேரூராட்சி, கிளை நிர்வாகிகளுக்கு, அவாவா பதவிக்கு தக்கபடி, 10 ஆயிரம், 5,000 - 2,500 ரூபாய், வேஷ்டி, சட்டை, புடவை அடங்கிய, 'கிப்ட் பேக்'குகளை ராஜன் செல்லப்பா குடுத்திருக்கார்... 'எல்லாம் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் செய்ற மாயம்'னு, கட்சிக்காராளே பேசிக்கறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.


''பட்டாசு விற்பனையில, பல லட்சம் ரூபாய் பார்த்துட்டாங்ணா...'' என, கடைசி தகவலைக் கூறத் துவங்கினார் கோவை, கோவாலு.
''எந்த ஊர் வியாபாரிகளைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.


''வியாபாரிகள் இல்லை... தீபாவளிக்கு, கூட்டுறவு துறை சார்புல, தமிழகம் முழுக்க, பட்டாசு கடைகள் போடுவாங்க... திருச்சி மாவட்டத்துல, 20க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் போட்டாங்ணா... ''விதிமுறைகள்படி, கொள்முதல் விலையில, 10 சதவீதம் மட்டுமே கூடுதல் விலை வச்சு, பட்டாசுகளை விற்கணும்... கடைகள் முன், விலை பட்டியல் வைக்கணும்... கம்ப்யூட்டர் பில் தரணும்... ஆனா, திருச்சியில எந்த கூட்டுறவு பட்டாசு கடையிலும், விலை பட்டியல் வைக்கலை... கம்ப்யூட்டர் பில்லும் போடலைங்ணா...


''சும்மா கையால எழுதின பில்லை குடுத்து, தனியார் மாதிரி, இஷ்டத்துக்கு விலை வச்சு, பட்டாசுகளை விற்பனை பண்ணியிருக்காங்க... இதுல, கூட்டுறவு துறை அதிகாரிகள், லட்சக்கணக்குல லாபம் பார்த்துட்டாங்ணா...'' என்றார் கோவாலு. பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் மவுனமானது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement