Advertisement

போலீஸ் டைரி,,

விபத்தில் காயமடைந்தவர் பலி


மாமல்லபுரம் அடுத்த, காரணையைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துராமன், 43. சிற்பி. கடந்த, 14ம் தேதி இரவு, மாமல்லபுரத்திலிருந்து காரணைக்கு, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மாமல்லபுரம், அரசு மருத்துவமனை அருகே, வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்து, படுகாயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக, சென்னை, ராஜிவ் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று காலை இறந்தார். இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


அரசு பேருந்து மோதி வாலிபர் பலி

திருச்சி, லால்குடியைச் சேர்ந்தவர் பிரசாந்த், 18; வண்டலுாரில் தங்கி, தனியார் உணவகத்தில், காசாளராக பணிபுரிந்தார். வண்டலுாரிலிருந்து கூடுவாஞ்சேரிக்கு, 'ஹீரோ ஹோண்டா' நிறுவன, இருசக்கர வாகனத்தில், நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, உணவக மேலாளர், ஆல்வாய் எடிசன் உடன் சென்றார். கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் அருகே, பின்னால் வந்த அரசு பேருந்து மோதி, சம்பவ இடத்திலேயே பிரசாந்த் இறந்தார். ஆல்வாய் எடிசன் லேசான காயங்களுடன் தப்பினார்.


சாலை விபத்தில் தம்பதி பலி

மீஞ்சூர், பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ஷாஜகான், 70; ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர். நேற்று, தன் மனைவி கோரிமா, 68, உடன் சென்னையிலிருந்து வீட்டிற்கு, இருசக்கர வாகனத்தில் சென்றார். திருவொற்றியூர் - மீஞ்சூர் நெடுஞ்சாலை, கொண்டக்கரை அருகே, நிலை தடுமாறிய இரு சக்கர வாகனத்தை, சாலையோரம் நிறுத்தியிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம் மோதினார். இதில், பலத்த காயமடைந்த தம்பதியை, மீஞ்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஷாஜகான் இறந்தார். மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோரிமாவும், சிகிச்சை பலனின்றி இறந்தார்.


கஞ்சா விற்ற ஐவர் கைது

செங்கல்பட்டு அடுத்த, ஆப்பூர் கிராமத்தில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, கஞ்சா விற்பனை செய்த, இளங்கோ, 32, பாரத், 24, ஆகியோரை பிடித்தனர். அவர்களிடமிருந்து, 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பாலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த இருவரையும் கைது செய்ததனர்.

ஸ்ரீபெரும்புதுார் அருகே போந்துார், சுடுகாட்டு பகுதியில் கஞ்சா விற்பதை அறிந்த, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் நேற்று, மாறுவேடத்தில் அங்கு சென்றனர். அப்போது, கஞ்சா விற்ற, போந்துாரைச் சேர்ந்த வேல்முருகன், 34, பக்தவத்சலம் நகரை சேர்ந்த சீனு, 24, கச்சிபட்டு பகுதி சேட்டு, 36, ஆகிய மூவரை மடக்கி பிடித்தனர். இவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து, மூவரையும் சிறையில் அடைத்தனர்.


கல்லுாரி மாணவி மாயம்:

செங்கல்பட்டு ராகவனார் தெருவைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகள் சரஸ்வதி, 19; தனியார் கலைக் கல்லுாரியில் படித்து வந்தார். 16ம் தேதி, வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றார்; அதன் பின், வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, செங்கல்பட்டு நகர போலீசில், நடராஜன் அளித்த புகாரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement