Advertisement

செயல்படாத வேளாண் விரிவாக்க மையம்

குன்னுார்:'குன்னுார் கேத்தி பாலாடா பகுதியில் விவசாய கொள்முதல் மையம் அமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கேத்தி, மஞ்சூர், கோத்தகிரி
உட்பட பல்வேறு கிராமங்களில் கேரட், உருளைகிழங்கு, பீட்ரூட், பீன்ஸ், காலிபிளவர், முட்டைகோஸ், பூண்டு, உட்பட மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சமீப காலமாக போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இங்கு விளையும் விளை பொருட்கள் மேட்டுப்பாளையத்திற்கு கொண்டு சென்ற பிறகு, விலை
நிர்ணயம் செய்யப்பட்டு மற்ற பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த காலங்களில் பூண்டுக்கு கிலோ, 250 முதல் 300 ரூபாய் வரை பூண்டுக்கு விலை கிடைத்து வந்த நிலையில், தற்போது, 20 முதல் 50 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைக்கிறது. உரம், கூலி உயர்வு, வேலைக்கு ஆட்கள் கிடைக்காமை போன்ற காரணங்களுக்கு இடையே விலையும் கிடைக்காததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கேத்தி பேரூராட்சி அலுவலகம் அருகே துவங்கப்பட்ட வேளாண் விரிவாக்க மையம், தற்போது பயன்படுத்தாமல் பயனின்றி பூட்டி கிடக்கிறது. இந்த மையமும் பாழடைந்து வருகிறது.
இது தொடர்பாக, கேத்தி பாலாடா பகுதி விவசாயிகள் வடிவேலு, ஹரிகரன் ஆகியோர் கூறுகையில், ''வடமாநிலங்களில் பூண்டு கொள்முதல் குறைந்துவிட்டது. மேட்டுப்பாளையத்தில் விலை நிர்ணயம் செய்யப்படுவதால், அங்கு கொண்டு சென்ற பிறகு, விலை குறித்து தெரிய வருகிறது. இதனால், எந்த பயனும் விவசாயி களுக்கு இல்லை. நீலகிரியில் கொள்முதல் மையம் அமைத்தால், மிகவும் பயனுள்ளதாக அமையும்,'' என்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement