Advertisement

போலீஸ் டைரி

எட்டு கடைகளின் பூட்டு உடைப்பு
சாஸ்திரி நகர், 1வது அவென்யூவில், டிஜிட்டல் பிரின்ட், டெய்லர் கடை, ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்ளிட்ட, எட்டு கடைகள் வரிசையாக உள்ளன. நேற்று காலை, எட்டு கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தன. இதில், இரண்டு மடிக்கணினி, பிரின்டிங் பொருட்கள், 20 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன. சாஸ்திரி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தலைமறைவு ரவுடி கைது
வியாசர்பாடியைச் சேர்ந்தவன், அரி, 41. இவன் மீது புளியந்தோப்பு, வியாசர்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில், பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. கொலை வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவான அரியை, போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று, வியாசர்பாடியில் பதுங்கியிருந்த அரியை, கைது செய்த போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.
நகை திருடிய பெண் கைது
கொடுங்கையூரைச் சேர்ந்தவர், சேகர், 39. இவரது வீட்டில், அதே பகுதியைச் சேர்ந்த சத்யபிரியா, 35, என்பவர், வேலை செய்து வருகிறார். நேற்று காலை, சேகரின் வீட்டில், 4 சவரன் நகை திருடு போனது. கொடுங்கையூர் போலீசார் விசாரணையில், சத்யபிரியா திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.
தகராறில் இருவருக்கு கத்திக்குத்து
கிண்டி, மடுவாங்கரையைச் சேர்ந்தவர், ஏழுமலை, 50. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர், பாலசுப்ரமணியம், 52. நேற்று காலை, ஏழுமலையின் மகளை, பாலசுப்ரமணியம் ஒருமையில் பேசி உள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில்
ஆத்திரமடைந்த ஏழுமலை, பாலசுப்ரமணியனை கத்தியால் குத்தினார்.
பின், அதே கத்தியால், ஏழுமலை வயிற்றில், பாலசுப்ரமணியன் குத்தி உள்ளார். பலத்த காயமடைந்த இருவரும், ராயப்பேட்டை மருத்துவ
மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணிடம் நகை பறிப்பு
ஆவடி அடுத்த வீராபுரத்தைச் சேர்ந்தவர், கீதா, 44. நேற்று மதியம், 3:30 மணியளவில், வீராபுரத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், கீதாவின், 2 சவரன் செயினை பறித்து சென்றனர்.
ஆவடி டேங்க் பேக்டரி போலீசார்
விசாரிக்கின்றனர்.
கார் கண்ணாடியை உடைத்த இருவர் கைது
பல்லாவரத்தைச் சேர்ந்தவர், சிலம்பரசன், 27. நேற்று முன்தினம் இரவு, வீட்டிற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது கார் கண்ணாடியை, மர்மநபர்கள் மூவர், உடைத்து சேதப்படுத்தினர். இது குறித்து விசாரித்த பல்லாவரம் போலீசார், திரிசூலத்தை சேர்ந்த மகேஷ், 26, ஆனந்த், 22, ஆகியோரை, நேற்று காலை கைது செய்தனர். மேலும், 17 வயது சிறுவனை, அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
பெண்ணிடம் மொபைல் பறிப்பு
மயிலாப்பூரைச் சேர்ந்தவர், பவித்ரா, 21; நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, பி.எஸ்.சிவசாமி சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், அவரது மொபைல் போனை பறித்து தப்பினர்.
மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement