Advertisement

கைரேகைக்கு பதிலாக கருவிழி பதிவு 'ஆதார்' எண்ணை உறுதிப்படுத்த புது வசதி

சென்னை: பத்திரப்பதிவின் போது, 'ஆதார்' எண்ணை உறுதிப்படுத்த, கைரேகையை ஒப்பிடுவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வாக, கருவிழி பதிவையும் சரிபார்க்க, சார் பதிவாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சொத்து ஆவணங்களை பதிவு செய்ய வரும் நபர்களின், உண்மை தன்மையை சரிபார்க்க, பல்வேறு வகையான அடையாள சான்றுகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதில், ஆதார் எண்ணையும், ஒரு அடையாள ஆவணமாக, பதிவுத் துறை ஏற்கிறது. ஆதார் எண்ணை தாக்கல் செய்யும்போது அதை உறுதிப்படுத்த, கைரேகை பதிவை, கணினி வாயிலாக ஒப்பிட்டு பார்க்க, அனுமதி உள்ளது. இதற்காக, பதிவுத் துறை இணையதளத்தில், உரிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஆதார் எண்ணை உறுதிப்படுத்த, கைரேகையை ஒப்பிடும்போது, சிலருக்கு கைரேகை தேய்வு உள்ளிட்ட காரணங்களால் உறுதிப்படுத்த
முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நபர்களின் ஆவணங்களை பதிய முடியாத நிலை ஏற்படுகிறது. இச்சிக்கலுக்கு தீர்வாக, ஆதார் எண்ணை உறுதிப்படுத்த, கைரேகை மட்டுமின்றி, கருவிழி பதிவையும் சரிபார்க்க, பதிவுத்துறை இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.இந்த சரிபார்ப்பு நடை முறையை, சட்ட ரீதியானதாக அங்கீகரித்து, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.இதுபோன்று, ஆதார் அடிப்படையில், உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை பதிவு செய்ய, கூடுதல் சாட்சிகள் தேவையா என்பதை முடிவு செய்யும் அதிகாரமும், சார் பதிவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement