Advertisement

இயற்கை முறையில் பழங்கள் உற்பத்திக்கு... முயற்சி! 250 ஏக்கரில் பண்ருட்டி பலா, உறையூர் கொய்யா

விருத்தாசலம்:மாவட்டத்தில் 27.17 லட்சம் ரூபாயில் இயற்கை 'அங்கக இடு பொருட்களை வழங்கி, 250 ஏக்கர் பரப்பில் பலா, கொய்யா தோட்டங்களை இயற்கை வழியில் சாகுபடி செய்யவும் மற்றும் பராமரித்திடவும் தோட்டக்கலை மூன்றாவது ஆண்டாக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.


முக்கனிகளில் ஒன்றாகக் கருதப்படும் பலா, பண்ருட்டி மண்ணில் விளைவதால் தேனின் இனிப்பையும் தாண்டி, உலக அளவில் வாடிக்கையாளர்கள் ஈர்த்துள்ளது. அதேபோன்று, லக்னோவில் கண்டுபிடிக்கப்பட்டாலும் (எல்-49) விழுப்புரம் மாவட்டத்தில் 'அரசூர்' கொய்யா என்றும், கடலுார் மாவட்டத்தில் 'உறையூர்' கொய்யா என்றும் விவசாயிகளால் அழைக்கப்படும் கொய்யாவிற்கு மாநிலம் முழுவதுமுள்ள மக்களிடம் வரவேற்பு உள்ளது.


ஏழைகளின் ஆப்பிள் எனப்படும் கொய்யா உடல் நலம் பேண ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி மருத்துவர்கள் பரிந்துரைப்பதால், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் அமோகமாக விளைந்து, விற்பனைக்கு வருகிறது.கடலுார் மாவட்டத்தில் அண்ணாகிராமம், பண்ருட்டி ஒன்றிய பகுதிகளில் 2,007 ஏக்கர் பரப்பளவில் கொய்யாவும்; பண்ருட்டி, பாலுார், விருத்தாசலம் பகுதிகளில் 1,773 ஏக்கரில் பலாவும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.


மத்திய அரசின் பாரம்பரிய இயற்கை வேளாண்மைத் திட்டத்தில் பாலா, கொய்யாவை சேர்த்து 100 சதவீதம் இயற்கை வழி வேளாண்மைக்கு மாவட்ட தோட்டக்கலைத் துறை, கடந்த 2015-16ம் ஆண்டில் திட்டமிட்டது. இதற்காக, அண்ணாகிராமமம், பண்ருட்டி பகுதிகளில் 250 ஏக்கரில் பலா, கொய்யா விவசாயிகளை தேர்ந்தெடுத்தது; அவர்களுக்கு, கடந்த 2015-16ம் ஆண்டில் 14.13 லட்சம் ரூபாயில் இயற்கையான அங்கக இடு பொருட்கள் மற்றும் பராமரிப்பு தொழில் நுட்பங்களை வழங்கியது.


தொடர்ந்து, கடந்த 2016-17ம் ஆண்டில் 9.97 லட்சம் ரூபாய் செலவிலும், நடப்பாண்டில் 2.9 லட்சம் ரூபாய் செலவிலும் அங்ககப் பொருட்கள் வழங்கியும், பாலுார் காய்கறி ஆராய்ச்சி நிலையம், விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள், தோட்டக்கலைத் துறை அதிகாரிகளைக் கொண்டு விவசாயிகளுக்கு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்தி வருகின்றனர்.


மூன்றாண்டுகள் தொடர்ந்து, ரசாயனம் இல்லாத, அங்கக இடு பொருட்களைக் கொண்டு பராமரிக்கப்படும் கொய்யா, பலா விவசாய நிலங்களில் இலை, பழம், மண் மாதிரிகள் மத்திய அரசின் நிறுவனமான - என்.ஏ.பி.எல்., (நேஷனல் அக்ரிடிடேஷன் போர்டு பார் டெஸ்டிங் அண்ட் காலிப்ரேஷன் லேபாரட்ரீஸ்) அங்கீகாரம் பெற்ற சென்னை, திருச்சி, கோயம்புத்துார் பரிசோதனைக் கூடங்களில் பரிசோதனை செய்து, சான்றிதழ் வழங்கப்படும்.


பின்னர், இந்த பழங்கள் இயற்கை வழி சாகுபடி சான்றிட்டு விற்பனை செய்யப்படும். இதன் மூலம் மக்களின் உடல் நலம் பேணப்படுவதுடன், விவசாயிகளுக்கும் வருவாய் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.மேலும், இயற்கை வழியில் பராமரிக்கப்படும் பண்ருட்டி பலா, உறையூர் கொய்யா சுவை கூடும் என்பதால் வெளி மாநிலம், வெளிநாடுகளின் சந்தைகளில் பழங்களாகவோ, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாகவோ வரவேற்பு பெறும் என தோட்டக்கலை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement