Advertisement

போக்குவரத்து போலீசார் என்ன செய்கின்றனர்?  லங்கா கார்னரை கவனிப்பது யார்?

கோவை:ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்துவமனை டவுன்ஹால் ஆகிய மூன்று பகுதிகளை இணைக்கும் லங்கா கார்னரில், வாகன போக்குவரத்தை போக்குவரத்து போலீசார் ஒழுங்குபடுத்தாததால், அன்றாடம் வாகனங்கள் முட்டி, மோதும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.



அரசு மருத்துவமனை முன்பு, வாகனங்களை திருப்பி செல்வதில் ஏராளமான குளறுபடி ஏற்படுகிறது. ரயில்வே ஸ்டேஷனிலிருந்து பெரியகடை வீதிக்கு செல்லும் வாகனங்கள், அரசு மருத்துவமனை எதிரிலுள்ள, ரவுண்டானாவில் வட்டமிட்டு வலது புறம் திரும்பாமல், முன்னதாகவே தெற்குப்பகுதியிலுள்ள தரைப்பாலத்துக்கு கீழே திரும்பி செல்கின்றன.

அப்போது திருச்சி சாலை யிலிருந்து, ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பெரிய கடைவீதியை நோக்கி செல்லும் வாகனங்களும், டவுன்ஹாலிலிருந்து அரசு மருத்துவமனையை நோக்கி செல்லும் வாகனங்களும், எதிரே திரும்பும் வாகனங்களின் மீது மோதி, விபத்தை ஏற்படுத்துகின்றன.
இதை தவிர்க்க, அங்கு போக்குவரத்து 'சிக்னல்' அமைப்பதோடு, நிரந்தரமாக போக்குவரத்து போலீசாரையும் பணியில் அமர்த்த வேண்டும். ஆனால், நகரின் முக்கியப் பகுதியில் தினமும், மக்கள் அனுபவிக்கும் இந்த அவஸ்தை குறித்து, போக்குவரத்து போலீசார் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பது ஏன் என தெரியவில்லை.மாநகராட்சி, நெடுஞ்சாலை, போக்குவரத்து போலீசார் ஆகிய மூன்று துறையினரும் இணைந்து, லங்கா கார்னர் பிரச்னைக்கு, உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

பிரச்னைக்கு தீர்வு கலெக்டர் உறுதி

லங்கா கார்னர் பிரச்னை குறித்து, சமூக, தன்னார்வ அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளன. மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில், இது குறித்து விவாதித்து முடிவு எடுப்பதாகவும், அதற்கு முன்பு மூன்று துறை அதிகாரிகளையும், அழைத்து பேசுவதாகவும் கலெக்டர் ஹரிஹரன் உறுதி கூறியுள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Lourdu Irudayaraj - coimbatore,இந்தியா

    அதே போல லங்காகர்ணர் பாலத்தில் சாலை டேமேஜ் ஆகி பல மாதங்கள் ஆகிறது இதை சரி செய்வதற்க்கு ஆள் இல்லை .மாநகராட்சி அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் .இரண்டு சக்கர வண்டிகளில் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement