Advertisement

மேகதாது அணை விவகாரம் : மோடி- - குமாரசாமி சந்திப்பு

புதுடில்லி: காவிரி நதியின் குறுக்கே, மேகதாது அணை கட்டுவது தொடர்பாக, கர்நாடகா முதல்வர் குமாரசாமி தலைமையிலான உயர்மட்ட குழு, பிரதமர் நரேந்திர மோடியை, நேற்று, நேரில் சந்தித்தது.கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையில், மதச் சார்பற்ற ஜனதா
தளம் - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், காவிரி நதியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில், 5,912 கோடி ரூபாய் செலவில் அணை கட்ட, மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கு, தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இந்நிலையில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான உயர் மட்ட குழு, டில்லியில் நேற்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியது.அப்போது, மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு கூறியுள்ள, பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்து தீர்வு காண, கூட்டத்தை கூட்டும்படி, குமாரசாமி வேண்டுகோள் விடுத்தார்.

கர்நாடகா மாநில நீர்வளத் துறை அமைச்சர், டி.கே.சிவகுமார், டில்லியில் நிருபர்களிடம்
கூறியதாவது:மேகதாது அணை கட்டுவது தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண, இரு மாநில முதல்வர்கள் பங்கேற்கும் வகையில் கூட்டத்தை கூட்டும்படி, பிரதமர்
நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்தோம்.உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு, 177.25 டி.எம்.சி., தண்ணீர் தரப்பட வேண்டும். மாறாக, ஆக., 31
வரை, தமிழகத்திற்கு, 314.40 டி.எம்.சி., தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement