Advertisement

சமணர் கோவிலின் விலை மதிப்பற்ற சிலைகளுக்கு...அச்சுறுத்தல்! தொல்லியல் துறை அலட்சியமாக இருப்பதாக புகார்

காஞ்சிபுரம்:சமணர்களின் அடையாளமாக தற்போதும் திகழும், திருப்பருத்திக்குன்றம் திரைலோக்கியநாதர் சமண சுவாமி கோவிலில் உள்ள தொன்மை வாய்ந்த சிலைகள், பாதுகாப்பு இன்றி இருப்பதால், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என, அதை நிர்வகிக்கும், தொல்லியல் துறைக்கு கோரிக்கை எழுந்துள்ளது.


தொன்மை வாய்ந்த காஞ்சிபுரம் நகரம், சிவ, விஷ்ணு, சமண வழிபாடுகளை கொண்டிருந்தது.
இன்றும் வழிபாடுகள், அந்த கோவில்களில் விசேஷமாக நடைபெற்று வருகின்றன. சிவ, விஷ்ணு கோவில்கள் காஞ்சிபுரத்தில் அதிகமுள்ள நிலையில், சமண மத கோவில்கள் குறைந்த அளவிலேயே உள்ளன.


ஜீன காஞ்சி என்றழைக்கப்படும், திருப்பருத்திக்குன்றம் கிராமத்தில், சமணர் தலமான திரைலோக்கியநாதர் ஜீன சுவாமி கோவில் உள்ளது.


சிலைகள் மாயம்


சமணர்களின் அடையாளமாக அமைந்துள்ள இக்கோவில், 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.தமிழ்நாடு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது. சமணர்கள் பலர் தற்போதும், இக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர். மிக பழமையானதும், வரலாற்று சிறப்புமிக்க இக்கோவில், தற்போது பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, கோவிலில் உள்ள விலை மதிப்பற்ற சிலைகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, சமண மதத்தினர்
பலரும் புகார் தெரிவிக்கின்றனர்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே, கோவில் சிலைகள் பல மாயமாகி வருகின்றன. அவ்வாறு உள்ள நிலையில், மிக தொன்மையானதாக கருதப்படும் சமண அடையாளங்களில் ஒன்றான, திருப்பருத்திகுன்றம் கோவில் சிலைகள் மாயமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், திருவாச்சி, ஸ்கந்தர் சிலை, இரட்டை திருமாளிகை மண்டப துாண்கள் மாயமாகி உள்ளன.


மர்ம நபர்கள் கைவரிசை


ஏலேலா சிங்க விநாயகர் கோவிலின் விநாயகர் சிலை, 2015ல் மாயமானது; இதுவரை அச்சிலை கண்டுபிடிக்கப்படவில்லை.அதே ஆண்டு, உத்திரமேரூர் திணையாம்பூண்டி கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலின் உற்சவர் சிலைகளான திரவுபதி மற்றும் அர்ச்சுனன் சிலைகளை மர்ம கும்பல் திருடிச் சென்றது. பிறகு, போலீசாரின் கடும் முயற்சியால், அச்சிலைகள் மீட்கப்பட்டன.


அதே ஆண்டு அக்டோபரில், மாகரல் கிராமத்திலிருக்கும், கவுசலாம்பிகை சமேத திருமலை கோவிலில், கோவிலின் கருவறையில் இருந்த, ஐம்பொன்னால் செய்யப்பட்ட, 2 அடி உயரமுள்ள பெருமாள் மற்றும் தாயார் உற்சவ சிலைகள் மாயமாகின.தொடர்ந்து கோவில் சிலைகள் மாயமாகி வரும் சூழலில், இந்தாண்டு மார்ச் மாதம், குமரகோட்டம் கோவிலில், 7.5 கிலோ எடையுள்ள, கச்சியப்ப சிவாச்சாரியார் வெண்கல சிலை மாயமானது. இது தொடர்பாக, அர்ச்சகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


கோவிலில் சிலைகள் மாயமாவது தொடர்வதால், பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். கடத்தப்படும் சிலைகள், சர்வதேச சந்தையில், கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. கோவில் சிலைகளுக்கு தகுந்த பாதுகாப்பு வேண்டும் என, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை வலுத்து வருகிறது.


கேமரா இல்லை


இந்த சமணர் கோவிலின் மூலஸ்தானத்தில், பல நுாறு ஆண்டுகள் பழமையான சமண மதத்தின், 10க்கும் மேற்பட்ட உற்சவர் சிலைகள் உள்ளன. அவை பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக, காஞ்சிபுரத்தை சேர்ந்த, நீலகேசி என்பவர் புகார் தெரிவித்து வருகிறார்.அதாவது, கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள், காவலாளிகள் கூட இல்லாத அவல நிலை காணப்படுகிறது.
இக்கோவிலில் சிலைகள் மாயமாகும் அச்சுறுத்தல் இருப்பதாக, அவர் தெரிவிக்கிறார்.


சிலை கடத்தல்


கும்பலின் அடுத்த இலக்காக, இக்கோவில் மாறுவதற்கு முன், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை, தமிழ்நாடு தொல்லியல் துறை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.எனவே, இந்த கோவிலுக்கு, 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு தேவை. மேலும், கோவிலை சுற்றிலும், உட்புறங்களிலும், இரவிலும் கண்காணிக்க கூடிய, சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவேண்டும்.கோவிலுக்கு வருபவர்கள், சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட
வேண்டும்.


கோவிலின் புராதன சின்னங்களுக்கு பாதுகாப்பை, வருவாய் மற்றும் போலீஸ் துறையின் உயரதிகாரிகள், மாதம் ஒரு முறை உறுதி செய்ய வேண்டும் என, சமண மதத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement