Advertisement

பஸ்சில் தொங்கியபடி பயணம்:ஆபத்தை உணராத கல்லூரி மாணவர்கள்

திருத்தணி:ஆபத்தை உணராமல் கல்லுாரி மாணவர்கள், பேருந்தின் மேற்கூரை மற்றும் படிகள் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர். இதை போலீசாரும், கண்டும், காணாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, மேதினாபுரம் பகுதியில், திருத்தணி அரசினர் கலைக் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு, 2,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.திருத்தணியில் இருந்து 5 கி.மீ., துாரத்தில் கல்லுாரி உள்ளதால், பெரும்பாலான மாணவர்கள் பேருந்துகளில் தான் பயணம் செய்கின்றனர்.


'இளங்கன்று பயம் அறியாது' என்ற பழமொழிக்கு ஏற்ப, கல்லுாரி மாணவர்கள் கல்லுாரிக்கு செல்லும் போது, பேருந்துகளில் சாகச பயணம் செய்து தான் செல்கின்றனர்.
அதாவது, கல்லுாரி மாணவர்கள் பேருந்தின் மேற்கூரை, படிகள், ஏணிப்படி மற்றும் ஜன்னல் ஆகியவற்றை பிடித்து தொங்கிய படி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
தினமும் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்களை கண்டும், காணாமல் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசார் உள்ளனர்.

இதுபோல் ஆபத்தான பயணம் செய்வதை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்லுாரி மாணவர்கள் வசதிக்காக, காலை, 8:30 மணி முதல், காலை, 10:00 மணி வரை, ஐந்து சிறப்பு பேருந்துகள் மற்றும் திருத்தணி - திருவள்ளூர் செல்லும் பேருந்துகளிலும் மாணவர்கள் பயணம் செய்கின்றனர். பல பேருந்துகள் இயக்கினாலும், மாணவர்கள், குறிப்பிட்ட பேருந்தில் மட்டுமே ஏறி செல்வதால், ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
நடத்துனர், ஓட்டுனர்கள் பலமுறை மாணவர்களுக்கு அறிவுறுத்தியும், மாணவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.போக்குவரத்து பணிமனை மேலாளர், திருத்தணி.

கல்லுாரிக்கு குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதால், நாங்கள் பேருந்துகளில் தொங்கியபடி பயணம் செய்ய வேண்டியுள்ளது. திருத்தணி - சென்னை வழியாக இயக்கப்படும் அனைத்து அரசு பேருந்துகளும் கல்லுாரி வழியாக தான் செல்கின்றன. அந்த பேருந்துகள் நின்று செல்வதில்லை. பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என, பலமுறை போராட்டம், மறியல் நடத்தியுள்ளோம். கல்லுாரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்.அரசு கல்லுாரி மாணவர்கள், திருத்தணி

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement