Load Image
Advertisement

திட்டக்குடி வெலிங்டன் ஏரி கரையில் மீண்டும் பாதிப்பு!. நிரந்தர தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தல்

 திட்டக்குடி வெலிங்டன் ஏரி கரையில் மீண்டும் பாதிப்பு!. நிரந்தர தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தல்
ADVERTISEMENT
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்தேக்கத்தில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் கரை உள்வாங்கிய நிலையில், மீண்டும் கரையில் போடப்பட்டுள்ள சாலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் வெலிங்டன் நீர்தேக்கம் அமைந்துள்ளது. இப்பகுதி விவசாயிகள் நலன் கருதி வெலிங்டன் நீர்தேக்கம் அமைக்கும் பணி 1913ம் ஆண்டு துவங்கப்பட்டு 1923ம் ஆண்டு முடிவடைந்தது.

இதன் நீர்பிடிப்பு பரப்பு 16.60 சதுர கி.மீ., கரையின் நீளம் 4,300 மீட்டர் ஆகும். ஏரியின் முழு கொள்ளளவு 2,580 மில்லியன் கன அடி. இந்நீர்தேக்கத்தின் மூலம் 11 ஆயிரத்து 222 எக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்நீர்தேக்கத்தின் கரை 2100 முதல் 2300 மீட்டர் வரை 1996ம் ஆண்டு முதல் உள்வாங்கியது.
இதையடுத்து அணை பாதுகாப்பு குழுவின் பரிந்துரையின் பேரில் உலக வங்கி நிதியின் கீழ் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செப்பனிடப்பட்டது. இருந்தும் கரை உள்வாங்குவது ஒவ்வொரு பருவமழையின் போதும் நிகழ்ந்ததால் 2007ம் ஆண்டில் ஆய்வு செய்து புனரமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து 2009ம் ஆண்டில் 29.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரை சீரமைப்பு பணி நடந்தது. கடந்த 2011ம் ஆண்டு முதல் நீர்தேக்கத்தில் நீர்பிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. சில ஆண்டுகள் பருவமழை பொய்த்ததால் நீர் பிடிப்பின்றி காணப்பட்டது.

கடந்த 2017ம் ஆண்டு வெலிங்டன் நீர்தேக்கத்தின் ஷட்டர்கள், கரை சீரமைப்பு உள்ளிட்டவை 6.5 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. இந்த பணி முடிந்த சில மாதங்களிலேயே கரை நெடுகை 1600வது மீட்டரில் கரை பதினைந்து மீட்டர் நீளம், மூன்று மீட்டர் ஆழத்திற்கு வெடிப்பு ஏற்பட்டு உள் வாங்கியது. இதனால் கரை உடைந்துவிடுமோ என்று விவசாயிகள் அச்சமடைந்தனர்.

அதையடுத்து கரையை பார்வையிட்ட அப்போதைய கலெக்டர் பிரசாந்த் வடநேரே, கரை பாதிப்பை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

தற்காலிகமாக மணல் மூட்டைகள் அமைத்தும் கரை உள்வாங்கிக் கொண்டே இருந்தது. கரை பாதிப்பை நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர்.
தொடர்ந்து நீர்தேக்கத்தில் இருந்த தண்ணீர் விவசாயத்திற்காக திறந்து விடப்பட்டதையடுத்து கரை உள்வாங்குவது நின்றது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி மணல் மூட்டைகள் அடுக்கப்பட்ட இடத்தில், தற்காலிகமாக 1.80 கோடி ரூபாய் மதிப்பில் ரிங் வளைவு அமைக்க முடிவெடுக்கப்பட்டு, விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது.

இந்நிலையில் நேற்று காலை கரையில் 3,200வது மீட்டரில் லேசான வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த விவசாயிகள் நேரில் சென்று பார்வையிட்டு, நிபுணர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாய சங்கத் தலைவர் மருதாசலம் கூறுகையில், கடந்த 1997ம் ஆண்டு முதல் 21 ஆண்டுகளாக கரையில் விரிசல் ஏற்படுவதும், உள்வாங்குவதும் தொடர்கதையாக உள்ளது.
இந்த நீர்தேக்கத்தின் மூலம் கிடைக்கும் நீரை நம்பியே விவசாயம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. கரை பலமிழந்ததால் முழு கொள்ளளவு நீர் பிடிக்க முடியாமல் இப்பகுதி விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெலிங்டன் நீர்தேக்கம் உருவாக்கப்பட்டு நுாறு ஆண்டுகள் கடந்துவிட்டது. இதனால் கரை அமைக்கப்பட்ட மண்ணின் தன்மை மாறி பலமிழந்து வருகிறது. நீரை தேக்கி நிறுத்தக்கூடிய நெடுகை 2,600 மீட்டர் முதல் 3,600 மீட்டர் வரை கரையை சீரமைத்தால் மட்டுமே கரை உள்வாங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement