Advertisement

தெலுங்கானாவில் புதிய கூட்டணி

ஐதராபாத்: 'தெலுங்கானா மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சியை, உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என, புதிதாக உருவாகி உள்ள, காங்., - தெலுங்கு தேசம் - மார்க்சிஸ்ட் கூட்டணி வலியுறுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் காபந்து ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், மாநில சட்டசபையை, முதல்வர் சந்திரசேகர ராவ் கலைத்தார்.இதையடுத்து, சட்டசபை தேர்தல் நடக்கும் வரை, காபந்து முதல்வராக இருக்கும்படி, முதல்வர் சந்திரசேகர ராவை, கவர்னர் நரசிம்மன்
கேட்டுக் கொண்டார். இந்த மாநிலத்திற்கு, இந்தாண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடக்கும்
என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில், புதிய கூட்டணி உருவாகி உள்ளது. பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம், காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியும் இணைந்துள்ளது.நேற்று மாலை, இந்த மூன்று கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், கவர்னர் நரசிம்மனை சந்தித்து பேசினர்.அப்போது, 'மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சியை, உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என, வலியுறுத்தினர்.
'மாநிலத்தில், சந்திரசேகர ராவ் முதல்வராக தொடர்ந்தால், சுதந்திரமான தேர்தல் நடக்காது. முன்கூட்டியே தேர்தலை நடத்தும் நிலைக்கு தள்ளியதற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்' என, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement