Advertisement

'குட்கா' குடோனில் மாதவராவிடம் சி.பி.ஐ., விசாரணை

'குட்கா' ஊழல் விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள, ஆலை உரிமையாளர், மாதவ ராவை, குட்கா குடோனுக்கு அழைத்துச் சென்று, 5 மணி நேரம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்தவர், மாதவ ராவ். இவர், செங்குன்றம் அருகே, ஏழு இடங்களில், சட்ட விரோதமாக, குட்கா ஆலை மற்றும் குடோன் நடத்தி வந்தார்.


அதிரடி விசாரணை :
இதன் பங்குதாரர்களாக, உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ் ஆகியோர் செயல்பட்டனர். இவர்களது வீடு, அலுவலகம் மற்றும் குட்கா ஆலை, குடோனில், வருமான வரித் துறை அதிகாரிகள், 2016ல் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ரகசிய டைரி சிக்கியது. அதில், மாதவ ராவ் மற்றும் அவரது பங்குதாரர்கள், தமிழக அமைச்சர்கள், ஐ.பி.எஸ்., அதிகாரிகள், உணவு பாதுகாப்பு, கலால் துறை அதிகாரிகளுக்கு, பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த குறிப்புகள் இருந்தன.


இந்த குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர், பி.வி.ரமணா, தற்போதைய சுகாதாரத் துறை
அமைச்சர், விஜயபாஸ்கர், டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் சிக்கியுள்ளனர்.


லஞ்சப் பணம்:
அதேபோல், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, செந்தில்முருகன், கலால் வரித்துறை அதிகாரி, எம்.கே.பாண்டியன் ஆகியோரும் சிக்கியுள்ளனர். இவர்களுக்கு, எந்த தேதியில், எவ்வளவு ரூபாய் லஞ்சம் தரப்பட்டது என்ற விபரத்தை, மாதவ ராவ், வருமான வரித்துறை அதிகாரிகளிடம், ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். 40 கோடி ரூபாய் வரை, லஞ்சப் பணம் கைமாறி இருப்பதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம், சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டது. சி.பி.ஐ., அதிகாரிகள், அமைச்சர், டி.ஜி.பி., முன்னாள் கமிஷனர் வீடுகள் உள்ளிட்ட, 40 இடங்களில் சோதனை நடத்தினர்.


பின், மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், செந்தில் முருகன், எம்.கே.பாண்டியன் ஆகியோரை கைது செய்து, நான்கு நாட்கள் காவலில் எடுத்து, விசாரித்து வருகின்றனர்.


விசாரணையில், சென்னையில் பணியாற்றிய, கமிஷனர்கள், இணை, துணை, உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் என, 36 பேர், மாதவ ராவிடம், மாமூல் வாங்கி இருப்பது
தெரிய வந்துள்ளதாக, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதில், டி.எஸ்.பி., மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர், சம்பத்குமார் ஆகியோருக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.


இந்நிலையில், நேற்று பகல், 1:00 மணிக்கு, மாதவ ராவை, அவர், சோத்துப்பாக்கம் சாலையில் நடத்தி வந்த, குட்கா ஆலை மற்றும் குடோனுக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு மாலை, 5:30 மணி வரை, அவரிடம் விசாரணை நடத்தினர்.


அப்போது, குட்கா தயாரிக்க, மூலப் பொருட்களை சப்ளை செய்தோர் யார்; ஆலையில், எவ்வளவு பேர் வேலை பார்த்தனர்; விற்பனை செய்யப்பட்ட இடங்கள்; அதற்கு உதவிய அதிகாரிகள் உள்ளிட்ட விபரங்கள், மாதவ ராவிடம் பெறப்பட்டுள்ளன. குட்கா ஆலை, தயாரிப்பு இயந்திரங்களை, சி.பி.ஐ., அதிகாரிகள், வீடியோ பதிவு செய்தனர். மாதவ ராவின், இரண்டு வங்கி கணக்குகளையும் முடக்கி உள்ளனர்.


- நமது நிருபர் -
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

    ரசிகர்களை வச்சு ஆட்சியை பிடித்த கட்சி ஆட்சியில் ஊழல் என்றால் அடிமைகளை வச்சு ஊழலுக்காகவே கட்சியின் கொள்கையாக மாற்றிய ஊழல் தீயசக்தி குடும்பத்தை எப்படி அழைப்பது.

  • ஆப்பு -

    யூனிபாரம் போட்டா தொப்பை போலீசாயிடுவாங்க....

  • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

    தமிழக அரசின் தலைமை செயலகமே 'குட்கா' குடோன் தான் . ஒரு நடிகர் எந்தவித கொள்கையும் இல்லாம தன் ரசிகர்களை வெச்சு கட்சி ஆரம்பிச்சு ஆட்சியை பிடிச்சா இந்த மாதிரிதான் கொடுமையான ஊழல் நடக்கும் , நாளைக்கு கமலோ ரஜினியோ ஆட்சியை பிடிச்சாலும் இதுதான் நடக்கும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement