Advertisement

மின்னணு கழிவு

நியூசிலாந்தில் குப்பையாகும் மின்னணு கருவிகளிலிருந்து பயனுள்ள உலோகங்களை பிரித்தெடுக்க, புதுமையான உயிரியல் முறையை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
கணினி, அலைபேசி போன்ற கருவிகள் பழையதானதும், அவற்றை சேகரிக்க சில அமைப்புகள் நியூசிலாந்தில் உள்ளன.
ஆனால், அவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் முறையாக மறுசுழற்சி செய்வதில்லை.
எனவே, 'மின்ட் இன்னோவேஷன்' என்ற ஆராய்ச்சி அமைப்பு, உயிரியல் தொழில்நுட்பத்தின் மூலம் மறுசுழற்சி முறையை உருவாக்கியுள்ளது.
சேகரிக்கப்படும் மின்னணு கழிவுகளை வேதியியல் திரவங்களில் கரைத்து, அந்த திரவங்களில் நுண்ணுயிரிகளைச் சேர்க்கிறது மின்ட். அந்தக் கரைசலில் இருக்கும் தங்கம், செம்பு போன்ற உலோகங்களை, நுண்ணுயிரிகள் உணவாக உண்கின்றன.
பிறகு, அந்த உலோகங்களை பிரித்தெடுத்துக் கொள்கிறது மின்ட்.
இன்றுள்ள மறுசுழற்சி முறைகள் நச்சு வாயுக்களை உமிழும் நிலையில், அதிக செலவும், சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லாமல் உலோகங்களை பிரித்தெடுக்க முடியும் என்கின்றனர், மின்ட் அதிகாரிகள்.
ஆக்லாந்திலுள்ள, 'ரிமார்க்கிட்' என்ற மின்னணு கழிவுகளை சேமிக்கும் நிறுவனத்துடன் மின்ட் இணைந்து, 2019ல் உயிரி மறுசுழற்சி ஆலையை துவங்க இருக்கிறது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement