Advertisement

சவுதியில் கணவரின் நிலை மனைவி கலெக்டரிடம் மனு

விழுப்புரம்:சவுதி அரேபியா சென்ற கணவரின் உண்மை நிலையை கண்டறிந்து கூறுமாறு மனைவி, கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.


இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம் வடகீரனுாரை சேர்ந்த பிரகாஷ் மனைவி கண்ணியம்மாள்,23; கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:எங்களுக்கு திருமணமாகி 8 ஆண்டாகிளது. இரு குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் கடந்த 2012ம் ஆண்டு கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெண் ஏஜென்ட் மூலம் சவுதி அரேபியா சென்றார். அங்கு லலிதா என்பவர் வீட்டில் வேலை செய்து வந்தார். 7 மாதங்கள் கழித்து வீட்டிற்கு வந்தவர், பண வசதி இல்லாததால் கிராமத்திலேயே கூலி வேலை செய்து வந்தார்.


இந்நிலையில் கடந்தாண்டு சவுதி அரேபியாவை சேர்ந்த லலிதா என்பவர், போக்குவரத்து செலவிற்கு பணத்தை அனுப்பி, எனது கணவரை சவுதி அரேபியாவிற்கு அழைத்து சென்றார். அங்கிருந்து எனது கணவர் அவ்வப்போது எங்களுடன் மொபைல் போனில் பேசி வந்தார்.


இரண்டு மாதங்களுக்கு முன், எனது கணவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், நோட்டரி சான்று அனுப்பினால், உடலை அனுப்பி வைப்பதாக, எனது கணவருடன் தங்கியிருந்த அரியலுார் மாவட்டம் கல்லக்குடியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் எனக்கு மொபைல் போனில் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நான் நோட்டரி சான்று அனுப்பியும், உடலை அனுப்பவில்லை. அதன்பிறகு சந்திரசேகரை தொடர்பு கொள்ள முடியவில்லை.


ஆகவே, எனது கணவரின் நிலையை கண்டறிந்து உதவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். அவருடன் அவரது இரு குழந்தைகள், மாமனார் கனகராஜ், மாமியார் அம்மணி உடனிருந்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement