Advertisement

குறுவை நெல்லை கொள்முதல் செய்வதில் தாமதம், அதிகாரிகள் அலட்சியத்தால் விவசாயிகள் கவலை

சேத்தியாத்தோப்பு: சேத்தியத்தோப்பு மற்றும் புதுச்சத்திரம் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லை கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த, பின்னலுார், அம்பாள்புரம், பிரசன்னராமாபுரம், மிராளூர், மஞ்சக்கொல்லை உள்ளிட்ட கிராமங்களில் 2000 ஏக்கருக்கும் மேல் குறுவை நெல் சாகுபடி செய்து அறுவடை நடந்து வருகிறது.

இந்த நெல்லை கொள்முதல் செய்ய பின்னலுாரில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக திடீரென பெய்யும் மழை காரணமாக நெல் நனைந்து வீணாகும் அபாயம் உள்ளது. விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு ஏக்கருக்கு ஒன்றுக்கு 15 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் அறுவடை செய்து கொண்டு வந்துள்ள நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து உழவர் மன்ற தலைவர் முருகேசன் கூறுகையில், 'தற்போது குறுவை 10 ஏக்கர் நான் பயிரிட்டு அறுவடை செய்து நெல்லை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளேன். ஆனால் அதிகாரிகள் அடுத்த மாதம் கொள்முதல் செய்வதாக கூறுகின்றனர். இதனால் இந்தாண்டு நான் குறுவைக்கு செய்த செலவு வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.

புதுச்சத்திரம்
ஆலப்பாக்கம், மேட்டுப்பாளையம், பெரியப்பட்டு, ஆணையாங்குப்பம், தானுார், பூண்டியாங்குப்பம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் குறுவை பயிரிட்டு அறுவடை செய்த நெல்லை, புதுச்சத்திரம் நேரடிநெல் கொள்முதல் நிலையத்தில் விற்க ஒரு மாதத்திற்கு முன் கொண்டு வந்துள்ளனர்.

ஆனால் கொள்முதல் நிலையத்தில் அரசு சார்பில் நெல் கொள்முதல் செய்ய சாக்கு தரப்படவில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் இப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலையங்களிலேயே குவித்து வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
இதுகுறித்து புதுச்சத்திரம் பில் கிளார்க்கிடம் விசாரித்தபோது, அரசு சார்பில் எங்களுக்கு இன்னும் நெல் கொள்முதல் செய்ய உத்தரவும், சாக்கும் வரவில்லை.

ஏற்கனவே, கொள்முதல் செய்த 575 நெல் மூட்டைகளைக்கூட குடோனுக்கு எடுத்துச்செல்ல லாரிகள் வரவில்லை என்றார். இதுகுறித்து விவசாயி ராமலிங்கம், 58; கூறுகையில் போர்வெல் மூலம் நான்கு ஏக்கர் நிலத்தில் ஏ.எஸ்.டி 16. நெல் ரகம் நடவு செய்து, அறுவடை செய்த நெல்லை ஒரு மாதத்திற்கு முன் புதுச்சத்திரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து வந்தேன். ஆனால், இங்கு நெல் கொள்முதல் செய்யாததால், கடந்த வாரம் பெய்த மழையில் நெல் நனைந்தது. பின்னர் காயவைத்து, விலைக்கு சாக்கு வாங்கி கட்டி அடுக்கி வைத்துள்ளேன். பண நஷ்டத்துடன், மனஉளைச்சல் ஏற்படுகிறது என தெரிவித்தார்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement