Advertisement

எவ்வளவு மழை பெய்தாலும் கொரட்டூர் ஏரியில்... கடும் வறட்சி!ஆக்கிரமிப்புகளும், ரசாயன கழிவுகளும் காரணம் 'தும்பை விட்டு வாலை பிடிக்கும்' பொ.ப., துறை

அளவுக்கு அதிகமாக மழை பெய்தாலும், அடுத்த சில மாதங்களில், முந்திக் கொண்டு வறண்டுவிடுகிறது கொரட்டூர் ஏரி. இதற்கு, இந்த ஏரியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளும், இதுவரை ஏரியை துார்வாராததுமே காரணம் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


அயப்பாக்கம் ஏரி, அம்பத்துார் ஏரி, கொரட்டூர் ஏரி, மாதவரம் ரெட்டை ஏரி ஆகிய நான்கு ஏரிகளும், ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவை.இந்த ஏரிகள் ஒன்று நிறைந்த பிறகு, அடுத்த ஏரிக்கு, உபரிநீர் செல்லும். இந்த வகையில், அம்பத்தூர் ஏரி உபரிநீரை, பிரதான நீர் ஆதாரமாக கொண்டு, கொரட்டூர் ஏரி உள்ளது.


மொத்தம், 850 ஏக்கர் பரப்பளவில், இந்த ஏரி பரந்து விரிந்து அமைந்துள்ளது. இவ்வளவு பெரிய ஏரி. ஆனால், முழு அளவு நிரம்பினால் கூட, 0.04 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே இருப்பு இருக்கும்.
சுற்றுவட்டாரங்களின், நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு, பெரிதும் உதவியாக உள்ள இந்த ஏரி, இதுவரை துார்வாரப்பட்டதே இல்லை. இதனால், ஐந்தடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.


இந்த நீர், ஓரிரு மாதங்களில் ஆவியாகி, வறட்சிக்கு உதாரணமாக, கொரட்டூர் ஏரி மாறிவிடும். கடந்த, 8 ஆண்டுகளில், இந்த ஏரியின் பெரும்பகுதி, தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியும், சுற்றுச்சூழல் சீர்கெட்டும், கழிவுநீர் குட்டையாக மாறி, பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால், 700 ஏக்கர் அளவிற்கு ஏரி சுருங்கிவிட்டது. கள்ளிக்குப்பம், முத்தமிழ்நகர், கங்கை நகர், மேனாம்பேடு பகுதிகளில், 800க்கும் மேற்பட்டோர், ஏரி நிலத்தை ஆக்கிரமித்து, வீடு கட்டி வசித்து வருவது, பொதுப்பணித்துறையின் ஆய்வில் தெரியவந்தது.


பிப்ரவரியில், 450 ஆக்கிரமிப்பு வீடுகளின் உரிமையாளர்களுக்கு, பொதுப்பணித்துறை சார்பில், ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான, எச்சரிக்கை, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி பகுதிகளில் மாற்று இடம் வழங்குவது தொடர்பாக, பயோ-மெட்ரிக் முறையில், பயனாளிகளை தேர்வு செய்வதற்கான கூட்டம், 3ம் தேதி, அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.


ஆனால், கூட்டத்திற்கு வந்தவர்கள் ஒத்துழைக்காததால், கூட்டம் பாதியில் முடிந்தது. பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால், ஏரி ஆக்கிரமிப்பு பிரச்னை வளர்ந்து கொண்டே வருகிறது.கடந்த காலங்களில், அரசியல்வாதிகளின் ஆதரவுக்காக, ஆக்கிரமிப்புகளை தடுக்காமல், பொதுப்பணித்துறையினர் அலட்சியம் காட்டினர்.


பட்டரவாக்கம் பாலம் முதல், மாதனாங்குப்பம் வரை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாக, ஏரிக்கரையை பொதுப்பணித்துறையினரே, 'உள்வாங்கி' அமைத்தனர். மின்வாரியம், மின் இணைப்பு வழங்கியது. உள்ளாட்சி நிர்வாகம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தது.அதனால், ஏரியின் பரப்பளவு வெகுவாக குறைந்தது. மேலும், 3 ஆண்டுகளுக்கு முன் வரை, ஏரியில் கலந்த, அம்பத்தூர் சுற்றுவட்டார தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுநீர், அதில் புதைந்த பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றால், ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகள், வறட்சி தன்மையை அடைந்தன.


கடந்த இரண்டு ஆண்டுகளாக, பருவமழை மூலம் கணிசமான நீர் கிடைத்தாலும், அதை ஏரியில் இருப்பு வைக்க முடியாத நிலையே நீடிக்கிறது.வறட்சி காலத்தில், ஏரியை ஆழப்படுத்தவோ, அதில் படிந்த தொழிற்சாலை ரசாயன கழிவு, பிளாஸ்டிக் ஆகியவற்றை, தொழில்நுட்ப ரீதியாக அகற்ற, பொதுப்பணித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


கடந்தாண்டு நீடித்த பருவமழையால், ஏரி முழு அளவு நிரம்பியது. ஆனால், இருப்பு வைக்க முடியாத நிலையால், ஏரியில் வினாடிக்கு, 30,700 கன அடி நீர் வெளியேறி, உபரிநீர் கால்வாய் வழியாக, மாதவரம் ரெட்டை ஏரிக்கு திருப்பிவிடப்பட்டது.கொரட்டூர் ஏரி கரையை பலப்படுத்த, 3 கி.மீ., சுற்றளவிற்கு, 3 அடி உயரத்திற்கு, 13.18 கோடி ரூபாய் செலவில், தடுப்பு சுவர் அமைக்கும் பணி, 3 மாதங்களாக நடந்து வருகின்றன.


மேலும், கொரட்டூர் ஏரியின் உபரிநீர் கால்வாய் சீரமைப்பு பணியும், கடந்த சில தினங்களாக நடந்து வருகின்றன. மொத்தம், 40 லட்சம் ரூபாய் செலவில், ஏரியின் கலங்கல் பகுதி முதல், மாதவரம் ரெட்டேரி வரை, 2.9 கி.மீ., நீளம், 165 அடி அகலம் கொண்ட கால்வாயில், சீமை கருவேல மரம், ஆகாயத்தாமரை, மண் அடைப்பு ஆகியவை அகற்றப்படுகின்றன.கொரட்டூர் ஏரியை, ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்கவும், கொள்ளளவை அதிகரிக்கவும், பொதுப் பணித்துறை நடவடிக்கை எடுக்க,கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஆக்கிரமிப்புகள் உருவாகும் போதே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுப்பதில்லை. அரசியல்வாதிகளுக்கு அடிபணிந்து, ஆக்கிரமிப்பை வளரவிட்டு, பின் அகற்றுவதால் என்ன பயன். கொரட்டூர் ஏரியில், 2004ல் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஆனால், முழுமையாக அகற்றப்படவில்லை. ஆவடி, மோரை பகுதியில் மாற்று இடம் வழங்கினர். அப்படி இருந்தும், தற்போது, 1,000 வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிப்புக்கு காரணமான அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.


சுற்றுச்சூழல் ஆர்வலர்


கொரட்டூர் ஏரியை பாதுகாக்க, கரைகளை பலப்படுத்த, தடுப்புக்கல் அமைத்து வருகிறோம். ஏரியை ஆழப்படுத்த, அரசு அனுமதி வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, அரசின் கையில் தான் உள்ளது.


பொதுப்பணித்துறை அதிகாரி.


கலங்கல் தடுப்பு சேதம்

கொரட்டூர் ஏரி கலங்கலின் ஒருபக்க தடுப்பு சேதமடைந்து, பலவீனமாக உள்ளது. இந்த ஆண்டு பலத்த மழை நீடித்தால், கலங்கல் வழியாக உபரிநீர் கால்வாயில் வெள்ளம் பாயும். அப்போது, தடுப்பு சுவர் மேலும் சேதமடைந்து, அதை ஒட்டிய மண் கரை உடையும் ஆபத்து உள்ளது. சேதமடைந்துள்ள தடுப்பு சுவரை அகற்றி, புதிய தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    இதுநாள்வரை தெரியாமல் இருந்துவிட்டது. இந்த ஏரியை தூர் வாரினால் எவ்வளவு ஆட்டை போடலாம்? சை, அங்குள்ள ஆட்கள் யாரு, ஏன் இதை என்னிடம் இத்தனை நாட்களாக சொல்லவில்ல. கட்சியில் நீங்கள் எல்லாம் இருந்து என்னத்துக்கு?எத்தணை அழகாக காவிரியில் தூர்வாரி தண்ணீரை பூரா கடலில் சேர்த்தோம். கொஞ்சமாவது விவரம் வேண்டாம். இதையெல்லாம் உடனடியாக பார்த்தால்தான் கையில் நாலு காசு பார்க்கமுடியும்.-நாட்டை ஆளுபவர்கள்.

  • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

    ஏரிகளை சுற்றி , அரசு , பூங்காக்கள் அமைத்து, மக்கள் காலை மாலை நேரங்களில் நடை பயிற்சி செய்யவும், சிறுவர்கள் ஓடி ஆடி விளையாட சிறப்பு அமைப்புகளை செய்து , காவல் துறையின் கண்காணிப்பும் கொடுத்து, நல்வழி படுத்தும் வார்த்தைகளை பதாகைகளாக இட்டு பராமரிக்க வேடனும்.ரம்மியமான அந்த சூழ்நிலை மக்களை ஆரோக்கியமாக வைக்கும்.கொள்ளை அடிப்பதே முதல் தொழில் என்று சொல்லி கொடுத்த அரசியல் தலைவரால் தமிழ் நாடு பல சீர் கேடுகளை சந்தித்து வருகிறது.மக்களாக உணராவிட்டால், இது தொடரத்தான் செய்யும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement