Advertisement

அதிரடி! தீவிர அரசியலில் ஈடுபட கண்ணன் முடிவு மீண்டும் தனி கட்சி துவக்கவும் திட்டம்

புதுச்சேரி:தீவிர அரசியலில் ஈடுபடுவது என, முன்னாள் அமைச்சர் கண்ணன் முடிவு செய்துள்ளதால், புதுச்சேரி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.


தொண்டர்கள் செல்வாக்குமிக்க தலைவராக, புதுச்சேரி அரசியலில் முத்திரை பதித்தவர் கண்ணன். காங்., கட்சியின் மூத்த தலைவராக திகழ்ந்த அவர், அமைச்சர், சபாநாயகர், எம்.பி., உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.


காங்., கட்சியில் இருந்து மூப்பனார் விலகி, தமிழ் மாநில காங்., (த.மா.கா.,) கட்சியை ஆரம்பித்த போது, புதுச்சேரியிலும் த.மா.கா.,வை கண்ணன் ஆரம்பித்தார். அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, காங்., கட்சியை வீழ்த்தி, ஆட்சியை கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து, தாய் கட்சியான காங்கிரசில் சேருவதும், பின், கருத்து வேறுபாடுகள் காரணமாக, கடுமையான விமர்சனத்துடன் விலகுவதுமாக இருந்தார். அடுத்தடுத்து, புதுச்சேரி மக்கள் காங்., - புதுச்சேரி முன்னேற்ற காங்., ஆகிய கட்சிகளை ஆரம்பித்து, வேட்பாளர்களை களமிறக்கினார்.


கடந்த தேர்தலுக்கு முந்தைய லோக்சபா தேர்தலில், தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்த கண்ணனை, காங்., கட்சிக்கு மீண்டும் நாராயணசாமி அழைத்து வந்தார். அந்த தேர்தலில் காங்., வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். நாராயணசாமி வெற்றி பெற்று மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். கண்ணனுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்பட்டது.


மீண்டும் போர்க்கொடி உயர்த்திய கண்ணன், கடந்த சட்டசபை தேர்தலின்போது, அ.தி.மு.க.,வில் ஐக்கியமானார். தேர்தலுக்குப் பின், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். கடந்த 2 ஆண்டுகளாக மவுனம் காத்து வந்த கண்ணனை தனி கட்சி துவக்குமாறும், தீவிர அரசியலில் ஈடுபடு மாறும் அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.


நீண்ட யோசனைக்குப் பின், தீவிர அரசியலில் ஈடுபட கண்ணன் முடிவு செய்துள்ளார்; தனி கட்சி துவக்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக, 100 அடி சாலையில் உள்ள ஓட்டல் சற்குருவில் இன்று (12ம் தேதி) மாலை தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளார். ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, அதிரடி அறிவிப்புகளை வெளியிடுகிறார்.


புதுச்சேரி அரசியலை பொறுத்தவரை, கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு தேர்தலிலும், கண்ணனை சுற்றியே அரசியல் நடந்து வருகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், அவரது அதிரடி நடவடிக்கை அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement