Advertisement

சிலை கடத்தல் விபரங்கள் கேட்கிறது மத்திய அரசு

சென்னை: சிலை கடத்தல் வழக்கு விபரங்களை, மத்திய அரசு கோரியிருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.
தமிழகத்தில் நடந்த சிலை திருட்டு, கடத்தல் வழக்குகளை விசாரிக்க, போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்பிரிவை, நீதிபதி மகாதேவன்
நியமித்தார்.
இந்தப் பிரிவு, சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி, தமிழக அரசு
உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது.
சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றிய, தமிழக அரசின் உத்தரவுக்கு, டிவிஷன் பெஞ்ச், இடைக்கால தடை விதித்தது. இவ்வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ''சிலை கடத்தல் வழக்கு விபரங்களை கேட்டு, மத்திய அரசு தரப்பில் கடிதம் வந்துள்ளது; அதற்கு, நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.
சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன், ''தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு, சி.பி.ஐ., இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.
உடனே, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், ''வழக்கு விபரங்களை கேட்டு தான், மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது.
''இதன் விபரங்களை தாக்கல் செய்கிறேன்,'' என்றார். இதையடுத்து, விசாரணையை, வரும், ௨௪ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement