Advertisement

நெடுஞ்சாலை துறை அதிகாரிகளே... இது நியாயமா? மழை துவங்கும் நேரத்தில் அடையாற்றின் குறுக்கே பாலப்பணி




2brஅடையாறு ஆற்றின் குறுக்கே, அடுத்தடுத்து உள்ள இரண்டு நெடுஞ்சாலைகளில், பழைய பாலத்தை இடித்து, புதிய பாலம் கட்டும் பணியை, நெடுஞ் சாலைத் துறை துவங்கி உள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்க இன்னும், 41 நாட்களே உள்ள நிலையில், நெடுஞ்சாலைத் துறையின் இந்த நடவடிக்கை, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


ஆதனுாரில் துவங்கும் அடையாறு ஆறு, மண்ணிவாக்கம், வரதராஜபுரம், முடிச்சூர், திருநீர்மலை, அனகாபுத்துார், மணப்பாக்கம், கோட்டூர்புரம் வழியாக, பட்டினப்பாக்கம் அருகே கடலில்
கலக்கிறது.இதன் மொத்த நீளம், 42 கி.மீ.,யாகவும், அகலம், இடத்திற்கு ஏற்ப, 60 முதல், 200 அடியாகவும் வெவ்வேறு அளவில் உள்ளன.


கடுமையான ஆக்கிரமிப்பு, முறையான கட்டமைப்பு இல்லாததால், லேசான மழைக்கே, அடையாற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளம், அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்துவிடுகிறது. கடந்த, 2015 வெள்ளத்திற்கு முக்கிய காரணமாக, அடையாறு ஆறு இருந்தது. இந்த பாதிப்பின் எதிரொலியாக, மண்ணிவாக்கம், வரதராஜபுரம், அனகாபுத்துார் உள்ளிட்ட பகுதிகளில், அடையாற்றின் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.


நீரோட்டம் தடையின்றி செல்ல வசதியாக, ஆறு அகலப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அடையாறு ஆற்றை குறுக்கிட்டு செல்லும் நெடுஞ்சாலைகளில், தற்போதைய பாலத்தை இடித்து, புதிய பாலம் கட்டும் பணிகளை செய்ய, நெடுஞ்சாலைத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதற்காக, சில மாதங்களுக்கு முன்பே டெண்டர் விடப்பட்ட நிலையில், இவ்வளவு நாட்களாக பணிகளை துவங்காமல், பருவமழை துவங்க இன்னும், 41 நாட்களே உள்ள நிலையில், தற்போது
பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.


அதுவும், அடுத்தடுத்த நெடுஞ்சாலைகளில், ஆற்றின் உட்பகுதியில், தாழ்வாக மாற்றுப்பாதை அமைத்து, பழைய பாலத்தை இடித்துள்ளனர்.மணிமங்கலம் - முடிச்சூர் நெடுஞ்சாலையிலும், சோமங்கலம் - தாம்பரம் நெடுஞ்சாலையிலும், பழைய பாலத்தை இடித்து, புதிய பாலப் பணிக்கு, பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது.


இந்த இரண்டு சாலைகளும், ஒரு சாலைக்கு, மற்றொன்று மாற்று சாலையாக இருந்து வருகிறது. இரண்டு சாலைகளிலும், ஒரே நேரத்தில் பாலத்தை இடித்து, சாலையை துண்டித்திருப்பது, மழைக்காலத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தும்.


இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வெள்ள பாதிப்புகளை தடுக்க, 2017ல் அடையாறு ஆற்றில் உள்ள, சிறு பாலங்களை இடித்து, புதிதாக பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.முடிச்சூர் - மணிமங்கலம் நெடுஞ்சாலையில், வரதராஜபுரம் அருகே, 2.50 கோடி ரூபாய் செலவில், 192 அடி நீளம், 40 அடி அகலத்தில், புதிதாக பாலம் கட்டப்படுகிறது.
தாம்பரம் - சோமங்கலம் சாலையில், சமத்துவ பெரியார் நகர் அருகே, 3.26 கோடி ரூபாய் செலவில், 215 அடி நீளம்; 40 அடி அகலத்தில் பாலம் கட்டப்படுகிறது.


இந்த இரு இடங்களிலும், பணிகள் 80 சதவீதம் முடிந்த பின், பல்லாவரம் -- திருமுடிவாக்கம் சாலையில், திருநீர்மலை அருகே, 2.63 கோடி ரூபாய் மதிப்பில், பாலம் கட்டும் பணி துவங்கும்.
இந்த பணிகளின் ஒப்பந்த காலம், ஒன்பது மாதங்கள். ஆனால், வடகிழக்கு பருவமழைக்குள் பணி முடிக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்தாலும், 41 நாட்களுக்குள், இரண்டு சாலைகளிலும், நெடுஞ்சாலைத் துறை பாலப்பணியை முடித்தால், அது, 'கின்னஸ்' சாதனையாகவே இருக்கும் என, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


கனரக வாகனங்களால் தொல்லை!


புதிய பாலம் கட்டப்படும் பகுதிகளில், ஆற்றுக்குள் மாற்றுப்பாதை போடப்பட்டுள்ளது. இந்த பாதையில், பைக், கார், ஆட்டோ போன்ற இலகுரக வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும்.
கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என, அறிவிப்பு பலகையை, நெடுஞ்சாலைத் துறையினர் வைத்துள்ளனர். ஆனால், மலைப்பட்டு பகுதியில் இயங்கி வரும் குவாரிகளுக்கு செல்லும் டாரஸ் லாரிகள், டன் கணக்கில், மண் மற்றும் ஜல்லி, பாறைகளை ஏற்றிக் கொண்டு, இந்த வழித்தடத்தில் இயங்குகின்றன.


இதனால், மாற்றுப்பாதை சரியும் நிலைக்கு வந்து விட்டது. இலகுரக வாகன போக்குவரத்தும், இதனால் துண்டிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. போலீசார், கனரக வாகனங்களை, மண்ணிவாக்கம் வழியாக சுற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பருவமழை துவங்க உள்ள நிலையில், பாலம் கட்டும் பணிகள் துவங்கி இருக்கக் கூடாது. பொதுவாக, நெடுஞ்சாலைத் துறையினர் எந்தவொரு பணிகளையும், விரைந்து முடித்ததாக வரலாறே இல்லை. அனைத்திலும், கமிஷனை குறி வைத்தே செயல்படுவர். போர் கால அடிப்படையில், மழைக்கு முன் பணிகளை முடிக்கவிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒருவேளை, பணிகள் முடிக்கப்படாவிட்டால், முடிச்சூர், வரதராஜபுரம், மணிமங்கலம், பழைய பெருங்களத்துார் ஆகிய பகுதிகளில், சாலை முற்றிலும் துண்டிக்கப்படும்.

டி.தாமோதரன்


முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், முடிச்சூர்.


- -நமது நிருபர்- -

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement