Advertisement

சிறுமிக்கு திருமணம் அதிகாரிகள், 'லேட்'

யானைகவுனி:சிறுமிக்கு திருமணம் நடந்த பின் வந்த, சமூக நலத் துறை அதிகாரிகள், அந்த பெண்ணை, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

சென்னை, யானைகவுனி, என்.எஸ்.சி.போஸ் சாலையைச் சேர்ந்த, முருகன், 25, என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுமிக்கும், குமரன்கோட்டம் திருமண மண்டபத்தில், நேற்று காலை, திருமணம் நடக்க இருந்தது.இதுகுறித்து, பெண்ணின் உறவினர் ஒருவர், யானை கவுனி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.


போலீசார் வருவதற்குள், திருமணம் நடந்து முடிந்தது. பின், சமூக நலத்துறை இளம் பெண்கள் பாதுகாப்பு துறையினர், 10க்கும் மேற்பட்டோர், சம்பவ இடத்திற்கு வந்தனர்.இரு குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தி, ஆலோசனை வழங்கினர். மேலும், அந்த திருமணம் செல்லாது எனக்கூறி, சிறுமியை, அவர் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.


இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது எனக்கூறி, போலீசார், யார் மீதும் வழக்கு பதிவு செய்யவில்லை. அப்படியென்றால், குழந்தைகள் திருமணத்தை, போலீசார் ஆதரிக்கின்றனரா?அந்த சிறுமி, நாளையே, முருகன் வீட்டிற்கு சென்று வசிப்பார். போலீசார், இதை எப்படி தடுப்பர்? சிறுமி திருமணம் தொடர்பாக, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், குழந்தை திருமணங்கள் அதிகரிக்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement