Advertisement

*தாலுகா அலுவலகங்களில் 9,000 மனுக்கள்...தேக்கம்! * சான்று கிடைக்காமல் மக்கள் தவிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட தாலுகா அலுவலகங்களில், 9,000 மனுக்கள் தேக்கமடைந்துள்ளன. ஜாதி, இருப்பிடம் உள்ளிட்ட சான்று கிடைக்காமல், பொதுமக்கள் தவிக்கின்றனர்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், உத்திர மேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்கன்றம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாகள் உள்ளன.


ஜாதி, வருமானம், இருப்பிடம், பிறப்பு, இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவை பெற, பொதுமக்கள் விண்ணப்பிக்கும் மனுக்களை, கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரைத்து, வருவாய் ஆய்வாளருக்கு அனுப்புவார்.


தாமதம்


இவர் மூலம் மற்ற அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, கடைசியாக, வட்டாட்சியர் சான்று வழங்குவார்.இந்த நடைமுறையில் சிக்கலும், கால தாமதமும் ஏற்பட்டதால், 2014ம் ஆண்டு முதல், ஜாதி, இருப்பிடம், வருமான சான்றுகள், கணினி மூலம் வழங்கப்படுகின்றன. பிற சான்றுகளும், ஏப்ரலில் இருந்து, கணினி வாயிலாகவே வழங்கப்படுகின்றன.


சில மாதங்களாக, கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்டாட்சியர்களிடம், ஜாதி, இருப்பிடம், வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்த மனுக்கள், விசாரணை நிலையிலேயே உள்ளது.இதனால், உடனடியாக சான்றிதழ்கள் கிடைக்காமல், கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


மூன்று மாதங்களில், மேற்கண்ட தாலுகாக்களில், ஜாதி, இருப்பிட சான்று கோரி, 12,372 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இதில், 6,690 மனுக்கள் மீது விசாரணை செய்து, சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. விசாரணை நிலையிலேயே, 5,682 மனுக்கள் உள்ளன.வாரிசு சான்றிதழ் கோரி கிடைத்த, 6,119 மனுக்களில், 3,075 மனுக்கள் நிலுவையில் உள்ளன. எஞ்சியவை வழங்கப்பட்டு விட்டன.


ஜாதி, இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள், ஏழு நாட்களிலும், வாரிசு சான்றிதழ், 15 நாளிலும் வழங்க வேண்டும்.ஆனால், இந்த நடைமுறைகள் மீறி, மாதக்கணக்கில், கிராம நிர்வாக அலுவலர்களிடமே, மனுக்கள் தேக்கமடைகின்றன.அவர்களுக்கு, 'கவனிக்க' வேண்டியதை கொடுத்தால் மட்டுமே, மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


கிடப்பில் உள்ள மனுக்களை விசாரித்து, சான்றிதழ்கள் விரைந்து வழங்க, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


நடவடிக்கை


இது குறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தோருக்கு, உரிய காலத்தில் சான்று வழங்கப்படுகிறது. போதிய ஆவணங்கள் இல்லாமல் விண்ணப்பித்தோருக்கு, நேரடி விசாரணை மேற்கொண்டு, சான்று வழங்க வேண்டி உள்ளதால், சில இடங்களில் காலதாமதம் ஏற்படுகிறது. இருப்பினும், விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


- நமது நிருபர் -
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement