Advertisement

ராஜமாணிக்கத்துடன் கைகோர்ப்போம்,


ராஜமாணிக்கத்துடன் கைகோர்ப்போம்,
கேரளா மக்களுக்கு உதவுவோம்...


கேரளாவில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.

கனமழை வெள்ளத்திற்கு இதுவரை 38 பேர் பலியாகி உள்ளனர். 6 பேர் மாயமாகி உள்ளனர். வயநாடு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் ரூ.8316 கோடி என முதல்கட்டமாக கணக்கிடப்பட்டுள்ளது. சுமார் 20,000 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. 10,000 கி.மீ., தூரத்திற்கு சாலைகள் பழுதடைந்துள்ளன.

இப்படி கடவுளின் தேசம் மழை தேசமாகி எங்கும் தண்ணீராகவும் ஏழை எளிய மக்களின் கண்ணீராலும் நிரம்பிக்கிடக்கிறது..

சேத புள்ளி விவரங்களும் இழப்பீடு கணக்குகளும் இப்போது தேவையில்லை உடனடியாக களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்ட உதவிகளை செய்யவேண்டும் என்று கேரளா மாநிலத்தில் தற்போது உணவு பாதுகாப்பு துறை ஆணையராக இருக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி முடிவு செய்தார்.

இவர் ‛அன்போடு கொச்சின்' என்ற அமைப்பை துவங்கி அதன் மூலம் ஏாரளமாக இளைஞர்களின் துணையோடு ஏரி குளங்களை துார் வாரி அங்குள்ள மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.

‛என்டகுளம் எர்ணகுளம்' என்ற அமைப்பை துவங்கி அங்குள்ள இளைஞர்களின் துணையோடு விடுமுறை நாட்களில் இவர் சுத்தப்படுத்திய குளங்கள் ஏாராளம் ஏாராளம்.

இதன் காரணமாக இவர் அழைத்ததும் மைதானத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உடலுழைப்பை கொடுக்க குவிந்தனர், அதே போல இவர் கேட்டபடி புதுப்போர்வைகள் துணி மணிகள் பாத்திரங்கள் படுக்க பாய் அடுப்பு அரிசி பருப்பு போன்ற அவசிய தேவைகளை பொதுமக்கள் கொண்டுவந்து குவித்தனர்.

படிக்கட்டு தரை என்ற கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு தனக்கு தெரிந்தவர்களிடம் அனைவரிடமும் உணவு மறந்து உறக்கம் துறந்து பேசிப்பேசியே மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பொருட்களை சேகரித்தார். ஒரே இரவில் நான்கு லாரிகளில் கொண்டு போகுமளவிற்கு பொருட்கள் சேர்ந்தது.

இந்தப் பொருட்கள் அனைத்தும் அதிகம் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதி மக்களிடம் கொண்டு போய் உடனடியாக சேர்க்கவேண்டும் என்று முடிவு செய்தார்.அதே இரவில் வயநாடு பகுதிக்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக இவரே பேக்கிங் செய்த பெட்டிகளை முதுகிலும் தோளிலும் சுமந்தபடி லாரிகளில் ஏற்றினார்.

இதைப் பார்த்த இளைஞர்கள் இன்னும் வேகமாக செயல்பட சில மணி நேரத்தில் லாரிகளில் பொருட்கள் ஏற்றப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரியின் தலைமையில் பொருட்கள் வயநாடு பகுதிக்கு போய்க்கொண்டு இருக்கிறது நீங்கள் இந்த செய்தியை படிக்கும் நேரத்தில் பொருட்கள் அநேகமாக விநியோகம் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கலாம்.

இ்ன்னும் இன்னும் நிறைய அரிசி பருப்பு பாத்திரங்கள் தேவைப்படுகிறது என்று இவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் இருந்து குறிப்பாக மதுரையில் இருந்து நிறைய உதவிகள் போய்க்கொண்டு இருக்கிறது. மதுரையில் உள்ள சமூக ஆர்வலர் மணிகண்டன் மட்டுமே ஐயாயிரம் ரூபாய்க்கான செருப்புகளை வாங்கி அனுப்பியுள்ளார்.

இப்படி நிறைய மதுரைக்காரர்கள் இந்த ஐஏஎஸ் அதிகாரியின் அன்பு வேண்டுகோளுக்கு கட்டுப்படுகிறார்கள் என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.

கேரளா மக்கள் கொண்டாடும் அந்த ஐஏஎஸ் அதிகாரியின் பெயர் எம்.ஜி.ராஜமாணிக்கம்.மதுரை மாவட்டம் மேலுார் வட்டம் திருவாதவூரைச் சார்ந்த எளிய குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை குருசாமி மீனாட்சி அம்மன் கோவிலின் ஊழியராக இருந்தவர்.இப்போது அவர் இல்லை.

தந்தையின் நினைவாக அவர் படித்த திருதாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தரத்தை உயர்த்த தனது வருமானத்தின் பெரும்பகுதியை ராஜமாணிக்கம் செலவழித்து வருகிறார்.

கடந்த மாதம் கூட இருபத்தைந்து லட்ச ரூபாய் செலவழித்து ஒரு தொழில்அதிபர் உதவியுடன் இந்தப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ், கோச்சிங் சென்டர், நுாலகம் உள்ளீட்ட வசதிகளை செய்து கொடுத்தார்.

சில நாட்களுக்கு முன்பாக ஹைதராபாத்தில் இருந்து கேரளாவிற்கு கொண்டுவரப்பட்ட பார்மலின் பூசப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள மீன்களை தடுத்து திருப்பி அனுப்பியதன் மூலம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டவர்.

இத்தனை புகழுக்கும் பெருமைக்கும் சொந்தக்காரரான ராஜமாணிக்கம்தான் தற்போது வயநாடு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பயணம் மேற்கொண்டுள்ளார்.

நீங்களும் இவரது வேண்டுகோளை ஏற்று கேரளாவில் பாதிக்கப்பட்ட நம் சகோதர சகோதரிகளுக்கு உதவ நினைக்கிறீர்களா? அப்படியானால் மதுரையில் உள்ள அவரது நண்பர் மணிகண்டனை தொடர்பு கொள்ளுங்கள் அவரது எண்:9244317137.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • nicolethomson - bengalooru,இந்தியா

    சார் தப்பா நினைக்காதீங்க, உங்களை போன்றோரால் தான் நல்லது நடக்குது, ஆனா கேரளா அதன் உண்மையான முகத்தை காட்டும் பாருங்க, ஒக்கி புயலின் போதும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது , இப்போ முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க வழிசெய்கின்றனர், ஆனா அப்பாவி தமிழர்களோ?

  • Bhaskaran - Chennai,இந்தியா

    சென்னையில் நிவாரணமய்யம் விலாசம் தரவும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement