Advertisement

நாகை சாலை ஆர்ஜித நிலத்திற்கு பண பட்டுவாடா ஜரூர்! லோக்சபா தேர்தலுக்குள் துவக்க மத்திய அரசு திட்டம்

கடலுார்: விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை (47ஏ) பணிக்காக ஆர்ஜித நிலத்திற்கு பணம் பட்டுவாடா செய்யும் பணி முடியும் தருவாயில் உள்ளது. லோக்சபா தேர்தலுக்குள் பணியை துவக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.


தமிழகத்தில் பெருகி வரும் வாகனப் பெருக்கத்திற்கு ஏற்றவாறு தொலைநோக்கு பார்வையோடு பல்வேறு அகல சாலைகளுக்கு திட்டமிடப்பட்டு வருகிறது. அதன்படி பல புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி பஸ் நிலையம் செல்லாமல் புறவழிச்சாலை வழியாக நாகை வரை செல்லும் 4 வழிசாலை அமைக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டது.
அதற்காக 1800 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு, கடந்த 2012ம் ஆண்டு மத்திய அரசிடம் அனுமதி பெற்றது.

இத்திட்டத்திற்காக மாவட்ட வருவாய் அலுவலர்கள், தனி தாசில்தார்கள், அலுவலகங்கள் நியமிக்கப்பட்டனர். புதுச்சேரி அருகே திருக்காஞ்சியில் இருந்து துவங்கும் இந்த சாலை வளவனுார், கெங்கராம்பாளையம், வில்லியனுார் அருகே உள்ள தென்னலில் திரும்பி, ரெட்டிச்சாவடி, கன்னியகோவில், தோட்டப்பட்டு, ராமாபுரம், அன்னவல்லி ஆகிய கிராமங்கள் வழியாக சிப்காட் குடிகாடு பகுதியில் இணைகிறது. அங்கிருந்து சிதம்பரம், காரைக்கால், நாகப்பட்டினம் சென்றடைகிறது.

இத்திட்டத்தில் சாலையின் மையத்தில் சென்டர் மீடியன் அமைக்கப்படவுள்ளது. விழுப்புரம், கடலுார், புவனகிரி, திருக்கடையூர், காரைக்கால் ஆகிய இடங்களில் புறவழிச்சாலை அமைகிறது. கடலுார் புற வழிச்சாலை பெண்ணையாற்றில் சாவடி அருகே உயர்மட்ட பாலமும், கெடிலம் ஆற்றில் ஒரு உயர்மட்ட பாலமும் அமைக்கப்படவுள்ளது.

சாவடி அருகே செல்லும் இந்த சாலை கேப்பர் மலை வழியாக சென்று விருத்தாசலம் சாலையில் உள்ள அன்னவல்லி கிராமத்தின் வழியாக குடிகாட்டை சென்றடைகிறது. இந்த சாலைக்கு தேவையான நிலம் ஆர்ஜிதப்படுத்தப்பட்டு அதற்கான இழப்பீட்டுத் தொகை நிலம் கொடுத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் பட்டுவாடா செய்யும் பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. பணம் முழுவதும் பட்டுவாடா செய்யப்பட்டபின் சாலை போடும் பணி விரைவில் துவங்கும்.

விரைவில் லோக்சபா தேர்தல் வர இருக்கிறது. மத்திய அரசு கொண்டு வரும் இந்த சாலை திட்டத்தை சாதனையாக காண்பித்து ஓட்டுக்களை பெறுவதற்கு சாதகமாக இருக்கும் என்பதால் தேர்தலுக்குள் இத்திட்டத்தை துவங்க வேண்டும் என மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement