Advertisement

'டவுட்' தனபாலு

லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை: பெட்ரோல்- - டீசல் விலை உயர்வை எதிர்த்து, காங்கிரஸ் நடத்திய, 'பந்த்'தில், தி.மு.க., பங்கேற்றும், பிசுபிசுத்து போனது. காரணம், மத்திய அரசை எதிர்த்து போராட, ஸ்டாலின் தயங்குகிறார். பாரத ரத்னா வேண்டுமா, பாரத் பந்த் வேண்டுமா என்றால், பாரத ரத்னா கருணாநிதிக்கு தேவைப்படுகிறது.


டவுட் தனபாலு: தி.மு.க.,வாவது பகிரங்க ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் ஓரளவு பங்கெடுத்தது... ஆனா, அ.தி.மு.க., வாயே திறக்கலையே... எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படணும்னு, மத்திய அரசை, தமிழக முதல்வரும், அமைச்சரவையும் வலியுறுத்தி வருவது தான் காரணமா என்ற, 'டவுட்'டை ஏற்படுத்திட்டீங்களே...!


---


தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்: அமைச்சர், டிஜி.பி., போன்றோர் வீட்டில் நடைபெற்ற சோதனையால், தமிழகத்துக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது.


டவுட் தனபாலு: தனக்குப் பிடிக்காத கட்சிகளை அடக்கவும், தன் கட்டுப்பாட்டில் வைக்கவுமே, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., போன்றவற்றை, மத்திய அரசு பயன்படுத்தி வருவதாகச் சொல்றீங்க... உங்களின் இந்தக் கருத்து உண்மை என்றால், இதனால், தமிழகத்துக்கு என்ன அவமானம்... மத்திய அரசுக்குத் தானே பழிபோகும்... இதில் இருந்தே, சோதனைகளை அரசியலாக்குவது யார் என்ற, 'டவுட்' வலுவாகுதே...!


---


மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி: வங்கிக் கடன் பிரச்னையில் சமரசம் செய்வது குறித்து, என்னைச் சந்தித்துப் பேசியதாக, விஜய் மல்லையா கூறியிருப்பது, முற்றிலும் பொய்.


டவுட் தனபாலு: கிரிக்கெட் சங்கத்தில் நடந்த ஊழலில் உங்களுக்கு தொடர்பு இருப்பதாக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சொன்னதும், கொதித்து எழுந்தீங்க... அவதுாறு வழக்குகளால், அவரை ஒரு வழி பண்ணினீங்க... வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட பிறகே, அந்த விவகாரத்தை விட்டீங்க... அந்த கோபத்தையும், வேகத்தையும், மல்லையாவிடம் காட்டுவீங்களா என்பது தான், மக்களின், 'டவுட்!'

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement