Advertisement

ரஜினி, 'விசிட்'டால் டில்லியில் பரபரப்பு

'ரஜினி டில்லி வந்திருக்கிறார்; பா.ஜ., தலைவர்களைச் சந்திக்கிறார்' என, டில்லியில் பரபரப்பாக பேசப்பட்டது. 'ஏற்கெனவே, ஆன்மிக அரசியல் என சொன்ன ரஜினி, இப்போது, பா.ஜ., தலைவர்களைச் சந்திக்கிறார்; இத்தனை நாள் உள்ளுக்குள்ளாகவே இருந்த விஷயம் இப்போது வெளியே வந்துவிட்டது' என, பேச ஆரம்பித்து விட்டனர். இதுகுறித்து விசாரித்தபோது, சினிமா ஷூட்டிங்கிற்காக, லடாக் செல்லும் வழியில், ரஜினி டில்லி வந்துள்ளது தெரிய வந்தது. இரவு வந்த ரஜினி, மறு நாள் காலையே, லடாக் புறப்பட்டு சென்றுவிட்டார் என கூறப்படுகிறது. 'எங்கள் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து தலைவர்களும் அதில் பிசியாக உள்ளனர்; எங்கள் தலைவர்களை அவர் சந்தித்தால், தமிழகத்தில் அவருக்கு பிரச்னை வரும்; அவரும் சந்திக்க மாட்டார்; தமிழக எதிர்க்கட்சிகள் கிளப்பிவிடும் பொய்கள் இவை' என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள். சமீபத்தில், மலையாள, 'சூப்பர் ஸ்டார்' மோகன்லால், பிரதமர் மோடியைச் சந்தித்தார். உடனே, 'அவர், பா.ஜ.,வில் சேரப் போகிறார்; திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில், காங்கிரசின் சசி தரூரை எதிர்த்து போடியிடுவார்' என பேசப்பட்டது. 'கேன்சர் தொடர்பான தன் அமைப்பு குறித்து, பிரதமரிடம் பேச வந்தார், மோகன்லால்; ஆனால், வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருந்த எதிர்க் கட்சியினர், இப்படி பொய் செய்திகளை பரப்புகின்றனர்' என, பா.ஜ.,வினர் வேதனைப்படுகின்றனர்.
குட்கா ரெய்டு: மோடி கண்காணிப்புசில மாதங்களுக்கு முன், குட்கா விவகாரத்தில், சி.பி.ஐ., 'ரெய்டு' நடத்தி அந்த விஷயம் ஓய்ந்திருந்தது. இப்போது மீண்டும், ரெய்டு ஆரம்பித்து விட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் என, தமிழக அரசியல் மற்றும் அதிகார வட்டாரங்களை ஆட்டிப் படைத்து விட்டது, சமீபத்திய, ரெய்டு. இந்த ரெய்டில் என்ன நடந்தது, என்ன கைப்பற்றப்பட்டது, யார் யாருக்கு தொடர்பு என அனத்து விபரங்களும் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது.வரும், 2019 லோக்சபா தேர்தலில் இந்த குட்கா விவகாரம் ஒரு முக்கிய பிரசாரமாக இருக்கும் என, பிரதமர் கருதுகிறாராம். அதனால் இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என, தனக்கு உடனே தெரிவிக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறாராம் பிரதமர். அதன்படி, ரெய்டு விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள், பிரதமருக்கு, அறிக்கை அனுப்பி வருகின்றனர். விரைவில் குட்கா விவகாரத்தில் தமிழகத்தில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கைது செய்யப்படுவர் என சொல்லப்படுகிறது. 'குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டுள்ளாரே... அவர் கைது செய்யப்படுவாரா?' எனக் கேட்டால், பதில் தர மறுக்கின்றனர், சி.பி.ஐ அதிகாரிகள். சில மாதங்களுக்கு முன், டில்லியில், பிரதமர் மோடியை சந்தித்தார், விஜயபாஸ்கர்; 'சுகாதாரத்துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது' என அமைச்சரை வாழ்த்தினார், மோடி. தெரிந்துவிட்டால், பா.ஜ., அமைச்சர்களையே தூக்கி அடித்துவிடுவார், மோடி; அப்படியிருக்கும் போது விஜயபாஸ்கரை விட்டு வைக்க மாட்டார் என, பா.ஜ., மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.ராஜிவ் கொலையாளிகள் விடுதலையா?தமிழகத்தில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி, ராஜிவ் கொலையாளிகள், ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என முடிவெடுத்தார். ஆனால், மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் சென்று, இதற்கு தடை உத்தரவை வாங்கியது.
பின், 'இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்திருப்பதால், மத்திய அரசின் அனுமதியில்லாமல் இவர்களை விடுதலை செய்ய முடியாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
விடுதலை செய்ய, மத்திய அரசிடம், தமிழக அரசு அனுமதி கேட்டது. 'முன்னாள் பிரதமரைக் கொன்றவர்களை விடுதலை செய்ய முடியாது' என, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து, வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம். பேரறிவாளனின் வழக்கறிஞர், 'நாங்கள் கவர்னரிடம் கருணை மனு அளித்துள்ளோம்' என சொல்ல, 'அது குறித்து கவர்னர் முடிவெடுக்கலாம்' என, நீதிபதிகள் கூறினர். ஆயுள் தண்டனை என்றால், இறக்கும் வரை சிறை என, 2015ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே தீர்ப்பில் தண்டனையைக் குறைக்கவோ விடுதலை செய்யவோ, குற்றவாளிகள், கவர்னருக்கு புதிதாக கருணை மனு அனுப்பலாம் என்றும் சொன்னது. இதையடுத்து பேரறிவாளன், 2015, டிசம்பரில் கவர்னருக்கு கருணை மனு அளித்தார். இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், முடிவெடுக்காமல் இருந்தார் கவர்னர். இப்போது வழக்கு முடிந்து விட்டதால் முடிவெடுக்கலாம்.தற்போது, இது தொடர்பாக தமிழக அமைச்சரவை கூடி, விடுதலை செய்யும்படியான சிபாரிசை, கவர்னருக்கு அனுப்ப உள்ளது. 'இதை, கவர்னர் ஏற்று விடுதலை செய்வாரா என்பது சந்தேகமே' என, விஷயம் அறிந்தவர்கள் சொல்கின்றனர். சி.பி.ஐ., விசாரித்த வழக்கு என்பதால், கவர்னர், இந்த விவகாரத்தை ஜனாதிபதிக்கு அனுப்ப வாய்ப்புள்ளது. ஜனாதிபதி இதை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்புவார். இவர்களை விடுதலை செய்யக்கூடாது என, உச்ச நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதால், தமிழக அமைச்சரவையின் சிபாரிசை, ஜனாதிபதி நிராகரிப்பார் என, கூறப்படுகிறது. 'இதை வைத்து, பா.ஜ., அரசை எதிர்த்து, தமிழக கட்சிகள் அரசியல் நடத்தும்; இதுதான் நடக்கப் போகிறது' என, டில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement