Advertisement

 பாதாள சாக்கடை இணைப்பு வழங்க இலக்கு... தினமும் 50! 3 மாதத்திற்குள் பணி முடிக்க நகராட்சி முடிவு

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில், அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை இணைப்பு திட்டத்தில், தினமும் குறைந்தபட்சம், 50 வீடுகளுக்கு இணைப்பு வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இப்பணிகள் மூன்று மாதத்திற்குள் நிறைவடையும் என, நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.திருவள்ளூர் நகராட்சியின், 27 வார்டுகளில் வீடு, கடைகள் என, 8,618
கட்டடங்கள் உள்ளன. இக்கட்டடங்களில் இருந்து, தினமும், 50 லட்சம் லிட்டர் கழிவுநீர்
வெளியேற்றப்படுகிறது.இந்த கழிவுநீரை அகற்ற, 54.79 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடை திட்டம், 2008ம் ஆண்டு துவங்கி, கடந்த ஆண்டு நிறைவு பெற்றுள்ளது.

சுத்திகரிப்பு மையம்ஒன்று முதல், 27 வார்டுகளில், பாதாள சாக்கடை திட்ட பணிகள் முழு அளவில் நிறைவு பெற்றன.வீடுகளில் சேகரமாகும் கழிவு நீர், குழாய் மூலம் பத்மாவதி நகர், ஈக்காடு மற்றும் திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் உள்ள, கழிவு நீரகற்று நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.பின் இந்த கழிவுநீர், குழாய் மூலமாக, புட்லுாரில் கட்டப்பட்டு உள்ள சுத்தகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.அங்கு கழிவுநீரை
சுத்திகரிப்பு செய்து, புட்லுார் ஏரி வழியாக, கூவம் ஆற்றில் விடப்படுகிறது.

இந்த சுத்திகரிப்பு மையத்தில், தினமும், 60 லட்சம் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்ய முடியும்.1,200 இணைப்பு திருவள்ளூர் நகரில் தற்போது, 1,200 பேருக்கு மட்டுமே, பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. நகராட்சி ஊழியர்கள்,தினமும் வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும்,இணைப்பு பெற ஆர்வம் காட்டாமல், பொதுமக்கள் அலட்சியமாக உள்ளனர்.இதனால், கழிவு நீர் தெருக்களில் விடப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கொசு உற்பத்தியாகி, நோய் பரவி வருகிது.இதையடுத்து, நகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை திட்ட இணைப்பு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டு, இணைப்பு வழங்க தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது.இவர்கள், வீடுகள் தோறும் சென்று, பாதாள சாக்கடை இணைப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கி வருகின்றனர்.மேலும், நகராட்சி அலுவலகத்திலும், ஒருவர் நியமிக்கப்பட்டு, பாதாள சாக்கடை இணைப்பிற்கு விண்ணப்பம் வழங்கி வருகிறார்.விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நகராட்சி அலுவலகத்திலோ அல்லது வீடு தேடி வரும் ஒப்பந்ததாரரிடமோ வழங்கினால், உடனடியாக இணைப்பு வழங்கப்படும்.

அதற்கான கட்டணத்தை இணைப்பு பெற்றவர்கள் தவணை முறையில் செலுத்தலாம்.
அதன்படி, தினமும், 50 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க நகராட்சி இலக்கு
நிர்ணயித்துள்ளது.இன்னும் மூன்று மாதத்திற்குள் இப்பணி நிறைவடையும்; அதன் பின், நகராட்சி பகுதி, கழிவுநீர் இல்லாத பகுதியாக மாறும் என, நகராட்சி ஆணையர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.


தவணை முறையில் பணம் செலுத்தலாம்

பொதுமக்கள், எவ்வித கட்டணமும் இல்லாமல், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம். ஒப்பந்ததாரர்கள் இணைப்பு வழங்கிய பின், அதற்கான கட்டணம் அவர்களது வீட்டு வரி இனத்தில் சேர்க்கப்படும். அதன் பின், வீட்டு உரிமையாளர்கள் தவணை முறையில் செலுத்தலாம். மூன்று மாதத்திற்குள் இப்பணி நிறைவேற்றப்படும். இதையும் மீறி, கழிவு நீரை அனுமதியின்றி சாலையிலோ, பாதாள சாக்கடையிலோ வெளியேற்றினால், 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.நகராட்சி அலுவலர் ஒருவர்
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement