Advertisement

வறட்சியால் மாவட்ட விவசாயிகள் தவிப்பு!. வடகிழக்கு பருவமழைக்கு காத்திருப்பு

திருக்கோவிலுார்: தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் சம்பா சாகுபடி துவங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும், மாவட்ட விவசாயிகள் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையாவது கைகொடுக்குமா என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

வங்காள விரிகுடாவில் துவங்கி‚ மேற்கு தொடர்ச்சி மலையான கல்வராயன் மலைவரை நீளும் விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது தென்பெண்ணையாறு.
இது மாவட்டத்தின் 7-0 சதவீத குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் மாவட்டத்தின் பிரதான தொழிலான விவசாயத்திற்கும் ஆதாரமாக உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனுார் அணை நிரம்பினால் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இதன் மூலம் கரும்பு‚ நெல் என முப்போக பயிர் செய்யும் செழுமையான இடமாக தென்பெண்ணை ஆற்றை ஒட்டிய பகுதி விளங்கியது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அரசு மணல் குவாரி‚ தனிநபர்கள் மணல் கொள்ளை என தென்பெண்ணையாற்றில் சட்டத்திற்கு புறம்பாக பல மீட்டர் ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சென்றது.

இதனால் விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கே வானத்தை வெறித்து பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக மூங்கில்துறைப்பட்டில் துவங்கி திருக்கோவிலுார்‚ மெய்யூர்‚ திருவெண்ணைநல்லுார் என பசுமை போர்த்திய வயல்வெளிகள் இன்று எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து வறண்டு கிடக்கிறது.

தென்பெண்ணை விவசாயிகளின் நிலைதான் இது என்றால் மாவட்டத்தின் பிற நீர்நிலைகளான வீடூர்‚ கோமுகி‚ மணிமுத்தா அணைக்கட்டுகளும் வறண்டு கிடக்கிறது. இதனை நம்பியிருக்கும் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், ஏரி‚ குளங்களை நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் நிலை அதைவிட பரிதாபம்.

வழக்கமாக கைகொடுக்கும் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு கேரளா‚ கர்நாடகாவில் வெளுத்து வாங்கினாலும்‚ விழுப்புரம் மாவட்டத்தில் பொய்த்தது. இதனால் மாவட்டத்தில், பயிரிடப்பட்டிருந்த பல ஆயிரம் ஏக்கர் கரும்பு பயிர்கள் தண்ணீரின்றி கருகியதால், கரும்பு விவசாயிகள் கண் கலங்கி நிற்கின்றறனர்.

இந்நிலையில் ஆடி‚ ஆவணி மாதங்களில் பெய்ய வேண்டிய பருவ மழை பெய்யாததால், சம்பா நெல் சாகுபடியை துவக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எதிர்வரும் வடகிழக்கு பருவமழையாவது கைகொடுக்குமா என பெரும் ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement