Advertisement

அதிகாரி ஆசியுடன் தம்பதி சமேதராய் சுருட்டும் பஞ்., செயலர்கள்!

''பெரிய அதிகாரியை மாத்தினதால, சலசலப்பு ஏற்பட்டிருக்குங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.


''எந்தத் துறையில பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.


''குரங்கணி தீ விபத்துக்கு அப்புறம், வனத்துறையில பெரிய அதிகாரிகளை பரவலா மாத்துனாங்க... அப்ப, துறை தலைவர் பதவிக்கு, உபாத்யாயான்னு ஒரு அதிகாரிய போட்டாங்க... ''அவர் வந்ததும், கிடப்புல போட்டிருந்த பைல்களை துாசு தட்டி, விதிப்படி நடவடிக்கை எடுக்க, களம் இறங்கினார்... இது, மோசடி வழிகளையே நம்பி, காலம் தள்ளுற சிலருக்கு, சிக்கலை ஏற்படுத்திடுச்சுங்க...


''விதிப்படி நியமனம், தகுதிப்படி புரமோஷன்னு அவர் போன போக்கு, பலருக்கு பிடிக்கலை... உச்சகட்டமா, வன நிலங்களை ஆக்கிரமிச்சவங்களுக்கு எதிரா, அதிரடி நடவடிக்கைக்கு, 'பிளான்' பண்ணிட்டு இருந்தாருங்க... ''இதனால, பாதிக்கப்பட இருந்தவங்க, 'டென்ஷன்' ஆகி, மேலிடத்துல பேசி, உபாத்யாயாவை அதிரடியா மாத்திட்டாங்க... 'நேர்மையா இருந்தா, இது தான் பரிசா'ன்னு நியாயமான அதிகாரிகள் புலம்பிட்டு இருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.


''சைவ சாப்பாட்டை போட்டு ஏமாத்திட்டாங்க பா...'' என, அடுத்த விஷயத்திகுள் நுழைந்த அன்வர்பாயே தொடர்ந்தார்... ''திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் சம்பந்தமா, மதுரையில, போன வாரம், அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் நடந்துச்சே... முதல்வர், துணை முதல்வர் எல்லாம் கலந்துக்கிட்டாங்க பா... ''இந்த மாதிரி, அ.தி.மு.க., தேர்தல் ஆலோசனை கூட்டங்கள்ல, வழக்கமா, கட்சியினருக்கு தடபுடலா அசைவ விருந்து குடுப்பாங்க... ஆனா, கூட்டம் நடந்த அன்னைக்கு, குருபெயர்ச்சின்னு காரணம் சொல்லி, சாம்பார், பொரியல், கூட்டுன்னு சைவ விருந்து தான் போட்டாங்க பா...


''இதனால, தொண்டர்கள் ஏமாந்து போயிட்டாங்க... ஆனாலும், 'அடுத்த ஆலோசனை கூட்டத்துல, சிக்கன், மட்டன்னு அசத்திடுவோம்'னு தொண்டர்களை, நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அனுப்பியிருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.


''அதிகாரி ஆசியோட, தம்பதி சமேதரா வாரி சுருட்டிண்டு இருக்கா ஓய்...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் குப்பண்ணா.


''இது, எங்க பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.


''காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துல, 61 ஊராட்சிகள் இருக்கு... இதுல, ரெண்டு ஊராட்சிகள்ல, கணவன், மனைவி தான் செயலர்களா இருக்கா ஓய்... ''இவா, ஒன்றியத்துல இருக்கற முக்கியமான அதிகாரியை, கைக்குள்ள போட்டுண்டு, தெருவிளக்கு, குடிநீர் பராமரிப்பு, வீட்டுமனை அங்கீகாரம்னு பல வகைகள்லயும், லட்சக்கணக்குல, பணம் பார்த்துண்டு இருக்கா...


''இந்த தம்பதியை கேட்காம, மத்த ஊராட்சி செயலர்கள் தர்ற பைல்கள்ல கூட, அதிகாரி கையெழுத்து போட மாட்டேங்கறார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.


அரட்டை முடிவுக்கு வர, யாருக்கோ போன் செய்த அண்ணாச்சி, ''சிவகலைச்செல்வன், நேத்து உங்களை தேடி நாகராஜ், சுஜாதா வந்தாவளா வே...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் நடையை கட்டினர்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • A R J U N - ,இந்தியா

    அதிகாரி ஆசியுடன் தம்பதி சமேதராய்..தலைப்பை பார்த்தால் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் என்ன பண்றார் என கேட்க தோனல..

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    Until local Admn. Is in the hands of special officers such 'swindling' taking place will be common. They have to make hay when the sun shines, is it not true?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement