Advertisement

பழவேற்காட்டில் கடற்கரை மணல் கொள்ளை அட்டூழியம்! கடத்தல்காரர்கள், 'கவனிப்பால்' அதிகாரிகள் அசட்டை

பொன்னேரி : ஆறு, ஏரிகளை தொடர்ந்து, பழவேற்காடு கடற்கரை மணலும் கடத்தப்படுகிறது. அரசு அதிகாரிகளின் துணையோடு, கடத்தல்காரர்கள் ஈடுபடுவதால், மீனவ கிராமங்கள் கடல் நீரில் மூழ்கும் அபாயம் உருவாகி வருகிறது.


திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு செம்பாசிபள்ளி முதல், காட்டுப்பள்ளி வரையுள்ள, 15 மீனவ கிராமங்கள், வங்க கடல் பகுதியில் அமைந்துள்ளன. கடலுக்கும், மீனவ கிராமங்களுக்கும் இடையே உள்ள கடற்கரை பகுதியில் மணல், ஒரு தடுப்பு அணையாகவும், கடல் நீர் உள்புகாத வகையிலும் இயற்கையாக அமைந்து, மீனவ மக்களை காத்து வருகிறது.


70 டாரஸ் லாரி:

இந்நிலையில், பழவேற்காடு முகத்துவாரம், பழைய சாட்டன்குப்பம், காட்டுப்பள்ளி, காளஞ்சி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில், மணல் கடத்தப்படுகிறது. பொக்லைன் இயந்திரங்கள் வைத்து தினமும், 50 முதல், 70 டாரஸ் லாரிகளில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு, கடற்கரை மணல் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு லாரி மணல் லோடு, 1.50 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.


வருவாய் மற்றும் காவல் துறையினரை முறையாக, 'கவனித்து' மணல் கடத்தல்காரர்கள், கடற்கரை பகுதிகளை சூறையாடி வருகின்றனர்.


தெனாவட்டு பேச்சு:

தட்டி கேட்கும் கிராம மக்களிடம், 'எங்கு வேண்டுமானாலும் புகார் செய்து கொள்ளுங்கள், ஒன்றும் செய்ய முடியாது. 'கட்டிங்' கொடுத்து விட்டு தான் மணல் அள்ளுகிறோம்' என, கடத்தல்காரர்கள் தெனாவட்டாக பேசுகின்றனர். தற்போது, மாவட்டத்தின் எந்த பகுதியிலும் மணல் குவாரி இல்லாததால், கடல் மணல் கடத்தப்படுகிறது.


அபாய நிலை :

மணல் விற்பனையாளர்கள் கடல் மணலை, ஆற்று மணல் எனக்கூறி, வீடு கட்டுவோரிடம் ஏமாற்றி விற்பனை செய்கின்றனர். சிலர், கடல் மணலுடன் ஆற்று மணலை கலந்து, பெரிய கட்டுமான நிறுவனங்களிடம் தருகின்றனர்.ஆறு, ஏரிகளை தொடர்ந்து, தற்போது கடல் மணலும் கடத்தப்படுவதால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


பழவேற்காடு கடற்கரை பகுதிகளில் நடைபெறும் மணல் கடத்தலை தடுக்காவிட்டால், 'சுனாமி' போன்ற பேரலைகளின் போது, மீனவ கிராமங்கள் கடல் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். கடற்கரை மணல் கடத்தலை தடுக்க, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தகவல் தெரிவிக்க வேண்டுமாம்
சட்டவிரோதமான மணல் கொள்ளையை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மணல் கொள்ளை குறித்து பொதுமக்கள் வாகனங்களின் எண்ணுடன் தகவல் தெரிவித்தால், வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட கனிம வளத் துறை அதிகாரி
திருவள்ளூர்


கட்டடம் உறுதியாக இருக்காது
மணல் விற்பனையாளர்கள் கொண்டு
வரும் கடற்கரை மணலை, கொஞ்சம் வாயில் போட்டு
பார்க்க வேண்டும். உப்பு கரித்தால் நிச்சயம்
அது கடல் மணல். இதை பயன்படுத்தி
சுவர்கள் கட்டினால், ஈரமாகவே இருக்கும்.
சிமென்டுடன் ஒட்டாது.
இதனால், சிமென்ட் பூச்சுகள் சீக்கிரம்
உதிர்ந்துவிடும். மழை பெய்தால்,
சுவர்கள் அரித்து விடும். கட்டடங்களின்
உறுதி தன்மையும் கேள்விக்குறி தான்.
எஸ்.காயத்ரி
தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர்,
பொன்னேரி


அதிகாரிகள் அலட்சியம்
காவல் மற்றும் வருவாய் துறையினருக்கு
தெரிந்தே, கடற்கரை மணல் கடத்தப்படுகிறது.
கிராமங்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ள
கடற்கரை மணல் தொடர்ந்து அள்ளப்பட்டால்,
சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களின் போது
பெரிதும் பாதிப்பு ஏற்படும். கடல் நீர் எளிதாக,
மீனவ கிராமங்களுக்குள் புகுந்து
அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சமூக ஆர்வலர்கள்
பழவேற்காடு
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement