Advertisement

தானாக வெளியேறும் ரத்தம்: சிறுமிக்கு வினோத நோய் பாதிப்பு

கிருஷ்ணகிரி: உடலில் பல்வேறு இடங்களில் தானாக, ரத்தம் வெளியேறும் வினோத நோயால் பாதிக்கப்பட்ட, 10 வயது சிறுமிக்கு, கிருஷ்ணகிரியில் மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த, கங்கோஜிகொத்தூர் பஞ்., ஜெகநாதபுரத்தை சேர்ந்த நாகராஜ் கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமிதேவி. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் அர்ச்சனா, 10, ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு, இரண்டு மாதங்களுக்கு முன், மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது. அடுத்தடுத்து, சில நாட்களில் வியர்வையை போன்றே, கண்கள், மூக்கு, காது, கைகள் உள்ளிட்ட பல இடங்களில் ரத்தம் வெளியேறியது. அவரை, ஆந்திர மாநிலம் குப்பம், ஓசூர், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அழைத்து சென்றும், ரத்தம் வெளியேறுவது நிற்கவில்லை. நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகரிடம், அர்ச்சனாவின் பெற்றோர் மனு அளித்தனர். கலெக்டர் பரிந்துரைப்படி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அர்ச்சனா சேர்க்கப்பட்டு, பல்வேறு பரிசோதனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து, மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோக்குமார் கூறியதாவது: மருத்துவமனையில், சிறுமி அனுமதிக்கப்பட்ட போது, நான்கு முறை ரத்தம் வெளியேறியதால், அவருக்கு, ஒரு யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டது. பரிசோதனை முடிவில், பாதிப்பு எதுவும் இல்லை. இந்த நோயை, 'த்ரோபாஸ்டினியா' என்று அழைப்பர். ரத்த தட்டணுக்கள், ஒன்றை விட்டு ஒன்று, ஒட்டிக்கொண்டிருக்க முடியாமல், பிரியும் போது ஏற்படும் ரத்த வெளியேற்றமாக இருக்கலாம். சிறுமியை, சென்னையில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்க, பரிந்துரை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். கலெக்டர் பிரபாகர் கூறுகையில், ''உயர்தர சிகிச்சையளிக்க, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சிறப்பு அனுமதி பெற்று, சிறுமிக்கு தேவையான அனைத்து உதவிகளும், அரசு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement