Advertisement

போ லீ ஸ் டை ரி

வாலிபர் மர்ம மரணம்
சென்னை, கன்னிகாபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரபு, 31. கூவத்துார் அடுத்த, தட்டாம்பட்டில் உள்ள, மாமியார் வீட்டிற்கு வந்த இவர், நேற்று முன்தினம் மாலை, சென்னை செல்ல, அரசுப் பேருந்தில் புறப்பட்டார்.
இரவு, 9:30 மணிக்கு, கல்பாக்கம் அடுத்த, பெருமாள்சேரி, பக்கிங்ஹாம் கால்வாய் தரைப்பாலத்தில், மர்மமாக இறந்து கிடந்தார். சதுரங்கப்பட்டினம் போலீசார், அவரது இறப்பு பற்றி விசாரிக்கின்றனர்.
வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியைச் சேர்ந்தோர், உதய்குமார், 32, சஞ்சய்குமார், 30; சிற்பிகள். உதயகுமாரின் மனைவி, அவரிடமிருந்து பிரிந்து, பெற்றோர் வீட்டில் வசித்து, விவாகரத்திற்கு முயல்வதாக கூறப்படுகிறது.
மனைவி பிரிவிற்கு, சஞ்சய்குமாரே காரணம் என கருதி ஆத்திரமடைந்த உதயகுமார், கடந்த, 14ல், சஞ்சய்குமார் வயிற்றில், கத்தியால் குத்தினார். அவர், செங்கல்பட்டு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மாமல்லபுரம் போலீசார், உதய்குமாரை கைது செய்து, அவருக்கு உடந்தையாக இருந்ததாக, மற்றொருவரை தேடுகின்றனர்.
வீடு புகுந்து திருட்டு
செங்கல்பட்டு அடுத்த, புலிக்குட்டிவனம் கிராமத்தைச் சேர்ந்த டில்லிபாபுவும், 45, அவரது மனைவியும் வேலை சம்பந்தமாக வெளியே சென்று, மாலை வீடு திரும்பினர். கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த, 5 சவரன் நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடு போனதாக, டில்லிபாபு புகாரை, செங்கல்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
துாக்கிட்டு வாலிபர் தற்கொலை
செங்கல்பட்டு, சின்னமேலமையூரைச் சேர்ந்த குப்புசாமி மகன் குமார், 24. நேற்று முன்தினம் இரவு, குடி போதையில் வந்தவர், வீட்டில், மின் விசிறியில் துாக்கிட்டு, மயங்கிய நிலையில் இருந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி
திருச்சி அடுத்த, துவாக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் விக்னேஷ், 24. நேற்று முன்தினம் இரவு, ராக்போர்ட் விரைவு ரயிலில், திருச்சி சென்றார். மதுராந்தகம் ரயில் நிலையம் அருகே, ரயிலில் இருந்து தவறி விழுந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல், 25. திருவிழாவிற்காக, அச்சிறுப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு, நேற்று முன்தினம் வந்தார். இரவு, கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பந்தல் அருகே கிடந்த, இரும்புக் கம்பியை தொட்டதாகத் தெரிகிறது. அதில் இருந்த மின்சாரம் பாய்ந்து, வெற்றிவேல் இறந்தார்.
விபத்தில் முதியவர் பலி
தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற முதியவர், இருசக்கர வாகனம் மோதியதில் இறந்தார்.
சென்னை அடுத்த, மணலி பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 70. பழைய இரும்பு கடை நடத்தி வந்தார். நேற்று, கவரைப்பேட்டை அடுத்த, பெருவாயல் பகுதியில், சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை நடந்தபடி கடக்க முயன்றார்.
அப்போது, புதுவாயலில் இருந்து, கவரைப்பேட்டை நோக்கி சென்ற இருசக்கர வாகனம் ஒன்று, ஏழுமலை மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் ஒருவர் பலி
கும்மிடிப்பூண்டி அருகே, சென்னாவரம் கிராமத்தில் வசித்தவர் பாபு மகன் குமார், 26. நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் சுண்ணாம்புக்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
செங்கல் சூளைமேடு அருகே சென்றபோது எதிரே அடுத்தடுத்து வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள், குமார் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் குமார் இறந்தார். வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மிரட்டி பணம் பறித்தவர் கைது
ஊத்துக்கோட்டை அடுத்த, சிறுவனம்புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர், 42. நேற்று காலை, ஊத்துக்கோட்டையில் இருந்து வீட்டிற்கு, ஆட்டோவில் திரும்பினார்.
அப்போது, சத்தியவேடு சாலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர், ஆட்டோவை நிறுத்தி, அதில் இருந்த பன்னீரிடம் தகராறு செய்தார். மேலும், அவரிடமிருந்து, 300 ரூபாயை
பறித்தார். அந்த நபரை சுற்றி வளைத்த பொதுமக்கள், ஊத்துக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை விசாரித்ததில், பெருங்களத்துாரரைச் சேர்ந்த கார்த்திக், 26 என்பது தெரிய வந்தது. வழக்குப் பதிந்து போலீசார், கார்த்திக்கை கைது
செய்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement