Advertisement

துவக்கம்:புதுச்சேரி - தாய்லாந்து விமான சேவை.கை கொடுத்தது உதான்தி்ட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து, முதல் முறையாக, தாய்லாந்து நாட்டின், பாங்காக் நகருக்கு, விமான போக்குவரத்து துவங்கிஉள்ளது.நாட்டின் சிறிய நகரங்களை, வான் வழியாக இணைக்கும் வகையில், 'உதான்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்து, பாதி கட்டணத்தை, மத்திய அரசே, விமான நிறுவனங்களுக்கு வழங்கும் என தெரிவித்தது.இதைத் தொடர்ந்து, தடைபட்டிருந்த புதுச்சேரி - ஐதராபாத் விமான சேவை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் துவங்கியது. 2014ல் நிறுத்தப்பட்ட பெங்களூரு பயணியர் விமான சேவையும், பிப்., 15ல் மீண்டும் துவங்கியது.புதுச்சேரி விமான நிலையத்தின் ஓடுதளம் விஸ்தாரமாக இல்லாததால், இங்கிருந்து நேரடியாக வெளிநாடுகளுக்கு செல்லும் பெரிய ரக விமானங்களை இயக்க முடியாத நிலை இருந்து வந்தது.இந்நிலையில், ஐதராபாத் விமான சேவையை, தாய்லாந்தின் பாங்காக் செல்லும் வகையில், 'ஸ்பைஸ் ஜெட்' நிறுவனம், நேற்று நீட்டித்தது. நேற்று முதல் முறையாக, காலை, 11:45 மணிக்கு, புதுச்சேரியில் இருந்து, இந்த விமானம் புறப்பட்டது.ஐதராபாதுக்கு பகல், 1:40 மணிக்கு சென்று, அங்கிருந்து, மாலை, 4:30 மணிக்கு, பாங்காக் செல்லும் விமானத்துடன் இணைப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. அந்த விமானம், இரவு, 9:40 மணிக்கு பாங்காக் சென்றடைகிறது.இரவு, 10:40 மணிக்கு பாங்காக்கில் புறப்படும் விமானம், அதிகாலை, 1:40 மணிக்கு ஐதராபாத் வருகிறது. மறுநாள் காலை, 9:45 மணிக்கு ஐதராபாதில் புறப்பட்டு, 11:25 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது. இந்த விமான போக்குவரத்து, தினசரி சேவையாக இயக்கப்படுகிறது.புதுச்சேரிக்கு வெளிநாடுகளில் இருந்து, அதிக அளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். அவர்கள் சென்னை சென்று, வெளிநாட்டு விமானங்களை பிடித்த நிலையில், நேரடியாக துவங்கியுள்ள விமான சேவையால், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement