Advertisement

ஆட்டோ சாமி...


நாகை மாவட்டம் சீர்காழி பகுதி திருநாங்கூர் வட்டத்தில் உள்ள பதினொரு திவ்ய தேசங்களில் ஒன்றுதான் கீழச்சாலை மாதவப்பெருமாள் கோவில்.
திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இந்த திருத்தலத்திற்கு பஸ் வசதி கிடையாது ஆட்டோ கார் போன்ற வாகனங்களில் பக்தர்கள் வந்து இறங்குகின்றனர் தரிசனம் முடித்ததும் திரும்ப இங்கு இருந்து ஆட்டோ பிடித்து செல்கின்றனர்.

இத்திருத்தலத்தில் இறங்கியதும் அங்கே அர்ச்சகருக்கு நிகரான தோற்றத்துடன் இருந்த பெரியவர் ஒருவரை அணுகி, ‛சுவாமியை தரிசிக்கணும் நீங்கதானே அர்ச்சகர்?' என்று பக்தர் ஒருவர் கேட்டதும் ‛நான் அர்ச்சகர் இல்லீங்க, ஆட்டோ டிரைவர்ங்க' என்கிறார் அந்தப் பெரியவர் அடக்கமாக

நம்பமுடியாமல் அனைவரது பார்வையும் அவர் மீது பதிகிறது இதோ அவர் ஆட்டோ ஒட்டும் கதையை அவரே சொல்கிறார்

என் பெயர் சுதர்சன் வயது 64 ஆகிறது கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இந்தப்பகுதியில் ஆட்டோ ஒட்டிவருகிறேன் ஆட்டோ சாமி என்றால் எல்லோருக்கும் தெரியும்

அப்பா பெயர் ராமானுஜம் ஆசிரியராக இருந்தார் மகா நேர்மையானவர் திடீரென இறந்துவிட்டார் எனக்கு கிழே நான்கு தங்ககைள் அப்பாவோட பென்ஷன் பணம் மட்டுமே வருமானம் அதில் அரிசி மட்டுமே வாங்கமுடியும் இருந்தாலும் அம்மா சித்ரா எல்லாவற்றையும் சமாளித்தார் அவர் ஒரு தெய்வம் மட்டுமல்ல தைரியசாலியும் கூட பல நாள் கஞ்சியும் ஊறுகாயும்தான் சாப்பாடு இருந்த நிலபுலன்களை எல்லாம் விற்று நான்கு பெண்களுக்கும் திருமணம் செய்துவைத்தார் எனக்கும் திருமணம் செய்துவைத்தார் எல்லா கடமையையும் முடித்த திருப்தியோடு அவரும் போய்ச் சேர்ந்துவிட்டார்.

எனக்கு கொஞ்சம் அரசியலில் ஈடுபாடு இருந்தது ஒரு பெரிய கட்சியின் உறுப்பினர் கார்டு கூட வைத்திருந்தேன் உள்ளூர் அமைச்சர் ஒருவரை நேரி்ல் பார்த்து எனது பட்டப்படிப்பிற்கு ஏற்ற ஒரு வேலை தருமாறு கேட்டேன் அவர் பிராமணராக இருப்பவர்களுக்கு உதவுவது இல்லை என்றார் அவர் முன்னாலேயே கட்சியின் உறுப்பினர் கார்டை கிழித்துப்போட்டுவி்ட்டு அரசியலுக்கும் முழுக்கு போட்டுவிட்டு திரும்பினேன்.

அப்பா எனக்கான விட்டுச்சென்ற சொத்து என்று இருந்த சிறிதளவு பணத்தில் ஒரு ஆட்டோ வாங்கி ஒட்ட ஆரம்பித்தேன்,.உறவினர் கேலி செய்தனர். உழைத்து பிழைக்கிறோம் இதில் என்ன கேவலம் என்று என்னை நானே தட்டிக் கொடுத்துக் கொண்டேன்,அப்பா கற்றுக் கொடுத்த நேர்மையும் நியாயமும் என்னை நல்ல நிலையில் வைத்துள்ளது.

இந்தப்பகுதியில் உள்ள பதினொரு திவ்ய தேசங்களையும் ஒரு ‛கைடு' போல ஆட்டோவில் கூட்டிப்போய் காட்டுவேன், சீர்காழி பகுதியில் சாமி ஆட்டோ என்றால் எல்லோருக்கும் தெரியும் நான் யாரிடமும் சவாரிக்கு இவ்வளவு என்று கறராக கேட்பது இல்லை பயணத்தின் முடிவி்ல் நீங்கள் தருவதை தாருங்கள் என்றுதான் சொல்வேன் அவர்களும் மனம் நிறையும்படி தந்து செல்வர்

இப்படித்தான் ஒரு தம்பதியினர் என் ஆட்டோவில் பயணித்தனர் பயணத்தின் போது என் குடும்பம் பற்றி விசாரித்தனர் பையன் குருராஜன் பிளஸ் டூவில் நல்ல மார்க் எடுத்துள்ளான் என்ஜீனிரிங் கல்லுாரியில் சேர்க்கணும் பண வசதி இல்லை என்று சொல்லிக்கொண்டு இருந்தேன் எல்லாவற்றையும் குறித்துக் கொண்டார் பிறகு போய்விட்டார்.

ஒரு நாள் பையன் விருப்பப்பட்ட கல்லுாரியில் இருந்து போன் வருகிறது வந்து கல்லுாரியில் சேரும்படி பையனும் சேர்ந்து நன்றாக படித்து தற்போது வளைகுடா நாட்டில் நல்ல வேலையில் இருக்கிறான்.‛ போதும்பா

ஆட்டோ ஒட்டினது என்கிறான். நாலு பேரை பார்க்கலாம் அதுவும் போக நாம சம்பாதி்ச்சு சாப்பிடுற சந்தோஷம் தனி என்பதால் தொடர்ந்து ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருக்கிறேன் இப்போது ரொம்ப துாரம் ஒட்டுவது இல்லை என் தேவையை சுருக்கிக்கொண்டு அதற்கேற்ப நிம்மதியாக வாழ்கிறேன்.


மாதவ பெருமாள் சன்னதி வாசலில் வீடு இருக்கிறது, நித்ய கட்டளையாக பெருமாளுக்கு பிரசாதம் செய்யும் பாக்கியம் கிடைத்திருக்கிறது,என்னைப் புரிந்து கொண்டு என்னுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தும் என் மனைவி ரேவதி இருக்கும் வரை எனக்கு எந்த கவலையும் இல்லை,வேறு தேவையும் இல்லை என்று சொல்லும் சுதர்சனுடன் பேசுவதற்கான எண்:9486116242.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    The same gentleman who refused job for 'Brahmins' will come at their door step begging for vote No wonder many do not go voting after such experience

  • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

    "மாதவ பெருமாள் சன்னதி வாசலில் வீடு இருக்கிறது, நித்ய கட்டளையாக பெருமாளுக்கு பிரசாதம் செய்யும் பாக்கியம் கிடைத்திருக்கிறது,என்னைப் புரிந்து கொண்டு என்னுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தும் என் மனைவி ரேவதி இருக்கும் வரை எனக்கு எந்த கவலையும் இல்லை,வேறு தேவையும் இல்லை" இது தானே கொடுப்பினை... இதை விட பணம்,காசு வேறு என்ன பெரிய சுகத்தையி, சௌகரியத்தையோ எத்தனை நாட்களுக்கு கொடுக்கும்.,???

  • G.Krishnan - chennai,இந்தியா

    உழைத்து சம்பாதித்து உண்ணுகின்ற அந்த சுகமே தனிதான் . . . . . எந்த வேலையாயிருந்தாலும் தப்பில்லை . . . .ஆட்டோ ஓட்டி உழைத்து சம்பாதிப்பது தவறில்லை . . . . . . .பிறரை ஏமாற்ற கூடாது . . . . .அடுத்தவரின் உழைப்பை சுரண்ட கூடாது . . . .திருட கூடாது . . . .பொய் சொல்ல கூடாது . . .நேர்மையாக எந்த வேலை செய்தலும் அது சரியானதே . . . .ஆட்டோ சாமிக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • nicolethomson - bengalooru,இந்தியா

    அவர் பிராமணராக இருப்பவர்களுக்கு உதவுவது இல்லை என்றா சொன்னார்? அப்படி நிகழ்ந்திருந்தால் அதை விட சீர்கேடு எதுவுமில்லை,

  • K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா

    உங்களின் "ஆட்டோ சாமி" பதிவு, மிகவும் யதார்த்தமாகவும், உண்மையான பதிவாகவும் இருப்பதால் உங்களை நான் மனமார போற்றுகிறேன், இதைப்போல நீங்கள் இன்னும் நிறைய பதிவுகள் கொடுக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement