Advertisement

'நல்ல பண்பு மனிதனை முன்னேற்றும்'

பெ.நா.பாளையம்:''எப்போதும், எச்சூழ்நிலையிலும் மாறாத நல்ல பண்பு இருந்தால், ஒருவரை முன்னேற்றம் அடையச் செய்யும்,'' என, ராமகிருஷ்ண மிஷன் துணை தலைவர் சுவாமி கவுதமானந்தாஜி பேசினார்
பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில், 13வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. சுவாமி கவுதமானந்தாஜி பேசுகையில், ''ஒவ்வொருவருக்கும் ஐந்து முக்கிய பண்புகள் இருந்தால், வாழ்க்கையில் அனைத்து நிலைகளையும் கடந்து வெற்றியாளர் ஆகலாம். உண்மை, சுயநலமின்மை, துாய்மை, கடவுள் நம்பிக்கை, தொடர்ந்து நாம் செய்யும் பிரார்த்தனையாகும். நன்றாக படியுங்கள்; நாட்டை நேசியுங்கள்,'' என்றார்.
தேசிய திறந்தவெளி பள்ளி நிறுவன தலைவர் சந்திரபூஷன் சர்மா பேசுகையில், ''உயர் கல்வியில் இன்னும் மாற்றங்கள் அதிகம் வர வேண்டும்.
பல்கலை சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். பல்கலைகளில் உள்ள வெறும் கட்டடங்களில், அவற்றில் உள்ள வசதிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதைக் காட்டிலும், ஒவ்வொரு மாணவனின் கல்வித்தரத்தில் உயர்தரமான மாற்றத்தை கொண்டு வர வேண்டும். தற்போது, உயர்கல்வியில் தேவையில்லாத செலவுகள் அதிகம் உள்ளன,''
என்றார்.
மாற்றுத்திறனாளிகள் நிர்வாகம் மற்றும் சிறப்பு கல்வி, பொது மற்றும்
தகவமைக்கப்பட்ட உடற்கல்வியியல், யோகா, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த, 187 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா பல்கலை துணைவேந்தர் சுவாமி ஆத்மபிரியானந்தா, வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தா, சுவாமி ஆத்மிஸ்வரானந்தா உள்ளிட்டோர் பேசினார். சுவாமி விவேகானந்தா பல்கலை டீன் முத்தையா நன்றி கூறினார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement