Advertisement

262 ஜோடிகளுக்கு திருமணம் : திருவந்திபுரத்தில், 'டிராபிக் ஜாம்'

கடலுார்: திருவந்திபுரத்தில் நேற்று நடந்த, 262 திருமணங்களால், கடலுார் - பாலுார் சாலையில், நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலுார் அடுத்த திருவந்திபுரம், 108 வைஷ்ணவ தலங்களில் ஒன்று. நீண்ட நாட்களாக திருமணம் கைகூடாதவர்கள், வேண்டுதலின்படி, திருமணம் கை கூடினால், இக்கோவிலில் திருமணம் செய்வது வழக்கம்.
கோவிலில் திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்தது.
கோவில் பிரகாரத்தில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், மலை மேல் ஹயக்கிரீவர் சன்னதியில், பிரத்யேக மண்டபம் கட்டப்பட்டு, திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இருப்பினும், ஹயக்கிரீவர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும், இதே சாலையை பயன்படுத்துவதாலும், வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததாலும், போக்குவரத்து
நெரிசல் ஏற்படுகிறது.
நேற்று, ஆவணி மாத இறுதி முகூர்த்தம் என்பதால், 232 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இது தவிர, அச்சாலையில் உள்ள மண்டபங்களில், 30 திருமணங்கள் நடந்தன.
திருமணத்திற்காக, மணமக்களின் உறவினர்கள் வருகை அளவுக்கதிகமாக இருந்ததால், அவர்களின் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டன. இதனால், வாகனங்கள் திருவந்திபுரத்திலிருந்து தொட்டி கிராமம் சாலை வரை நின்றன.
இதனால், பிற வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டி இருந்தது. முன்கூட்டியே திட்டமிட்டு, பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டிய திருப்பாதிரிப்புலியூர் போலீசார், இதை கண்டுகொள்ளவே இல்லை.
காலை, 7:30 மணிக்கே, 'டிராபிக் ஜாம்' ஏற்பட்டது. போக்குவரத்து சீராக காலை, 11:30 மணியானது. கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம், மற்றும் பாலுார் சாலை வரை உள்ள கிராம மக்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி, கடலுார் நகரத்திற்கு வர
முடியாமல், 4 மணி நேரம் தவித்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement