Advertisement

நீலமங்கலம் நரிக்குறவர் காலனியின் அவலம்; மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்குமா?

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் நரிக்குறவர்கள் காலனியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கிராமப்பகுதியில் அரசு சார்பில் நரிக்குறவர் காலனியில் 52 குடியிருப்புகள் உள்ளன. கடந்த 1980ம் ஆண்டு இரண்டரை ஏக்கர் நிலத்தில் கட்டித்தரப்பட்ட சிறு குடில்களில், 150க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 350க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். மொத்தம் 240 வாக்காளர்கள் கொண்ட இந்த குடியிருப்பு பகுதயில் வசிப்பவர்களின் குழந்தைகளுக்காக, அதே பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியும் இயங்கி வருகிறது.
கடந்த 38 ஆண்டுகளுக்கும் மேலாகி உள்ள குடியிருப்புகள் அனைத்தும் பழுதடைந்து, எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. இந்த குடியிருப்புகளில் இடநெருக்கடியால், ஒரே வீட்டில் மூன்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் பாதுகாப்பற்ற சூழலில், பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.
இங்குள்ள கிணறு வற்றிப்போன நிலையில், இரண்டு போர்வெல்கள் மூலமாக தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இவர்களுக்கு கழிப்பிட வசதியோ, வடிகால் வசதியோ ஏற்படுத்தி தரப்படவில்லை. இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள காலி இடங்களை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இங்கிருந்து வெளியேறும் சாக்கடை நீர் அனைத்தும் காலனியின் ஒரு பகுதியில் குளம்போல் தேங்கியுள்ளது.
இப்பகுதி கொசுக்களின் உற்பத்தி கூடாரமாக மாறியதுடன், குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
மேலும், இக்காலனியை சுற்றிலும் வசிக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் நரிக்குறவர் இன மக்களின் நலனில் அக்கறை செலுத்தி, அவர்களுக்கு கழிப்பிட வசதியும், வடிகால் வசதியையும் உடனடியாக ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கடனுதவி தேவை
நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் எங்களது, மணி கட்டும் தொழிலுக்கான அரசு
கடனுதவி வழங்கிட வேண்டும். எங்களுக்கு அரசின் திட்டங்கள் அனைத்தும் நேரடியாக கிடைத்திட வழிவகை
செய்திட வேண்டும். அதிகாரிகள்
எங்களையும் கொஞ்சம் திரும்பி பார்த்து, நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.
பரிமளா


சீரமைக்கப்படுமா?
அரசு மூலமாக 40 ஆண்டுகளுக்கு முன் குடியிருப்புகள் கட்டி தந்தனர். ஆனால் அது மிகவும் பழுதாகி, வசிக்க
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்லையம்மாள்


நாடோடி வாழ்க்கை
நீலமங்கலம் நரிக்குறவர் காலனியில், சிறு குடில்போன்ற வீடுகளில், மூன்று தலைமுறை குடும்பங்கள் தவித்து வருகிறோம். மழைக்காலங்களில் மொத்த குடும்பமும் எங்கே செல்வது எனத் தெரியவில்லை. வீடுகள் இருந்தும் நாங்கள் நாடோடிகளாகவே வசிக்கிறோம். எங்களின் பரிதாப நிலையை மாற்றிட அதிகாரிகள் முன் வர வேண்டும்.
கீதா

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement