Advertisement

சிறுமிக்கு ரத்தநாள கட்டி அகற்றம்

ஸ்டான்லி டாக்டர்கள் சாதனை

சென்னை: பல்வேறு மாநில டாக்டர்களால் கைவிடப்பட்ட சிறுமிக்கு, ரத்தநாள அறுவை சிகிச்சை செய்து, அரசு ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த, டீ கடை தொழிலாளியின், 12 வயது மகள், தசபந்தி தகுவ. இவரது வலது பக்கம் முகத்தில், பிறந்தது முதல், திராட்சை கொத்து போன்ற கட்டி இருந்தது.இரண்டு ஆண்டுகளாக, கட்டி பெரிதாகியதுடன், ஈறுகளில் இருந்து ரத்த கசிவு அதிகளவில் இருந்தது. இதற்காக, நாட்டின், பல்வேறு மாநிலங்களில், சிறுமியை பெற்றோர் பரிசோதித்தனர்.ஆனால், ரத்தநாள கட்டி என்பதால், அகற்றும்போது, உயிரிழப்பு ஏற்படும் என, டாக்டர்கள் கைவிட்டனர்.இந்நிலையில், சென்னை, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், சிறுமி அனுமதிக்கப்பட்டார்.இங்கு, சிறுமியை பரிசோதித்த, ரத்தநாள அறுவை சிகிச்சை துறை தலைவர், இளஞ்சேரலாதன், டாக்டர்கள் பெரியகருப்பன், சண்முகவேலாயுதம், தீபன்குமார், தளவாய் சுந்தரம், சித்ரா தேவி, நரசிம்மன் அடங்கிய குழுவினர், சிறுமியின் ரத்தநாள கட்டியை அகற்றினர்.மருத்துவமனை டீன், பொன்னம்பல நமச்சிவாயம் கூறியதாவது:இந்த கட்டி, லட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடியது. இந்த கட்டியால், சிறுமி பள்ளி செல்வதை தவிர்த்துள்ளார். மேலும், கட்டியை அகற்ற முடியாது என, பல டாக்டர்கள் கைவிட்டுள்ளனர்.இந்த கட்டி, ஈறிலும், உதட்டிலும் திராட்சை கொத்து போன்று இருந்ததால், அகற்றுவது கடினம். அவ்வாறு அகற்றும்போது, அதிக ரத்த கசிவு ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே, ரத்தத்தை உறையவைக்கும், வேதியியல் பொருட்கள் சிறுமிக்கு செலுத்தப்பட்டன. இந்த வேதி பொருட்கள் செலுத்துவதில் தவறு ஏற்பட்டால், கண் பார்வை, பக்கவாதம், உயிர் இழப்பு போன்ற பாதிப்பு ஏற்படலாம்.ஆனால், டாக்டர்கள் குழுவினர், 48 மணி நேரத்தில், வெற்றிகரமாக, சிறுமிக்கு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பல்வேறு மாநில டாக்டர்களால் கைவிடப்பட்ட சிறுமிக்கு, ரத்தநாள அறுவை சிகிச்சை செய்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement