Advertisement

நுண்ணுாட்ட கலவை மானியம் நிறுத்தம் விலை ஏற்றத்தால் விவசாயிகள் தவிப்பு

பொன்னேரி:விளை நிலங்களில் அடியுரத்திற்காக பயன்படுத்தப்படும் நுண்ணுாட்ட கலவைக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் நிறுத்தப்பட்டதுடன், விலையும் அதிகரித்து உள்ளதால், விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
மீஞ்சூர் ஒன்றியத்தில், சம்பா பருவத்திற்காக, விவசாயிகள் விளை நிலங்களை உழுது தயார்படுத்தி வருகின்றனர்.நடவுப் பணிகளை மேற்கொள்ளும் முன், விளை நிலங்களில், இரும்பு, மாங்கனீசு, போரான், தாமிரம், மக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ள நுண்ணுாட்ட கலவையை அடியுரமாக பயன்படுத்த, வேளாண் துறை அறிவுறுத்தி வருகிறது.

இவை, நெற்பயிர்களில் கதிர்கள் நன்கு செழிப்பாக வளரவும் உதவுகிறது. நெல் மணிகள் திரட்சியாகவும், பருமனாகவும் இருக்கும் என்பதால், இந்த நுண்ணுாட்ட கலவையை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.ஒரு ஏக்கருக்கு, 5 கிலோ நுண்ணுாட்ட கலவையை, 20 கிலோ மணலுடன் கலந்து, விளை நிலங்களில் துாவிவிட்டு, நடவுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


வேளாண் துறை மூலம், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த நுண்ணுாட்ட கலவை, தற்போது, விலை அதிகரித்து உள்ளதால், கூடுதல் செலவினங்க ளால், விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.கடந்த ஆண்டு, ஒரு கிலோ நுண்ணுாட்ட கலவை, 50 சதவீத மானிய விலையில், 14 ரூபாய்க்கு வேளாண் துறை வழங்கியது.


தற்போது, மானியம் நிறுத்தப்பட்டதுடன், ஒரு கிலோ, 42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வேளாண் துறையினரிடம் விவசாயிகள் கேட்டால், மானியம் இல்லை எனவும், ஜி.எஸ்.டி.,
வரியால் விலை உயர்வு எனவும் கூறுகின்றனர்.விவசாயிகளுக்கு ஏற்பட்டு உள்ள கூடுதல் செலவினங்களை கருத்தில் கொண்டு மானிய விலையில், நுண்ணுாட்ட கலவையை வழங்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement