Advertisement

அண்ணா நூலக நிகழ்ச்சியில் அக்டோபர் முதல் அதிரடி மாற்றம்

'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, அண்ணா நுாலகத்தில், 'பொன்மாலைப் பொழுது' நிகழ்ச்சிக்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன.


இனி, சாதிக்க துாண்டும் மாணவர்கள், விஷமிகளின் பேச்சை கேட்காமல், சாதனையாளர்களின் உரையை கேட்கும் சூழல் உருவாகி உள்ளது.சென்னை, கோட்டூர் புரத்தில், அண்ணா நுாற்றாண்டு நுாலகம் உள்ளது. இங்கு, ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தது, நுாலகத்தின் கட்டமைப்பை மேம்படுத்தியது, நுாலகத்தின் செயல்பாடுகளை மாற்றியது என, பல்வேறு பணிகள், பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டன.


அதே நேரம், நுாலகத்தில் நல்ல நோக்கத்துடன் துவங்கப்பட்ட பொன்மாலைப் பொழுது என்ற நிகழ்ச்சி, சனிக்கிழமை தோறும் நடந்து வந்தது. ஓராண்டாக நடத்தப்பட்ட இந்த கருத்துரை நிகழ்ச்சியில், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, இந்நிகழ்ச்சிகளில் கருத்து பதிவு செய்தவர்களில் பலர், மத்திய - மாநில அரசுகளுக்கு எதிர்மறையான கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.


மேலும், அரசுகளின் செயல்பாடுகள், பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து, தவறான தகவல்களை, வாசகர்கள் மத்தியில் தெரிவித்துள்ளனர். சிலர், அரசை மறைமுகமாக எதிர்க்கும் அமைப்புகளின் பின்னணியில், விஷம கருத்துகளையும் தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து, உளவுத்துறை போலீஸ் மற்றும் வாசகர்கள் சிலர் சார்பில், அரசுக்கு புகார்கள்
தெரிவிக்கப்பட்டன.


இந்த பிரச்னை குறித்து, நமது நாளிதழில், செப்., 2ல் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் விசாரணை நடத்தினார். மேலும் பள்ளிக்கல்வி இயக்குனரும், நுாலக துறை இயக்குனருமான ராமேஸ்வர முருகன் மற்றும் அதிகாரிகள், நுாலக நிகழ்ச்சி குறித்து விசாரணை மேற்கொண்டனர். உளவுத்துறை மற்றும், 'கியூ பிராஞ்ச்' போலீசாரும் விசாரணை நடத்தினர்.


இதைத் தொடர்ந்து, பொன்மாலைப் பொழுது நிகழ்ச்சிக்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இனி, இலக்கிய, நாவல் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கட்டுரையாளர்கள் மட்டுமின்றி, கல்வி, சட்டம், மருத்துவம், தொழில்நுட்பம், நீதித்துறை என, பல்வேறு துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களை வரவழைத்து, வாசகர் நிகழ்ச்சியை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.


வரும், அக்., 6 முதல் புதிய விதிகளின் படி, கருத்துரையாளர்கள் பங்கேற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், பொன்மாலைப் பொழுது நிகழ்ச்சி, வெறும் பேச்சு மன்றமாக இல்லாமல் மாணவர்கள், இளைஞர் கள், போட்டித் தேர்வுக்கு தயாராவோருக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியாக இருக்கும் என, பள்ளிக்கல்வி மற்றும் நுாலக நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


- நமது நிருபர் -
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement