Advertisement

ஆக்கிரமிப்பால் குட்டையாக மாறும் தாங்கல் ஏரி

மாதவரம்:ஆக்கிரமிப்பாளர்களால், கழிவுநீர் குட்டையாக மாறும் புத்தகரம், தாங்கல் ஏரி, குடிமராமத்து பணி மூலம், நிலத்தடி நீர் ஆதாரத்திற்காக மேம்படுத்தப்பட வேண்டும்

என, கோரிக்கை எழுந்துஉள்ளது.

சென்னை, மாதவரம் மண்டலம், 24வது வார்டு, புத்தகரத்தில், புறவழிச்சாலையை ஒட்டி, 42.36 ஏக்கர் பரப்பளவில், தாங்கல் ஏரி, உள்வாய் மற்றும் நீர்வரத்து கால்வாய் ஆகியவை உள்ளன.
நடவடிக்கைமழைக்காலத்தில் ஏரி நிரம்பி, சுற்றுவட்டாரங்களின் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு உதவியது. இந்நிலையில், ஏரியின், 40 சதவீத பகுதி, தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியது.
அதில், 600 சதுர அடி இடம், 3 முதல், 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அவற்றை, விவசாய நிலம் என்று நம்பி வாங்கியவர்கள், அவற்றுக்கான சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை எதிர்பார்த்தனர்.

அப்போதைய, மாநகராட்சி ஆளும் கட்சி பிரமுகர்கள் மூலம், அனைத்து வசதிகளும் கிடைத்தன. இந்நிலையில், நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற, அரசு நடவடிக்கை எடுத்தது.
கடந்த, 2016 மார்ச்சில், தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாதவரம் தாலுகா அதிகாரிகள், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை துவக்கினர்.
அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில், தடை உத்தரவு பெற, கால அவகாசம் கேட்கப்பட்டது. அதனால், பணி தற்காலிகமாக நிறுத்தப் பட்டது.இதையடுத்து, சட்டசபை தேர்தல் பணி துவங்கியதால், ஆக்கிரமிப்பு அகற்றம் முழுமையாக நிறுத்தப்பட்டது.

கருவேல மரங்கள்

ஆனால், கடந்தாண்டு, அந்த ஏரியை ஒட்டிய சிறுவர் பூங்கா அருகில், 24வது வார்டுக்கான, கழிவுநீரகற்று நிலையம், சென்னை குடிநீர் வாரியம் மூலம் கட்டப்பட்டது.அந்த நிலையத்தின் பின்புறத்தில், மண் நிரப்பி, ஏரி சமதளமாக்கப்பட்டு உள்ளது.இதனால், அந்த ஏரி மீண்டும் தனியார் ஆக்கிரமிப்பில், சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.கழிவுநீரகற்று நிலையம் அருகே, பள்ளங்கள் வெட்டப்பட்டுள்ளன. அதில், அம்பத்தூர், மாதவரம் சுற்றுவட்டாரங்களில் இருந்து, டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் கழிவுநீர் விடப்படுகிறது.

பள்ளங்கள் வழியாக, கழிவுநீர் ஏரியில் கலக்கிறது. இரவு மற்றும் அதிகாலை நேரத்தில், கழிவு நீர் டேங்கர் லாரிகள், ஏரியில் கழிவுநீர் விடுவது தொடர்கிறது.அதற்கு வசதியாக, ஏரியில் கருவேலமரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.

நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு உதவக்கூடிய, புத்தகரம் தாங்கல் ஏரியின் ஆக்கிரமிப்புகளை, முழுமையாக அகற்றி, குடிமராமத்து பணி மூலம் மேம்படுத்த வேண்டும். புதிதாக நீர்நிலைகளை உருவாக்க முடியாத நிலையில், ஏற்கனவே இருக்கின்ற ஏரியை மீட்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சமூக ஆர்வலர்கள், அம்பத்துார்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement